பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதே இந்தப் படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திக்கிறது. நடித்தோமா சம்பாதித்தோமா என்றில்லாமல் இவருக்குள் இருக்கும் கலை ஆர்வம் இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.
கதை இதுதான்…
திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜும் அவரது நண்பர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன் கட்டப்பஞ்சாயத்தும் அவர்களை முக்கியஸ்தர்களாக ஆக்கி இருக்கிறது.
ஏரியாவில் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இவர்களது அத்து மீறிய காரியங்களால் நிறைய வழக்குகளும் இவர்கள் மீது உள்ளன. ஆனாலும் அதிகார மையத்தைக் கையில் வைத்திருப்பதால் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அதே ஊரில் இரண்டு இளைஞர்கள் பணத்துக்காக ஒரு கொலையைச் செய்கின்றனர். இந்தக் கொலைக்கும் ஜோஜு ஜார்க்கும் சம்பந்தம் உள்ளதா? இது அவரது வாழ்வை எப்படி பாதித்தது என்பதை அதிரி புதிரி ஆக்ஷனில் கொடுத்திருக்கிறார் ஜோஜு.
ஜோஜு ஜார்ஜ் நடிப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அவர் இயக்குனராக வென்றாரா என்பதுதான் இந்தப் படத்தின் முக்கிய கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதிலில் டிக் அடித்து விடலாம்.
அவரே ஹீரோ என்பதால் அற்புதமாக நடித்திருப்பதோடு அடுத்தவர்களுடைய நடிப்பிலும் நேர்த்தியை வரவழைத்திருப்பது அவரைச் சிறந்த இயக்குனராகவும் ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறது. அத்துடன் நடிப்பில் மட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளிலும் கவனம் செலுத்தி நம்மை ஈடுபாட்டுடன் பயணிக்க வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு ஆக்ஷன் கதையில் அவருக்கும் அபிநயாவுக்குமான காதல் எபிசோடும் சிறப்பாக வந்திருப்பது பாராட்டுக்குரியது. அபிநயா பாத்திரம் தரும் திருப்பம் படத்தின் பலங்களுள் ஒன்று.
வில்லன் வேடத்தில் வரும் இரண்டு இளைஞர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் தான் ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகின்றனர்.
படத்தின் முதல் பாதி இடைவேளை வரை பரபரவென்று கதையை நகர்த்துகிறது. அதற்குப் பின் சற்றே மெதுவே நகர்ந்தாலும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது மீண்டும் தீப் பற்றிக்கொள்கிறது.
இசையும், ஒளிப்பதிவும் இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன கிளைமாக்ஸில் வரும் கார் சேஸிங் அதில் ஹைலைட்
படத்தைப் பார்த்துவிட்டு வந்து யோசித்துப் பார்த்தால் நிறைய லாஜிக்குகள் இடிப்பது தெரியும். ஆனால் படம் பார்க்கும்போது அவற்றையெல்லாம் யோசிக்க விடாமல் நம்மை எங்கேஜிங்காக வைத்திருப்பதே படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.
அதுவே ஜோஜு ஜார்ஜை இயக்குனராகவும் அங்கீகரிக்க வைத்திருக்கிறது.
சிறப்பான ‘பணி..!’
– வேணுஜி