சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார்.
சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில் என்ன படிப்பினை இருக்கிறது..?
அந்த வகையில் எல்லா பெயரும், புகழும், பணமும் கொண்டிருந்தாலும் சாருகேசிக்கு இருக்கும் மிகப்பெரிய குறை அவரது ஒரே மகன்.
அப்பாவின் புகழ் தன்னைக் கட்டிப் போட்டு விடக்கூடாது – தான் சுயத்தில் வாழ வேண்டும் என்கிற கொள்கையுடைய மகன் அப்பாவுக்கு எதிரியாகவே நிற்கிறான்.
எல்லா புகழையும் அடைந்தும் மகனுக்காக எல்லா அவமானங்களையும் ஒரு பக்கம் அடைந்து கொண்டிருக்கும் சாருகேசிக்கு மிகப்பெரிய இடியாக… கச்சேரிக்கு பாட வந்த பெண்ணையே மகன் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்க… உடைந்தே போகிறார் சாருகேசி.
இருந்தாலும் மகனின் விருப்பத்துக்காக மருமகளை சொந்த மகள் போலவே பாவித்து வந்தாலும் அவருக்கும் அவர் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசியத்தை வைத்து அவர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறாள் மருமகளும்.
வாழ்க்கையின் சுமைகள் இவ்வளவு அழுத்த… சாருகேசி ஒரு கட்டத்தில் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்.
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தனவா..? மகனும் மருமகளும் சாருகேசியை புரிந்து கொண்டார்களா..? இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருந்து சாருகேசி புரிந்து கொண்டது என்ன..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சாருகேசியாக ஒய் ஜி மகேந்திரா. அவரது மனைவியாக சுகாசினி மணிரத்தினம். மகனாக ராஜ் ஐயப்பன். மருமகளாக ரம்யா பாண்டியன். இந்த நால்வருடன் ஐந்தாவது பாத்திரமாக தலைவாசல் விஜய்.
இவர்களுக்குள் ஏற்படும் ரசாபாசங்களும் ரசவாதங்களும்தான் படத்தின் உயிர் நாடி.
‘வெங்கட்’டின் கதையில் பலமுறை மேடை ஏறிய இந்த நாடகம் அதில் நாயகனாக நடித்த ஒய் ஜி மகேந்திராவை வைத்தே இந்தத் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இயக்கியிருப்பவர் நம்ம பாட்ஷா புகழ் ‘சுரேஷ் கிருஷ்ணா’தான்.
தானே மேடையில் நடித்த பாத்திரம் திரைப்படத்திலும் கிடைத்தால் சும்மா விடுவாரா ஒய் ஜி மகேந்திரா..? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே இப்படிப்பட்ட பாத்திரங்களில் பரிமளிக்க முடியும் என்பதை தானும் புரிந்து கொண்டு அதில் எந்த அளவுக்கு செம்மையாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறார் ஒய்.ஜி.எம்.
ஞானச் செருக்கு ஒருபுறமும் மகனால் உருவாகும் பிரச்சனைகளின் ஆற்றாமை இன்னொரு முகமாக இரண்டு முகங்களில் அற்புதமாக நடித்து சாருகேசியாகவே வாழ்ந்திருக்கிறார் அவர்.
மகன் மீதான பாசம் ஒரு புறம்… ஆனால் அந்த மகனால் கணவனுக்கு நேரும் இன்னல்கள் மறுபுறம் என்கிற நிலையில் ஒரு குடும்பத்தின் நடுவராக இருப்பது எத்தனை கஷ்டம் என்பதை தனது நடிப்பின் மூலம் உணர்த்திருக்கிறார் சுகாசினி.
ராஜ் ஐயப்பன் மற்றும் ரம்யா பாண்டியனின் ஜோடி அம்சமாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒய் ஜி மகேந்திராவை எதிரியாக நினைத்து அவருக்கு எதிராகவே செயல்படுவது கண்டிப்பாக ரசிக்கும்படி இல்லை.
கடவுளே இல்லை என்கிற சத்யராஜை தேவ அம்சமாக சித்தரித்து இருக்கும் லந்து ரசிக்க வைக்கிறது. சத்யராஜ் பேசும் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் உணர வைக்கிறது.
இவர்களுடன் சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற வேடங்களில் வருபவர்கள் திரைக்கதையின் முழுமைக்கு உதவி இருக்கிறார்கள்.
இது மேடை நாடகத்தில் இரந்து உருவாக்கப்பட்டதுதான் என்பதை ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல் நன்றாகவே உணர வைத்திருக்கிறார். ஆடாத அசையாத கேமராவுக்கு. பட்ஜெட்டும் ஒரு காரணம் என்பது புரிகிறது.
கானா தேவா, என்று பெயர் எடுத்த இசையமைப்பாளர், இதில் தேவ கானங்களை மீட்டி நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார். கானாவோ, கர்நாடகமோ எல்லாமே எனக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதாக இசைத்திருக்கிறார் தேவா.
பா.விஜய்யின் பாடல்களும், வசனமும் படத்தின் முதுகெலும்பு.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா, தன்னால் பாட்ஷா போன்ற ஒரு படத்தையும் எடுக்க முடியும் அதேபோல் இந்த சாருகேசி போன்று விருதுகளுக்கு தகுதியான படங்களையும் இயக்க முடியும் என்று இந்த படத்தின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
அந்த வகையில் சாருகேசிக்கு பல விருதுகள் காத்திருக்கின்றன.
சாருகேசி – வாழ்வை யோசி..!
– வேணுஜி