December 26, 2024
  • December 26, 2024
Breaking News
December 11, 2024

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

By 0 52 Views

“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா. 

இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி வருகிறது. ஆனால் அது ஒரு முறை அல்ல – படம் முடிவதற்குள் நான்கு முறை வெடிக்கிறது… வேறு வேறு இடங்களில்…

(போதாக்குறைக்கு இன்னும் இரண்டு துப்பாக்கிகளும் வெடிக்கின்றன…)

ஒரே துப்பாக்கி எப்படி நான்கு இடங்களில் வெடிக்கிறது என்பதுதான் திரைக்கதையின் ஹைப்பர் லிங்க் சுவாரஸ்யம்.

துப்பாக்கி வெடிக்கும் நான்கு இடங்களிலும் நான்கு வெவ்வேறு கதைகள். ஆனால் அவை ஒவ்வொன்றும் நாம் கண்ட… கேட்ட… படித்த… நடைமுறையில் காண்கிற நிஜ வடிவங்களில் அடிப்படையில் அமைந்திருப்பது படத்தின் சிறப்பு. இதற்காகவே அறிமுகப்பட இயக்குனர் பிரசாத் முருகனைப் பாராட்டலாம். 

பழங்கள் பொறுக்க வந்த குடிசைப் பகுதி சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அவ்வளவு எளிதாக மறந்திருக்காது. அங்கே ஆரம்பிக்கிறது கதை…

அதற்குப் பயன்பட்ட துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் கூவத்தில் போட்டு விடுகிறார் அந்தக் கொலையாளி. அதை ஒரு கை எடுக்க, நான்கு இடங்களில் அதே துப்பாக்கி பயணப்பட்டு ( நான்கு பேரின்) கதையை முடிக்கிறது.

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கும் தூய்மைப் பணியில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் திருநங்கை மகளை மருத்துவராக்கப் போராடும் அபிராமி கையில் கிடைக்கும் துப்பாக்கி, பின்னர் உயிருக்குள் உயிரான காதல் மனைவியின் உயிர் காக்க ஒரே நாளில் பெரும்பணம் தேவைப்படும் ஆட்டோ டிரைவர் பரத் கைக்குப் பயணப்பட்டு,  சிறந்த குடும்பம் என்று மருமகளாகி சிந்து சமவெளிக்குள் தள்ளப்பட்ட அஞ்சலி நாயர் கைக்குப் போய், சாதி வெறியால் கொல்வதே சாதனை என்று நினைக்கும் பெரிய (?) மனிதர் தலைவாசல் விஜய் கையிலும் கிடைக்கிறது

நான்குமே சிறுகதைகளாக விரிகின்றன. 

“நான்கில் ஒன்றா… வாய்ப்பே இல்லை..!” என்றெல்லாம் பிகு பண்ணாமல் 1/4 கதையில் நாயகனாக ஒத்துக் கொண்ட பரத்தின் பங்களிப்பு பாராட்ட வைக்கிறது. இருந்தும் படம் முடியும்போது அவரே நாயகனாக மனத்தில் நிலைக்கிறார் என்பது சிறப்பு.

ஒரு தூய்மைப் பணியாளராக வரும் அபிராமியின் பங்களிப்பும் அபாரம். (ஆனால் வீட்டிலாவது அவருக்கு வேறு உடை கொடுத்திருக்கலாம்.)

அவரது திருநங்கை மகளாக வரும் கீச்சாவும் கூட நெகிழ வைக்கிறார். திருநங்கைகள் எங்கே போனாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள் என்பதான தொனி, கொஞ்சம் ஓவர்தான்.

அஞ்சலி நாயரின் புகுந்த வீடு கலாச்சார சீர்கேட்டின் அடையாளம். அந்தக் குடும்பமே அந்த சீர் கேட்டுக்கு உதவுகிறார்கள் என்பது நம்பும்படி இல்லை. 

சாதிப் பெருமையைக் காக்கத்தான் பத்திரிகை நடத்துகிறேன் என்கிற தலைவாசல் விஜய், சாதிக்காக ஒரு இலைஞனைக் கொல்லவே துணிந்து விட்டபின், அது ஆள் மாறாட்டம் என்பதை அறிந்து துடிப்பதும் சறுக்கல்.

கௌரி லங்கேஷை நினைவு படுத்தும் வேடத்தில் வரும் கனிகா, ஈசலாகத் தோன்றிச் சாகிறார். 

ஒரு வித்தியாசமான லைன் கிடைத்தும் அதை நம்பகமான முறையில் படமாக்காமல் விட்டதில் படம் நிறைவைத் தராமல் போகிறது.

சமூகக் கோபம் கொண்டவனின் கையில் ஒரு துப்பாக்கி கிடைத்தால் அவன் கொலையாளியாக மாறும் சாத்தியம் இருக்கிறது என்பதற்காக அப்படி கிடைப்பவர்கள் எல்லோருமே கொலையாளிகளாகி விடுவார்கள் என்பதை ஏற்பதற்கு இல்லை.

துப்பாக்கியைக் கையில் ஏந்தி சுடுவதற்கும் ஒரு பயிற்சி வேண்டும்.

படத்தின் ஆகப்பெரிய ஆறுதல் வசனங்களும், பாடல்களும். இரண்டிலும் பங்களிப்பு ஜெகன் கவிராஜ். சமுதாயத்தின் அனைத்து பக்கங்களிலும் பயணப்பட்டு (உரையாடல்களில்) சம்பந்தப்பட்டவர்களை ரைட், லெஃப்ட் என்று வாங்கியிருக்கிறார் ஜெகன். பாடல்களிலும் அந்த அக்கறை மேலோங்கி இருக்கிறது. ஒரு வேடத்தில் நடித்தும் இருக்கிறார். கோலிவுட்டில் சிறப்பான எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.

கே.எஸ். காளிதாஸ் & கண்ணா ஆர் இரட்டையர்களின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு பங்கமில்லாமல் பயணிக்கிறது. ஜோஸ் பிராங்க்ளினின் இசையும் அவ்வண்ணமே.

துப்பாக்கியை மறைக்க நினைத்து அதை செல்லூர் ராஜு கணக்காக தெர்மோ கோலில் வைத்து கூவத்தில் போடுவது, இங்கிருக்கும் விருகம்பாக்கத்துக்குச் செல்ல காரில் திண்டிவனம், உளுந்தூர்ப் பேட்டை தூரத்துக்கு  பயணிப்பது போன்ற திருத்தாமல் விட்ட குறைகளுக்கு ‘இது சினிமா தானே..?’ என்கிற மெத்தனம்தான் காரணமாக இருக்கக்கூடும்.

ஒரு நல்ல படத்தை வெற்றி படமாக்குவது எப்படி என்கிற சூத்திரத்தை இந்தத் தவறுகள் இனி கற்றுக் கொடுக்கும்.

ஆனாலும், ஒவ்வொரு கதையிலும் முகம் தெரிந்த நடிகர் நடிகைகளைப் பயன்படுத்தி இருக்கும் புத்திசாலித்தனம் படத்தை லாப திசைக்கு கொண்டு செல்லும்.

முயற்சிக்குப் பாராட்டுகள் – தேவை பயிற்சி மட்டுமே..!

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் – ஒன்ஸ் பார்க்கலாம் – கண்டிப்பாக..!