October 18, 2024
  • October 18, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • நீல நிறச் சூரியன் திரைப்பட விமர்சனம்

நீல நிறச் சூரியன் திரைப்பட விமர்சனம்

By on October 6, 2024 0 33 Views

பழக்கமாக தமிழ் பட தலைப்புகளில் ஒற்றெழுத்துக்களை விட்டு விடுவார்கள் – தெரிந்து அல்லது தெரியாமல்… ஆனால் இந்தப் பட தலைப்பில் நீல நிற’ச் ‘ சூரியன் என்று ஒற்றெழுத்தை விட்டு விடாமல் எழுதியதற்கே முதலில் பாராட்டி, விமர்சனத்தைத் தொடரலாம்.

மனித இனத்தில் மூன்றாம் பாலினம் என்ற உணர்வை மருத்துவ ரீதியாகப் புரிந்து கொண்டு அதை ஒத்துக்கொள்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படி ஊனமுற்றவர்கள் என்ற சொல்லை நாகரிக உலகம் மாற்றி சிறப்புத் திறனுள்ளோர் என்று அழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதைப் போல, ஒரு பாலினத்தில் பிறந்து உணர்வு ரீதியாக இன்னொரு பாலினத்துக்கு மாறுவோரை நாகரிகமற்ற உலகம் நகைச்சுவையாகவும் கேலியாகவும் பார்த்த நிலையை மாற்றி இன்றைக்கு மூன்றாம் பாலினமாக ஒத்துக் கொண்டது. 

இருந்தாலும் அப்படி உணர்வுடையவர்களின் வாழ்க்கை அத்தனை இலகுவாக இருப்பதில்லை. சினிமாவுக்குள் காதலை ஆராதிக்கும் யாரும் தங்கள் வீட்டு குழந்தைகள் காதலில் விழுந்தால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை அதே போல் தான் வெளியில் மூன்றாம் பாலினத்தவரை மரியாதை நடத்தினாலும் தங்கள் குடும்பத்துக்குள் அப்படி ஒருவர் பிறந்து விட்டால் அந்த உணர்வை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வது பெரும் சவாலாக இருக்கிறது.

அந்த வலியை வேதனையை ஒரு சில படங்கள் இதற்கு முன் சொல்லி வந்திருக்கின்றன. அவற்றுள் சர்வதேச தரத்தில் மிகவும் நாகரிகமாகவும், செய்தி படமாக இல்லாமல் சுவாரஸ்யம் கொன்றாத முழு நீள படமாகவும் வந்திருக்கும் முதல் படம் இதுதான்.

ஆணாகப் பிறந்து பெண்ணின் உணர்வில் வாழ்ந்து முழுமையான பெண்ணாக மாறிய ஒருவரின் கதையை ஒரு ஆணோ, பெண்ணோ உணர்ந்து எழுதுவதை விட அப்படி மாறிய ஒரு பெண்ணே எழுதினால் எப்படி இருக்கும் என்பதற்கான அற்புத உதாரணம் இந்த படத்தின் கதை. 

அந்தப் பிரச்சினையை தன் உடலிலேயே அணு அணுவாக உணர்ந்து சமுதாயத்தின் கேலிப் பார்வைகளில் எதிர்நீச்சல் இட்டு இன்றைய உலகில் உச்ச நிலைக்கு வந்து வாழ்ந்து காட்டி இருக்கும் சம்யுக்தா விஜயனே இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் அந்த முதன்மை வேடத்தில் தானே நடித்தும் இருக்கிறார். இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல முடியும். 

கிட்டத்தட்ட சமியுக்தாவின் உண்மை கதை தான் இது. உடல் ரீதியாக வேற்று பாலின உணர்வை கொண்டாலும் அறிவுபூர்வமாக எந்த குறையும் வைக்காமல் பள்ளியில் முதலிடம் பெற்று அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியை தொடர்ந்து அந்தப் பணியிலேயே தன்னை ஆசிரியர் என்கிற இடத்திலிருந்து ஆசிரியை யாக மாற்றிக்கொள்ள சம்யுக்தா எதிர்கொண்ட போராட்டம்தான் இந்த படம்.

பெண்ணாக மனதளவில் வாழ்ந்தாலும் உடல் ரீதியாக பெண்ணாக மாறுவதற்காக ஹார்மோன் மருந்துகளை உட்கொண்டு தன் குரலில் இருந்து உடல் ரீதியாக பெண்ணுக்கான மாற்றங்கள் வந்துவிட்டனவா என்று தன் தனிமையில் எல்லாம் தன்னை சோதித்துக் கொள்ளும் கண்ணிலையே வேறு ஒருவர் கற்பனை செய்திருக்க முடியாதுதான்.

தன் குரல் பெண்ணுடையதாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ள முதல் காட்சியிலேயே ஒரு வங்கியின் சேவை மையத்தை அணுக, “சொல்லுங்க சார்… உங்களுக்கு நான் எவ்வாறு உதவ முடியும்..?” என்று அதை எதிர்கொள்ளும் பெண் கேட்க அங்கே நொறுங்கிப் போவதிலிருந்து படம் தொடங்குகிறது. 

மார்பகம் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர குப்புற படுத்தால் நெஞ்சு வலிப்பதாக டாக்டரிடம் சொல்லி அதற்கான விளக்கத்தை பெறுவதில் இருந்து கண்ணாடி முன்னால் உடைகளை கழற்றி நின்று அந்த மார்பகம் பெண்ணுக்குரியதாக வளர்ந்திருக்கிறதா என்று சோதித்துக் கொள்வது வரை அணு அணுவாக ஆணிலிருந்து பெண் என்கிற ‘பால் மாற்ற’ விதிகளைப் பால் மாறாமல் கொடுத்திருக்கிறார் சம்யுக்தா.

வெளியில் ஆணாக திரிந்தாலும், மனதுக்குள் ஒரு பெண்ணாக தன்னுடன் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியரை உணர்வு பூர்வமாக காதலிப்பதை ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து பார்க்கும் பார்வையிலேயே உணர்த்தி விடுவதும், தன்மீது இன்னொரு ஆசிரியரின் கைச்சியாகப்பட்டு விட ஒரு பெண்ணாக சிலிர்த்து எழுவதிலும் சமயுக்தாவின் நடிப்பும் சம்திங் கிரேட்..!

இன்னொருவர் இதையெல்லாம் புரிந்து கொண்டு நடிப்பது என்பது நிச்சயமான இயலாத காரியம்தான். தனக்கு வலித்ததை,  தான் உணர்ந்ததை, தன் உலகத்தைப் பொதுவில் வைப்பதற்கு சம்யுக்தா பயன்படுத்தி இருக்கும் இந்த சமகால யுக்தி உலக அளவில் பாராட்டப்பட வேண்டிய அரிய முயற்சி. 

இதுவரை திருநங்கைகளின் கதைகளை சொன்ன படங்களிலிருந்து இது வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆணாக இருந்த ஒருவர் பெண்ணாக மாறுவதற்குத் தேவையான அறுவை சிகிச்சை, 

மருத்துவ உலகம் இவர்களைப் புரிந்து கொண்டு, தெளிவான ஆலோசனைகளை கூறி வருவதையும், அரசு ஊழியர்களும் இவர்களை மதித்து நடப்பதையும் கவனமாக பதிவு செய்திருக்கிறார் சம்யுக்தா. ஆனாலும் அரசு விதிகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை அவர் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 

அதில் ஒன்று பெண் உணர்வுடன் பெண்ணாக மாறிய ஒருவரை ஏன் திருநங்கை என்று கூறி  மூன்றாம் பாலினம் ஆக்க வேண்டும்..? அவர்களைப் பெண் என்றே குறிப்பிடலாமே.?” என்பது சம்யுக்தா இந்த சமூகத்தின் முன் வைக்கும் முக்கியமான கேள்வி. 

இதுவரை இந்த அதி முக்கிய கேள்வியை எந்த திருநங்கைகளோ திருநங்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரோ கேட்டதாக நமக்குத் தெரிந்து பதிவு இல்லை

அந்த வகையில் திருநங்கைகளின் அடுத்த கட்ட நகர்வு இதுவாகத்தான் இருக்க முடியும்.