மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது.
அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என்.
ஆனால், அதையும் இன்றைய டிரெண்டிங் நிலையிலேயே ‘ பிக்பாஸ்” பாணியில் சொல்லி இருப்பதுதான் இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம்.
காதல் மணம் புரிந்த கலையரசனும், பிரியாலயாவும் யூடியூபில் தங்கள் சொந்தப் பெயரிலேயே தொடங்கிய அர்ஜுன்மீரா என்ற சேனலில் வீடியோக்களைப் போட்டு அதை டிரெண்ட் ஆக்கி நிறைய சம்பாதித்து வருகின்றனர்.
அதை வைத்து ஏகப்பட்ட கடன்கள் வாங்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். ஆனால், எதிர்பாராமல் அவர்களின் யூடியூப் சேனல் முடக்கப்பட, கடன் கட்ட வேண்டிய பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அனாமதேய போன் கால் ஒன்று ஒரு வினோத விளையாட்டுக்கு அவர்களை அழைக்கிறது.
அதில் ஏகப்பட்ட டாஸ்க்குகள் இருக்க, ஒவ்வொன்றையும் வெற்றிகரமாக முடிக்க முடிக்க லட்சங்களில் பணம் சம்பாதிக்க வழி இருக்கிறது. கடனை அழைக்க வேறு வழி இல்லாத நிலையில் இருவரும் அதற்கு ஒத்துக்கொண்டு படும் பாடுகள்தான் கதை.
கலையரசன் கரியரில் இது முக்கியமான படம். அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மனைவி மீது இருந்த காதல் குறையாத நிலையில், டாஸ்க்குகள் பெருகப் பெருக, அதில் பிரியாலயா முன்னிலை வகிக்கும் போதெல்லாம் பொறாமைப்படுவதில் ஆணாதிக்கம் மிகுவதை நன்றாக வெளிப்படுத்துகிறார்.
பிரியாலயா அத்தனை அழகு. சினிமாவுக்காகவே செய்யப்பட்ட ஏஐ உருவம் போல முகமும், உடலும் அமையப்பெற்ற அற்புதமான ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இருக்கிறது அவருக்கு. திட்டமிட்டு முன்னேறினால் முன்னிலை ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வரலாம்.
முழுப் படத்தையும் இவர்கள் இதுவரை ஆக்கிரமிக்க சில காட்சிகளை மட்டும் இவர்களது தோழர்களும் தோழிகளும் வந்து போகிறார்கள்.
அத்துடன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் பிரேம் வருகிறார். அவருடைய அனுபவ நடிப்பு அசத்தலாக இருக்கிறது.
இந்த இருவர் மட்டுமே ஒரு வீட்டுக்குள் இயங்கும் கதையாக அமைக்கப்பட்டிருந்தாலும் முன் பாதியில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ நமக்கு ஏற்படவில்லை. அத்தனை அற்புத நகர்த்தலாகச் செல்கிறது திரைக்கதை.
இரண்டாம் பாதியில் மட்டுமே கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது.
இந்த விஞ்ஞான யுகத்தில் ஆன்லைனில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதை அறிந்தும் கூட கலையரசனும் பிரியாலயாவும் பணத்துக்காக இப்படிப்பட்ட வினோத போட்டியில் ஒத்துக் கொள்வது நம்பகமில்லாமல் இருக்கிறது.
இதைப் போன்ற போட்டிகளில் கலந்து கண்டு உயிரை விட்டவர்கள் பற்றி இவர்களுக்குத் தெரியாதா என்ன..?
இதுதான் படத்தில் மேஜரான லாஜிக் குறை. அதிலும் இரண்டாவது பாதியில் தங்கள் காரை விற்று கடனை அடைத்து விட்ட சூழலில் மீண்டும் அந்த போட்டியில் அவர்கள் கலந்து கொள்ள நினைப்பது வடிகட்டிய முட்டாள்தனம். கதையை தேவையில்லாமல் இழுப்பதற்காக மட்டுமே இந்த உத்தி பயன்பட்டு இருக்கிறது.
ஆனால், படத்தின் வசனங்கள் அத்தனை அற்புதமாக மனித மனங்களைப் படித்து எழுதப் பட்டிருக்கிறது. ஓரிடத்தில் கலையரசன், “டாஸ்க்கை லைஃப் ஆக எடுத்துக்காதே.. !” என்பதன் பதிலாக பிரியாலயா சொல்லும், “நீயும் லைஃபை டாஸ்க்கா எடுத்துக்காதே..!” என்ற பதில் ஹை லைட்..
‘ காதலின் மகத்துவமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது’ என்பதைத்தான் இதுவரை எல்லா இலக்கியங்களும் சொல்லி வந்திருக்கின்றன. ஆனால் இதில்தான் முதல் முறையாக உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் என்கிறது.
யோசித்துப் பார்த்தால் அது உண்மை என்றே புரிகிறது.
பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும் நாகூர் ராமச்சந்திரனின் எடிட்டிங்கும் பின்னிப் பிணைந்து ஒரு நேர்த்தியான படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தந்திருக்கின்றன.
வழக்கமாக மிரட்ட மட்டுமே செய்யும் சாம் சி எஸ், இதில் உணர்வுகளுக்கு தக்கவாறும் இசைத்திருப்பது ஆகப்பெரிய ஆறுதல்.
ட்ரெண்டிங் – ஏமாற்றாதே… ஏமாறாதே..!
– வேணுஜி