சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு வாழ்த்து சொல்லலாம்.
அது மட்டுமல்லாமல் அந்தத் தலைப்புக்குள் ஒரு காதல் கதையையும், அனைவரும் பின்பற்றக் கூடிய ஒரு சமுதாயக் கருத்தையும் சொல்லி கடைசியில் நெகிழவும் வைத்திருக்கிறார். என்ன ஒன்று, இந்தக் கதையைப் பெரிய நடிகர், நடிகைகளை வைத்துப் பின்னியிருந்தால் படமும் பின்னியிருக்கும்.
சென்னைக் கல்லூரியிலிருந்து என்எஸ்எஸ் சேவை புரிய நாயகன் விவேக்ராஜ் வசிக்கும் கிராமத்துக்கு வருகிறார் நாயகி மோனிகா சின்னகோட்லா. அங்கே வியவேக்ராஜின் சமூக அக்கறையைப் பார்த்துக் காதல் வந்துவிடுகிறது. மீண்டும் ஊருக்குத் திரும்பும் போது நாயகனிடம் சொல்லிக்கொண்டு வர முடியாத சூழலில் பிரிந்து விடுகிறார்கள்.
அவளைத்தேடி சென்னைக்கு நாயகன் வர, இருவரின் தொடர்புகளும் அறுபட்டுவிட, அருகருகே இருந்தும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகிறது. கடைசியில் சந்தித்தார்களா என்பதில் இயக்குனர் ஒரு எதிர்பாராத முடிவைச்சொல்லி மனத்தைக் கனக்க வைத்துவிடுகிறார்.
நாயகன் விவேக்ராஜ் வேறு சில படங்களில் நடித்திருந்தாலும் அவை இதைவிடச் சின்னப்படங்களாக இருக்க, இந்தப்படத்தை அவரது முதல் படமாகவே சொல்லலாம். அதே நிலைதான் நாயகி மோனிகாவுக்கும். இருவரின் ஜோடி பளிச்சென்று இருப்பதே படத்தைத் தொடர்ந்து பார்க்க வைத்துவிடுகிறது.
விவேக்ராஜின் துடிப்பான இளைஞராக வருகிறார். தன் நிறை குறைகளை அவரே புரிந்து கொள்ளும் அனுபவம் வரும்போது முன்னணிக்கு வருவார். எல்லாக் காட்சிகளிலும் முழுக்க அணிந்து நடித்தாலும் கிளாமராக இருக்கிறார் மோனிகா.
நாயகனின் அம்மாவாக சீதா வருகிறார். சாதரண ‘லோ பிபி’ வந்து மயங்கியதற்கே அவரது உயிரே போய்விட்ட அளவுக்கு அம்மாவின் பெருமையைச் சொல்லி ஒரு பாட்டு வருவது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.
நாயகனின் நண்பராக பாலசரவணனும், நகைச்சுவைக் காட்சிகளுக்காக பயன்பட்டிருக்கும் சிங்கம்புலி அன் கோவும் சிரிக்க வைப்பதில் சிக்கல் ஏற்படுத்துகிறார்கள். வில்லன் ராஜசிம்மன் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று பார்த்தால் நாயகனிடம் அடி வாங்கிச் சரிகிறார்.
நோவாவின் இசை தேர்ந்த இசையமைப்பாளர் இசைத்ததைப் போல் ரசிக்க வைக்கிறது. கே.ராம்குமாரின் ஒளிப்பதிவும் நயம். இருவருக்கும் கொஞ்சம் பட்ஜெட்டை அதிகப்படுத்தினால் பின்னி எடுத்து விடுவார்கள் போலிருக்கிறது.
பட்ஜெட்டுக்குள் இயக்க நேரும் இயக்குநர்களுக்கு நேரும் வழக்கமான குறைகளைத் தவிர வி.பி.நாகேஸ்வரனுக்கு இது முதல்படம் என்று சொன்னால் நம்ப முடியாத அளவில் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். திரைக்கதை கொஞ்சம் காலங்கடந்து இருக்கிறது. அதை நவீனப்படுத்தி திருப்பங்களை அதிகப்படுத்தியிருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.
கதை முடிவில் நெகிழ்ச்சியைத் தவிர வேறு மகிழ்ச்சி இல்லை.
தொட்டு விடும் தூரம் – கொஞ்சம் தொலைவில்தான் இருக்கிறது..!