கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ (Takku Mukku Tikku Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.
விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.