November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிந்துபாத்தில் காது மந்தமான கேரக்டர் – விஜய் சேதுபதி
June 11, 2019

சிந்துபாத்தில் காது மந்தமான கேரக்டர் – விஜய் சேதுபதி

By 0 624 Views

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிக்க, கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , எஸ்.யு.அருண்குமார் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் கிளாப் போர்டு சத்தியமூர்த்தி,விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் செல்வின் ராஜ், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ராஜமன்னார், விநியோகஸ்தர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், பைனான்சியர் மோகன் குமார்,கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  படத்தின் இயக்குனர் அருண்குமார், மியூசிக் 7 நிறுவன பிரதிநிதி நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசியதிலிருந்து…

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம்.

விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்து படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இது மிகப்பெரிய படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்..!” 

விஜய் சேதுபதி பேசியதிலிருந்து…

இயக்குநர் அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட.  

சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.

சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன்.

இந்தப் படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாக இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.

விவேக் பிரசன்னா ரொம்ப சின்சியரான நடிகர். இந்த படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை மனதிற்கு நெருக்கமாக இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது..!”