“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே ..” என்ற ஒரு முதுமொழி இருக்கிறது. ஆக ரெண்டகம் என்றால் துரோகம் என்று அர்த்தம். யார், யாருக்கு எப்படி துரோகம் செய்தார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை.
காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் இருக்கும் குஞ்சாக்கோ போபன் அதற்கான பணம் ஈட்ட ஒரு அசைன்மெண்ட்டை மேற்கொள்கிறார்.
அதன்படி ‘அசைனர் ‘ என்கிற மும்பை தாதா, கடத்தல் தங்கத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில் நடந்த தாக்குதலில் கொல்லப்படுகிறார் என்றும் அவரது வலதுகையான டேவிட் இப்போது உயிரோடு இருக்கிறார் – ஆனால், அந்தத் தாக்குதலில் அவருக்கு சுய நினைவு இல்லை என்றும் டேவிட்டிடம் பழகி அவரது நினைவை மீட்டு, இழந்த தங்கத்தை மீட்க வேண்டும் என்பதுதான் அந்த அசைன்மென்ட்.
டேவிட் என்று நம்பப்படும் அந்த வேடத்தில் அரவிந்தசாமி அற்புதமாக நடித்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட தாதாவின் கையாளாக இருந்த அவர் இப்போது சுய சிந்தனையின்றி பழைய நினைவுகள் மறந்து போய் தியேட்டரில் பாப்கார்ன் விற்கும் ஊழியராக இருக்கிறார்.
அவரது நம்பிக்கையைப் பெறும் குஞ்சாக்கோ போபன் அந்த அசைன்மெண்டை நிறைவேற்றுகிறாரா என்பதுதான் மீதிக் கதை.
அரவிந்த்சாமியின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புவதாக அவர் நம்மை நம்ப வைக்கும் காட்சிகள் பின்னால் உண்மை தெரிய வரும்போது புரிகிறது.
ஆனால் அரவிந்தசாமியின் பாத்திரத்தை விட குஞ்சாகோ போபன் ஏற்றிருக்கும் பாத்திரம் தான் மிகவும் நுட்பமானது. அவரது பாத்திரத்தின் பின்னால் இருக்கும் உண்மை தெரிய வரும்போது நாம் அதிர்ச்சி அடைகிறோம்.
தான் சாகவிருக்கும் வேளையில் கூட தன் அப்பாவித் தனத்தை வெளிப்படுத்தும் அவரைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது.
ஈஷா ரெப்பா போன்ற பெண்களைக் காதலிப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இந்தப் படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
கிளைமாக்சுக்கு சற்று முந்தைய காட்சியில் வெளிப்படும் பயங்கர வில்லனாக ஜாக்கி ஷ்ராப். இந்த வயதில் சிங்கிள் பீஸ் அணிந்து கொண்டு கடலில் இருந்து அவர் குளித்துவிட்டு வரும் காட்சியை தைரியமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட அது நெருடலாகத் தெரியவில்லை. ஒரு இளைஞனைப் போலவே தோன்றுகிறார் ஜாக்கி. சாகும்போது கூட சிரித்தபடியே சாகும் அவர், உண்மையிலேயே வில்லன்தான்.
இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் கதையும், திரைக்கதையும்தான் இந்தப் படத்தின் முக்கிய ஹீரோக்கள்.
முதல் பாதியில் நாம் எதிர்பார்த்த வழியிலேயே செல்லும் திரைக்கதை இரண்டாவது பாதியில் எடுக்கும் வேகமும், திருப்பங்களும் நாம் சற்றும் எதிர்பாராதவை.
ஒளிப்பதிவு படத்தின் ஆகப்பெரிய பலம். இசை அளவாக அமைந்து திரைக்கதைக்கு உதவி செய்திருக்கிறது.
கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார் எஸ்.சஞ்சீவ், இயக்கியிருக்கிறார் டி.பி.பெளினி.
இந்தத் திரைக்கதையில் பான் ஐடன்டிட்டி, ஷட்டர் ஐலேண்ட் போன்ற ஹாலிவுட் படங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் படங்களைக் கெடுக்காமல் எடுத்திருப்பதைப் பாராட்டியாக வேண்டும்.
என்றாலும் ரெண்டகம், நமக்கு புதிய கதைதான்..!