உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வந்திருக்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘ஓப்பன் ஹைமர்’. காரணம் இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பதுதான்.
அமெரிக்காவில் தயாரான முதல் அணுகுண்டின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை சரிதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஓப்பன்ஹைமர் வேடத்தில் புகழ்பெற்ற நடிகர் சில்லியன் மர்பி நடித்திருக்கிறார்.
இயல்பில் அமெரிக்க கம்யூனிஸ்டாக அறியப்பட்ட ஓபன்ஹைமர் இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தயாரிப்பில் பல நாடுகளும் ஈடுபட்டிருக்கும் வேளையில் அமெரிக்கா அதில் முதல் நிலை பெற வேண்டும் என்பதற்காக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
ஆனால் அதை மனிதர்கள் மீது பிரயோகிப்பதில் நாட்டம் இல்லாதவராக இருக்க அமெரிக்காவோ ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அவற்றை வீச பல லட்சம் மக்கள் மாண்டதில் தன் கையெல்லாம் குற்ற உணர்ச்சி கொண்டார்.
இந்தக் காட்சிகளில் எல்லாம் சில்லியன் மர்பியின் அற்புத நடிப்பு நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இந்த வருட படங்களுக்கான ஆஸ்கர் போட்டியில் நடிப்புப் பிரிவில் கண்டிப்பாக மர்பி இடம் பெறுவார். ஆஸ்கரை அவர் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதேபோல் அவருக்கு ஒப்பனை செய்த கலைஞருக்கும் இன்னொரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை ஆனதால் மர்பியின் நடுத்தர வயதுத் தோற்றம் முதல் வயதான தோற்றம் வரை அற்புதமாக ஒப்பனை அமைக்கப்பட்டு இருக்கிறது.
வாழ்க்கைக் கதையாக ஆனதால் முதல் பாதி முழுக்க வசனப் பகுதிகளாகவே கடக்கும் படத்தில் இரண்டாவது பாதிதான் சூடு பிடிக்கிறது.
அதிலும் அணுகுண்டு தயாரானவுடன் அதனை சோதித்துப் பார்க்கும் கட்டம் நம் இதயத் துடிப்பை எகிறச் செய்கிறது. அறைக்குள் இருப்பவர்களுக்கு ஒலி இல்லாமலும், அறைக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஒலியுடனும் தெரியும் இந்தக் காட்சிகள் நோலன் திறமையில் நேர்த்தியின் உச்சக் கட்டம்.
இதை சாதித்ததற்காக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் ஓப்பன்ஹைமரை அழைத்து “இதை எப்படி உணர்கிறீர்கள்..?” என்று கேட்க “என் கையெல்லாம் ரத்தக் கரையாக உணர்கிறேன்…” என்று ஹைமர் பதில் சொன்னதில் எரிச்சல் மேலிட்ட ஜனாதிபதி, தன் கைக்குட்டையைக் கொடுத்து அவர் கையை துடைத்துக் கொள்ள சொல்கிறார்.
அத்துடன் “இனிமேல் இந்த அழு மூஞ்சியை என் அலுவலகம் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்…” என்று அவரை அனுப்பி வைக்கிறார். அமெரிக்காவில் தயாரான ஒரு படத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் உண்மை முகத்தை இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டும் ரோலனின் நேர்மை பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
அமெரிக்காவின் அணுகுண்டு சாதனைக்கு காரணமாக அமைந்தும் தன் நேர்மறையான மற்றும் கம்யூனிச கொள்கைகளால் தேசத்துரோகி என்று பட்டம் கட்டப்பட்ட ஹைமர் கடைசியாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் காட்சி எல்லா நாட்டிலும் நேர்மையாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும் இதுதான் தண்டனை என்பது போல் இருக்கிறது.
ஹைமரின் மனைவியாக வரும் எமிலி பிளன்ட்டின் திறமையையும் குறிப்பிட்டாக வேண்டும். ஜெனரல் ஆக வரும் மேட் டாமன், மற்றும் வில்லனாக மாறும் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோரின் நடிப்பும் கச்சிதம்.
ஓப்பன்ஹைமருடன் உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஓப்பன்ஹைமரும் எயின்ஸ்டீனும் இணைந்து பணியாற்றிய இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி – பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளைத் திரையில் காண நேரும்போது புல்லரிக்கிறது.
கை பேர்ட் மற்றும் மார்டின் J. ஷெர்வின் இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் நூலினைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் இது.
இந்தப்படம், IMAX வடிவத்தை ஃபார்மெட் 65 எம்.எம். பெரிய வடிவ பட ஒளிப்பதிவுடன் இணைக்கப்பட்டு முதல்முறையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை மூச்சாக கொண்ட ஆர்வலர்கள் இந்த படத்தை தவறவிடாமல் பார்த்து விட வேண்டியது அவசியம்.