அலாவுதீன் அற்புத விளக்கு காலத்தில் இருந்து பூதங்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இலக்கியங்களும் திரைப்படங்களும் சொல்லிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் பூதம் தான் ‘ கர்க்கிமுகி ‘.
டைட்டிலையும் பூதத்தின் கதை இது என்பதையும் பார்த்தவுடன் இது சிறுவர்களுக்கான படம் என்பது புரிந்து போகும். ஒரு பூதத்துக்கும் சிறுவனுக்குமான பிணைப்புள்ள கதை இது. இப்படி சாதாரணமாக சொல்லிவிட்டால் இது சாதாரணமான கதையாகவே புரியும் ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக சுவாரஸ்யத்தை நுழைத்து ஒரு திரைக் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் என்.ராகவன்.
‘கர்க்கிமுகி’ பூதம் எப்படி பூமிக்கு வந்தது என்பதற்கான ஒரு 3000 வருஷத்து கதை சொல்கிறார்கள். பூதங்களுக்கென்று தனியாக ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தின் அரசன் தான் ‘கர்க்கிமுகி’. குழந்தை இல்லாத பூதத்துக்கு நீண்ட காலம் கழித்து வரமாய் ஒரு மகன் பிறக்க அந்த மகன் ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொடுக்கிறது ‘கர்க்கிமுகி’.
அப்படி முனிவர்களும் சாதுக்களும் வாழும் உலகத்துக்கு போய் அங்கே ஒரு முனிவரின் தவத்தை விளையாட்டாக ‘கர்க்கிமுகி’யின் மகன் ‘கிங்கினியா’ கலைத்து விடுகிறான். அந்த முனிவர் சாபம் கொடுக்க அந்த சாபத்தை தான் ஏற்றுக்கொள்கிறது ‘கர்க்கிமுகி’ பூதம். அதன் விளைவாக பூமியில் ஒரு பொம்மையாய் விழுந்து கிடக்க, அதைத் தொட்டு துடைப்பவர்கள் மூலம் உயிர் பெறும் என்பது சாப விமோசனம். அப்படி உயிர் கொடுப்பவர்கள் ஒரு மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொல்வதன் மூலம் மீண்டும் ‘கர்க்கிமுகி’ தன்னுடைய பூத உலகத்துக்கு சென்று மகனுடன் வசிக்க முடியும். அது முடிந்ததா என்பது கதை.
பூத உலகில் அப்படி என்றால் நம் பூவுலகில் அம்மாவுடன் வசித்து வருகிறான் சிறுவன் அஸ்வந்த் அசோக்குமார். சிறு குழந்தையிலிருந்து அவனுக்கு திக்குவாய் இருந்து வர அதன் காரணமாக பள்ளியிலும் சுற்றத்திலும் அவன் கேலி பொருளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் என்ன சொகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இயலாத உலகம் அவனைத் தவறானவனாகவே சித்திரிக்கிறது. இந்நிலையில் பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் ‘கர்க்கிமுகி’ பொம்மையை அவன் கண்டெடுத்துத் துடைக்க பூதம் உயிர் பெறுகிறது.
சிறுவன் அஸ்வந்த்தையே தன் எஜமானாகவும் தெய்வமாகவும் ஏற்று அவனுக்கு எல்லா வகையிலும் உதவி புரிகிறது ‘கர்க்கிமுகி’. அவன் மந்திரத்தை சொன்னால் மீண்டும் பூத உலகிற்கு போக முடியும் என்ற நிலையில் அந்த திக்குவாய் சிறுவனால் அதைச் சரியாக செய்ய முடிந்ததா என்பது இன்னொரு கேள்வியாக அமைகிறது.
சும்மாவே குழந்தைகளுக்கு பிரபு தேவாவையும் அவரது நடனத்தையும் பிடிக்கும். இதில் அவர் பூதமாகவும் வருவதால் கேட்க வேண்டுமா மனிதர் பூதமாக காமெடியிலும் சரி… அற்புதங்கள் புரிவதிலும் சரி… கலக்கி இருக்கிறார்.
இந்த கெட்டப்புக்காக ஒரு உச்சி குடுமி முடியை மட்டும் விட்டுவிட்டு மற்ற மண்டையை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டு வர எப்படித்தான் பிரபுதேவாவுக்கு முடிந்ததோ..? ஆனால் அந்த கெட்டப் தான் அவரை பூதமாகவே நம்ப வைக்கிறது. பூதத்துக்கு அடிப்படை தேவை அப்பாவித்தனம் என்ற அளவில் அதற்கு மெத்த பொருத்தமாக இருக்கிறார் பிரபுதேவா.
அவர் சிறுவனை குஷிப்படுத்த ஆடும் மாஸ்டர் பாடல் அவரது நடனத்தில் ‘மாஸ்டர் பீஸ்’. அதற்கு சரியான குத்தில் இசையமைத்திருக்கும் இமானையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
பிரபுதேவாவின் நடிப்பு அற்புதமாக இருந்தாலும் அதை மிஞ்சி விடுகிறது சிறுவன் அஸ்வந்த்தின் திக்குவாய் நடிப்பு. அனுபவம் வாய்ந்த நடிகர்களாலேயே இந்தப் பாத்திரத்தை புரிந்து கொண்டு இவ்வளவு சிறப்பாக நடித்து விட முடியுமா என்று தெரியவில்லை. அதனால் ஏற்படும் மன உளைச்சலும் மற்றவர்களின் கேலியும் எந்த அளவுக்கு அவன் மனதை பாதிக்கிறது என்பதை அற்புதமான உணர்ச்சிகளின் மூலமே சொல்லி இருக்கிறான் அஸ்வந்த்.
பிரபுதேவாவின் உந்துதலால் அவன் தன் திக்குவாய் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வது பாராட்டும்படி இருக்கிறது. அதிலும் மாறுவேட போட்டியில் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசன் போல் அவன் உட்கார்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்து அம்மா… அப்பா… என்று பேச்சு வருவது போல் நடித்து இருக்கும் காட்சியில் தியேட்டர் கைதட்டல்களால் அதிரும்.
படம் முழுவதும் திக்குவாய் குறையுடன் நடித்துவிட்டு பட முடிவில் மிக நீண்ட ஷாட்டில் வளமையான தமிழ் வசனத்தைத் தொடர்ச்சியாக பேசி அஸ்வந்த் அசத்தும் போது ரசிகர்கள் ஆரவாரிப்பது நிச்சயம். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பல விருதுகளை இந்தப் படத்தின் மூலம் அஸ்வந்த்துக்கு எதிர்பார்க்கலாம்.
அஸ்வந்த்தின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் ஒரு கதாநாயகிக்கு உரிய அழகுடன் இருந்தாலும் அவருக்கு ஜோடியாக யாரும் இல்லாதது குறைதான். அவரது கணவர் இறந்து போய்விட்டதாக கதையின் ஓரிடத்தில் சொல்கிறார்கள். தன் குறையை அம்மாவாக ரம்யா கவனிக்கவில்லை என்று அஸ்வந்த் சொல்வதும் அதற்கு ரம்யாவின் ரியாக்ஷனும் அற்புதம்.
திக்குவாய் என்பது ஒரு குறை அல்ல. மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைதான். அதற்கு சிகிச்சை என்று செலவு செய்வதை விடுத்து திக்குவாய் உள்ளவர்களின் மனக்குறையை அகற்றி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தாலே அதிலிருந்து மீளலாம் என்கிற ஒரு மருத்துவ கருத்தையும் இந்தப் படத்தில் சொல்லி இருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம்.
அதேபோல் இது போன்ற குறைகளால் அவர்களை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பிரச்சனை என்ன என்று காது கொடுத்து கேட்க வேண்டும் என்கிற மெசேஜும் படத்தில் இருக்கிறது.
குறைவான பாத்திரங்களே என்றாலும் படம் மிக நிறைவாக இருக்கிறது.
அஸ்வந்த்துக்காக பூதம் செய்யும் அற்புதங்கள் படம் நெடுக இருப்பதால் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் குதூகலத்துடன் இந்தப் படத்தை ரசிக்க முடியும்.
கடைசியில் பூதத்தை அதன் உலகத்துக்கு அனுப்பி வைக்க அஸ்வந்த் முயற்சி செய்யும் காட்சி பரபரப்பானது. அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் மிக நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகளால் இரண்டு நாட்களுக்கு ‘கர்க்கிமுகி’ பூதத்தையும் அஸ்வந்த்தையும் நினைக்காமல் இருக்க முடியாது.
யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு வண்ணத்தை வாரிக் குழைத்து இருக்கிறது. பூதத்துக்கான காஸ்டியூம்களும் சரி அதற்கான சுற்றுப்புறங்களும் சரி வானவில்லாக ஜொலிக்கிறது. பூதம் வரும் காட்சிகளில் எல்லாம் இமானின் பின்னணி இசையும் பின்னி எடுக்கிறது.
மை டியர் பூதம் – குதூகலமான குழந்தைகள் உலகத்துக்கான பயணம்..!