September 16, 2024
  • September 16, 2024
Breaking News
May 31, 2024

ஹிட் லிஸ்ட் திரைப்பட விமர்சனம்

By 0 158 Views

பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது. 

அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகி இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். எறும்பு, எலி, கோழி என்று ஒரு சிறு உயிருக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற வள்ளலாரின் வழியில் வாழும் விஜய் கனிஷ்கா ஒரு மென் மனதுக்காரராக மட்டுமில்லாமல் மென் பொறியாளராகவும் இருக்கிறார். 

அம்மா சித்தாரா மற்றும் தங்கையுடன் நடுத்தர வாழ்வில் திருப்திகரமான வாழ்க்கை நடத்தி வரும் அவருக்கு வித்தியாசமான சோதனை ஒன்று வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் வைத்து விஜய்யின் அம்மாவையும், தங்கையையும் ஒரு மாஸ்க் அணிந்த மர்ம நம்பர் கடத்துகிறார்.

இருவரையும் விடுவிக்க வேண்டும் என்றால் அந்த மர்ம நபர் சொல்படி விஜய் கேட்க வேண்டும். அதன்படி இரண்டு கொலைகளை அவர் புரிய வேண்டும் என்பதுதான் மாஸ்க் மனிதர் வைக்கும் டாஸ்க்.

வாயில்லா ஜீவன்களுக்குக் கூட கருணை காட்டும் விஜய்யால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற இரண்டு மனித உயிர்களைக் கொல்ல முடிந்ததா… இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பினாரா, தன் குடும்பத்தை மீட்டாரா  என்பதுதான் படத்தின் மீதி.

முதல் படத்திலேயே வித்தியாசமான பாத்திரத்தைப் பெற்றிருக்கும் விஜய் கனிஷ்கா அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற நியாயமான நடிப்பைத் தந்திருக்கிறார். அப்பாவித்தனமான இளைஞனாக அதே சமயத்தில் குடும்பத்தின் மீது பாசம் மிக்கவராக நடித்திருப்பதுடன், ஒரு பக்கம் மர்ம நபரின் கட்டளை இன்னொரு பக்கம் காவல்துறையின் நெருக்கடி இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இளைஞனாக அற்புதமாக நடித்திருக்கிறார். 

ஆரம்பத்தில் அமைதியாக இருப்பவர் போகப் போக புயலாக மாறுவதைத் திரை மொழியில் சரியாகவே தந்திருக்கிறார்.

ராமச்சந்திர ராஜுவுடன் மோதும் அவருக்கு ஆக்ஷனும் திறம்பட வருவது தெரிகிறது. இருந்தாலும் காதலைக் காட்டுவதற்கான விழுக்காடு இந்த திரில்லர் படத்தில் கொஞ்சம் பெரும்பாடாகவே உள்ளது.

முதல் படம் என்றே தெரியாத அளவில் நடித்திருக்கும் விஜய்க்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. 

சீனியர் விஜய் ஓய்வு பெறும் நிலையில் இந்த ஜூனியர் விஜய். ஓகே… ஓகே..!

இப்படி ஒரு அறிமுக நாயகன் இருக்கும் படத்தில் இன்னொரு அனுபவ நடிகர் இணையும்போது அது பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். இந்த ஃபார்முலாவின் படி இதில் விஜய் கனிஷ்காவுக்காக இடம் பெற்றிருக்கிறார் சரத்குமார். 

காக்கிச் சட்டை வேடம் இதுவரை அவர் பல படங்களில் ஏற்று இருப்பதுதான் என்றாலும், இதில் ஏசிபியாக வரும் அவரது அனுபவ நடிப்பினால் அந்தப் பாத்திரம் பரிமளிக்கிறது. முதல் பாதியில் விஜய் கனிஷ்காவுக்கான இடத்தை விட்டுக் கொடுத்து, இரண்டாவது பாதியில் தனக்கான பாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் அவர்.

சரத்குமார், சித்தாரா இருவரும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக இந்த படத்தில் வந்திருப்பது புரிகிறது.

கௌதம் மேனன் மற்றும் ஸ்மிருதி வெங்கட்டும் சிறிய பாத்திரங்களில் தோன்றினாலும் அவை அழுத்தமானமையாக இருக்கின்றன. ஐஸ்வர்யா தத்தாவின் பாத்திரமும் சிறிய அளவிலேயே வந்து போகிறது.

ராமதாஸ் மற்றும் பால சரவணனை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம்.

அபினவ் சுப்பிரமணியனின் இந்த த்ரில்லர் கதையை சூரியகதிர் காக்கள்ளர், கே.கார்த்திகேயன் இயக்கி இருக்கின்றனர்.

என்னதான் இருந்தாலும் இந்தப் படத்தைத்  தயாரித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரோ, விஜய்யின் அப்பா விக்ரமனோ இயக்கியிருந்தால் இன்னும் பெரிய அளவில் ரசித்திருக்க முடியும் – அதை ஏன் இருவரும் தவிர்த்தார்கள் என்ற கேள்வி நம்முள் எழாமல் இல்லை. 

அப்படி இருந்திருந்தால் இந்த ஹிட் லிஸ்ட், சூப்பர் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

– வேணுஜி