November 23, 2024
  • November 23, 2024
Breaking News
February 21, 2024

கிளாஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 438 Views

இது உடன் படிக்கும் classmates பற்றிய படம் அல்ல, உடன் குடிக்கும் glass mates பற்றிய படம்.

அப்படி… கதையின் நாயகனான அங்கயர்க் கண்ணன் தன் மாமாவுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறார். அதனால் தன் டிரைவர் வேலையையும் பார்க்க முடியாமல் போக… அன்பான மனைவி மீதும் சந்தேகப்பட நேர்கிறது.

அவர் குடியை விட்டாரா அல்லது அவரது குடி கெட்டதா என்பதை முன்பாதியைக் கலகலப்பாகவும் பின் பாதியை நெகிழ்ச்சியாகவும் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.

அவரே நாயகன் அங்கயர்க்கண்ணனின் கூட இருந்து குடி கெடுக்கும் மாமனாகவும் குடித்திருக்க… அல்லதுநடித்திருக்க, இவர்கள் இரண்டு பேரும் செய்யும் அலப்பறை முன்பாதியை ஊற்றி நிரப்புகிறது.

சொல்லப்போனால் சரவண சக்தியால்தான் அங்கயர்க் கண்ணன் மிகவும் கெட்டுப் போகிறார் என்பதற்கு அடையாளமாக இவர் செய்யும் அட்டகாசங்கள் அதிகம்.

பாத்ரூம் போகிறேன் பேர்வழி என்று பீரோவை திறந்து ஈரப்படுத்துவதும், ஏரியா தாதாவின் கார் மீது மாப்பிள்ளையுடன் சிறுநீர் அடித்து அசிங்கப்படுத்துவதுமாக இதில் குட்டிப்புலி சரவண சக்தி ஜட்டிப் புலியாகவே திரிகிறார்.

மனைவியை திருப்திப் படுத்த முடியாத இயலாமையில் நொந்து கொள்ளும் போது சுப்பிரமணியபுரம் படத்தில் அவர் மனைவி அவருக்கு முருங்கைக்காய் சமைத்து போடும் காட்சி நமக்கு ஏனோ நினைவில் வந்து போகிறது.

இந்த குடிகார சாத்தான்களுக்கு வாய்த்தவர்கள் இப்படியான தேவதைகளா என்று கேட்கும் அளவிற்கு அங்கயர்க் கண்ணனுக்கும் சரி சரவணன் சக்திக்கும் சரி, தாளிப்பிலும் வாளிப்பிலுமாக மனைவிகள் வாழ்க்கைப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் தங்கள் கணவர்கள் மீது அன்பைப் பொழிவதிலும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இதனாலேயே இந்தக் குடிகாரர்கள் திருந்தாமல் இருக்கிறார்களோ என்ற ஐயமும் நமக்கு எழாமல் இல்லை.

‘அயலி’ அபி நட்சத்திராவை கிளைமாக்சில் வைத்து ‘அப்படியான ‘ பாத்திரத்தில் பார்க்கும்போது பகீர் என்கிறது. அவர் பேசும் வசனங்களும் அதைவிட ஷாக்.

இது போன்ற படங்களில் மறக்காமல் மயில்சாமி இருக்கையில் கூப்பிட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படமும் சாட்சி. ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என அவருக்கு வசனமும் வைத்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சாம்ஸ், டி.எம்.கார்த்திக் இருவரும் நம்மைச் சிரிக்க வைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்! அருள்தாஸ், மீனாளுக்கும் ஆளுக்கு ஒரு வாய்ப்பு.

இசை அமைப்பாளர் பிரித்வி நல்ல ‘கிக்’கான  பாடல்களை இசைத்துத் தந்திருக்கிறார். ஒளிப்பதிவும் ஓகே..!

சொல்ல வந்த சரக்கு… ஸாரி, கருத்து நியாயமானதுதான். ஆனால் குடிகாரர்களின் காதில் இதெல்லாம் விழவா போகிறது..?

கிளாஸ்மேட்ஸ் – cheers with tears..!

– வேணுஜி