November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 1, 2018

செக்கச் சிவந்த வானம் திரை விமர்சனம்

By 0 1480 Views

நாயகன் எடுத்த காலத்திலிருந்தே ‘இது காட்ஃபாதரின் காப்பி’ என்று மணிரத்னம் மீது குற்றச்சாட்டு எழுந்ததுண்டு. அப்போதெல்லாம் வெளிநாட்டுப் படங்களை பார்க்கும் பழக்கமும், பாக்கியமும் நமக்கு அரிதானது என்பதால் பார்த்ததாகச் சொல்பவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்கு அப்படியில்லை. விரல் நுனியில் உலக சினிமாக்கள் அணிவகுக்கும் நிலை… யாரும் யாரையும் ஏமாற்ற முடியாத சூழலில் மீண்டும் காட்ஃபாதரை எடுத்திருக்கிறார் மணிரத்னம் என்று இந்தப்படத்தைப் பற்றியும் குற்றச்சாட்டு எழுந்தது.

‘ஒரு பெரிய தாதா… அவருக்குப் பின் அந்த இடத்துக்கு யார்..?’ என்கிற ஒற்றை வரிப் பொருத்தம் கண்டிப்பாக அந்தக் குற்றச் சாட்டை மெய்ப்பிக்கிறது. அதேபோல் இது ‘நியூ வேர்ல்ட்’ என்ற கொரியப் படத்தை ஒற்றியெடுத்த கதை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. அதுவும் பொய்யில்லை என் கிற கதையாக “அடுத்த டான் யார்..?” என்கிற களேபரங்களுக்கு நடுவில் போலீஸ் ரகசிய அனடர்கவர் ஆபரேஷன் நடத்தி டான் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த நினைப்பதும் இருக்கிறது.

ஆனால், அது கதை அளவில்தான். ஆனால், படமாக்கலில் ‘மணிரத்னம் படம்’ என்ற பிராண்ட் இந்தப் படத்தில் மேம்பட்டு இருப்பதாகவே கொள்ளலாம். என்ன ஒன்று, ‘லாஜிக்’குகளை மறந்து ‘மேக்கிங் மேஜிக்’குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டால படத்தை நிரம்பவே ரசிக்க முடியும். அவ்வளவுக்கு லாஜிக் உடைசல்… ஆனால், மேக்கிங் மிரட்டல்..!

மற்றபடி இதில் அரவிந்தசாமி, அருண்விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என்று பிற இயக்குநர்களால் சேர்க்க முடியாத ஸ்டார் காம்பிநேஷனை இணைத்துப் படமெடுக்க மணிரத்னம் என்ற மந்திரவாத இயக்குநரால் மட்டுமே முடியும் எனலாம். அப்படி இல்லை என்றால் இந்தப்ப்ட கிளைமேக்ஸை எல்லாம் சிம்பு போன்றவர்களோ அவரது ரசிகர்களோ ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

வயதான ‘தாதா’வாக பிரகாஷ்ராஜ். சான்ஸே இல்லை. அவர் செய்த அட்டூழியங்கள் ஒன்றைக்கூட காட்சிப் படுத்தாமல் அவர் நடிப்பு மூலம் மட்டுமே அவரை ‘படா டான்’ ஆகக் காட்ட நினைத்த மணிரத்னத்தின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பிரகாஷின் அப்படி ஒரு அசாத்திய நடிப்பு. ஆனால், தன்னைக் கொல்ல நினைப்பது தன் மகன்களில் ஒருவன்தான் என்று அறிந்தும், அதற்கு எந்த விதமான பாதுகாப்பு வளையத்தை மேற்கொண்டார் என்பது சொல்லப்படவேயில்லை.

ஒரு அப்பாவாக இது எவ்வளவு பெரிய பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும் என்பதுடன் அவர் மனவியிடமாவது அதைப் பகிர்ந்து கொள்வார் என்று பார்த்தால் அவர் மனைவியாக வரும் ஜெயசுதாவோ “அதைச் சொல்ல வேண்டாம்…” என்று மறுத்து விடுகிறார்.

பிரகாஷ் ராஜுக்கு அடுத்தபடியாக நடிப்பில் மிளிர்பவர் விஜய் சேதுபதிதான். மணிரத்னம் அவரை நடிக்கவைத்தாரா அல்லது ‘உனக்கு எது சரியாக வருகிறதோ அதைச் செய்…’ என்று கிரீன் கார்டு கொடுத்துவிட்டாரா தெரியவில்லை. தன் ஸ்டைலில் நடித்து அத்தனை பேரையும் ‘ஓவர்டேக்’ செய்துவிடுகிறார் சேது.

அரவிந்த்சாமியை இதைவிட அற்புதமான கேரக்டர்களில் எல்லாம் பார்த்துவிட்டதால், நடிப்பில் குறை வைக்காமல் செய்திருக்கிறார் என்று நிறுத்திக் கொள்ளலாம். காலம் காலமாக வெளியே சொல்ல முடியாமல் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத ஏக்கத்தை ஒரு காட்சியில் காட்டி கைத்தட்டல் வாங்கி விடுகிறார்.

chekka-chivantha-vaanam

chekka-chivantha-vaanam

அருண்விஜய்க்கும் அவரது பாடிலேங்குவேஜுக்கு ஏற்ற கேரக்டர். தன் ஏரியாவில் அவரும் அசத்தி விடுகிறார். அவர் துபாய் ஷேக்குகளிடம் ஏதோ பிஸினஸ் செய்வது புரிகிறது. ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை.

சிம்புவைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது – தனி ஹீரோவாக எத்தனை இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு கடுக்காய் கொடுத்தவர், இங்கே வந்து பாவங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறார் என்று. சிம்புவுக்கென்று வசனம் எழுதும்போது மணிரத்னமே ஆனாலும் அவர் வழிக்கே போய்த்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. “எனக்குப் பிடிச்சவங்க எல்லாம் என்னை விட்டுப் போயிடுறாங்க…” என்று தன் காதலியிடன் அவர் சொல்லும்போது தியேட்டரே கைத்தட்டுகிறது.

ஜோதிகாவும், அவர் காஸ்டியூமும் அந்த ‘தாதா’ வீட்டுக்கு ஒட்டவேயில்லை. ஒரு தாதா வீட்டு மருமகள் ஏதோ ’36 வயதினிலே’ கெட்டப்பில் புடவை வியாபரம் செய்து பிழைத்துக்கொண்டிருப்பவர் போல் தனியாகத் தெரிகிறார். அதற்கு இன்னொரு காரணம், அவர் கணவர் அரவிந்த்சாமி ‘இன்னொரு வீடு’ வைத்துக் கொண்டு ‘அதிதி ராவ் ஹைதாரி’யுடன் கௌதாரி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பதால் அரவித்சாமி – ஜோவுக்கான ‘இன்டிமஸி மிஸ்ஸிங்’.

சிம்புவின் ஜோடியாக வரும் ‘டயானா எரப்பா’ கேரக்டர் அளவில் ஒரு தமிழச்சி. அவரது ஜட்டிக்குமேல் பிதுங்கித் தெரியும் பின்னழகைப் பார்த்தால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அதேபோல் தொலைக்காட்சி செய்தியாளராக வரும் அதிதி ராவ், ஒரு தாதா என்று தெரிந்தும் அர்விந்த்சாமியுடன் அடிக்கும் கூத்துகளைப் பார்த்தால் எஸ்.வி.சேகர் சொன்னதை மெய்ப்பிப்பது போலிருக்கிறது.

இதில் சேராமல் நல்லபெண்ணாக வரும் அருண்விஜய்யின் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷை சர்வசாதாரணமாக பைக்குள் போதை மருந்து வைத்துப் போலீஸ் கைது செய்கிறது.

தமிழ்நாட்டுப் போலீஸ்தான் தாதாக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்றால் அரபுப் போலீஸ், செர்பியப் போலீஸ், நேபாளத்துப் போலீஸ் எல்லோருமே படத்தில் ‘டுபாக்கூர்’களாக இருக்கிறார்கள்.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்..?” என்கிற கதையாக இதுவரை வெளிநாடு செல்லாமல் (கதைக்குத் தேவையாக இருந்த ‘குரு’ தவிர) சுதேசியாகப் படமெடுத்து வந்த மணிரத்னம், இதில் துபாய், செர்பியா, என்று சென்று சுட்டிருப்பதும் கதைக்காகவே என்று நம்பலாம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவை அற்புதம் என்பதோ, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை அமர்க்களம் என்பதோ அவர்களுக்கே போரடிக்கும். படத்தில் ஓங்கித் தெரிகிறார்கள் இருவரும். ஆனால், இசைப்புயல் இசைத்த அருமையான பாடல்களை முழுதாகப் பயன்படுத்தாமல் மணி சார் ‘கொத்து பரோட்டா’ போட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திரைக்கதையின் அழகு என்றால் அரவிந்த் சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய் சேதுபதி எல்லோருமே ஒவ்வொருவர் ஒவ்வொரு பகுதியில் ஹீரோவாகத் தெரிவதுதான். ஆனால், ஒட்டுமொத்தமான வில்லன்களின் கதையில் யார் அதிக வில்லனோ அவர்தானே கதாநாயகன்..? அந்த பட்டத்தை சேதுபதிக்கே கொடுத்து விடுகிறார் மணிரத்னம்.

அப்பா, அம்மா, மகன், சகோதரன், மனைவி, மகள், மருமகள் என்ற எந்த உறவுக்கும் மரியாதை கொடுக்காமல் மணிரத்னம் காட்டியிருக்கும் இந்த ‘பவர் பாலிடிக்ஸ்’ நிச்சயமாக உண்மையான ‘கேங்ஸ்டர்’களிடம் கூட இருக்க வாய்ப்பில்லை.

எல்லோரும் சுட்டுக் கொண்டு செத்துப் போவதில் கடைசியில் விஜய் சேதுபதி, மணிரத்னம், சந்தோஷ் சிவன், ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.

செக்கச் சிவந்த வானம் – ரத்தம் சிவந்த பூமி..!

– வேணுஜி