எந்த மனிதனுக்குமே முதலில் முகிழ்த்த காதல் மரணப்படுக்கையிலும் மறக்காமல் இருக்கும். அதிலும், படைப்பாளிகளுக்குச் சொல்லவே வேண்டாம். அந்தக் காதலே அவர்களை கலைஞர்களாக்குகிற காரணி எனலாம்.
அப்படித் தன் பள்ளித் தோழியான முதல் காதலியால் உந்தப்பட்டு எழுத்தாளரான கௌரிசங்கர் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். 24 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது எழுத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைக்க, போனில் வாழ்த்து வருகிறது முதல் காதலியிடமிருந்து…
விருது வாங்கிய கையோடு வெளி உலகுக்குத் தெரியாமல் அவளைச் சந்திக்க வரும் கௌரிசங்கர் 24 வருடங்கள் தவறவிட்ட வாழ்க்கையை 24 மணிநேரத்தில் வாழ்ந்துவிடத் துடிக்கிறார். ஆனால், அங்கே ஒரு அசம்பாவிதம் சம்பவிக்க… என்ன ஆகிறதென்பது சஸ்பென்ஸ் கலந்த முடிவு…
படத்தலைப்பும், பாலுமேந்திராவை குருவாக ஏற்று இயக்குநர் எம்.ஆர்.பாரதி செய்யும் குரு வணக்கம் நம்மை நம்பிக்கை வைத்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
பொருத்தமான நடிகர்கள் கிடைத்துவிட்டாலே ஒரு படத்துக்கு பாதி வெற்றி கிடைத்துவிடும். அந்த வகையில் கௌரிசங்கராக வரும் பிரகாஷ்ராஜ், அவரது முன்னாள் காதலி மோகனாவாக வரும் அர்ச்சனா, அவரது மனைவி சீதாவாக வரும் ரேவதி, போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் இவர்களால் படத்துக்கு ஒரு மேன்மை கிடைத்துவிடுகிறது.
எனினும், கதை நமக்கு பெரிதும் அறிமுகமான களத்திலேயே நகர்வதால், கதாபாத்திரங்களும், அவர்களது உரையாடலும் மட்டுமே வித்தியாசத்தைக் கொடுக்கும் அவசியம் நேர்கிரது இந்தப்படத்துக்கு.
அந்தவகையில் இந்தப்படம் ‘அழுத்தமாக, ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறதா..?’ என்றால்…
24 வருடக் கதையை 24 மணிநேரத்தில் வாழத்துடிப்பவர்களுக்குப் பேச இவ்வளவுதானா விஷயங்கள் இருக்கும் என்று சலிப்பாக இருக்கிறது. அவர்கள் பேசியது மொத்தம் நாலு வரிதான். இவர் குடும்பம், அவர் குடும்பம், இவருக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்று அவர் தெரிந்து வைத்திருப்பது இத்யாதி… இவ்வளவுதானா கடந்துபோன வாழ்வில் பேச இருக்கும் மிச்ச விஷயங்கள்..?
விடிய விடிய நாலு மணி வரை பேசிக்கொண்டிருந்ததாகக் கதை சொல்கிறது. ஆனால், கன்டென்ட் ஒரு ‘ட்வீட்’ அளவுக்கே இருக்கிறது.
அதிலும் பிரகாஷ்ராஜிடம் இருக்கும் பூரிப்பு அர்ச்சனாவிடம் இல்லவே இல்லை. முதலிலேயே அவரையும் ஒரு நோயாளியாகக் காட்டிவிட அவருக்குத்தான் ஏதும் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறோம். அவரிடம் காதலைப் பார்த்த பூரிப்பும் இல்லை… தங்கள் உறவைப்பற்றி சமூகம் மோசமாக விமர்சிக்க, தன்னிலை விளக்கம் எதுவும் அவரிடம் இல்லவே இல்லை. எதையுமே வெளிப்படையாகப் பேசாமல் இருந்தால் ஊர் உலகம் எப்படித்தான் அவரைப் புரிந்து கொள்ள முடியும்..?
இந்தப்பக்கம் வந்தால்… எப்பேர்ப்பட்ட அருமையான மனைவி (ரேவதி) வாய்க்கப்பட்டிருக்கிறார் அந்த புண்ணியவான் எழுத்தாளர்..? வேளாவேளைக்கு சாப்பிட வேண்டிய மாத்திரைகளை அவர் எடுத்து உண்ணும் அளவில் அற்புதமாக பேக் பண்ணி அனுப்பினால், அதில் ஒன்றையாவது அந்த ‘வேளை’ கெட்ட எழுத்தாளர் மதித்தால்தானே..?
இத்தனை அற்புதமான மனைவியிடம் தன் காதலி பற்றி ஒருவர்… அதுவும் ஒரு எழுத்தாளர் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வாய்ப்பேயில்லை. ‘அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று ஒரு வார்த்தை மனைவியிடம் சொல்லிவிட்டுப் போவதில் அவருக்கு என்ன தயக்கம் இருந்திருக்க முடியும்..? அப்படிச் சொல்லாமல் வந்ததைக் கூட புரிந்து கொண்டல்லவா அந்த மனைவி தன் கணவன், அவன் காதலி மீதுள்ள கரைகளைத் துடைக்கிறார்..?
இப்படி கவனமாகப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தால் காலத்துக்கும் கொண்டாடப்பட்டிருக்கும் படைப்பாக வந்திருக்க வேண்டிய படம். நல்ல ‘கிரவுன்ட்’ கிடைத்தும் அதில் ‘விளையாடாமல்’ விட்டுவிட்டார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி.
அதென்னமோ, பாலுமகேந்திராவைப் பிடிப்பவர்களுக்கு அர்ச்சனாவையும் சேர்த்தே பிடித்துவிடுகிறது. பார்க்கப்போனால் அர்ச்சனா மட்டுமே கதையின் ஆதாரப்புள்ளி. ஆனால், அவர் எப்படிப்பட்டவர், என்ன நினைக்கிறார், அவர் காதல் எப்படிப்பட்டது என்றெல்லாம் அந்தக் கேரக்டர் நமக்கு உணர்த்தவேயில்லை.
இறுக்கமான ஒரு ‘நோயாளி ஆன்ட்டி’யாகவே வருவதால் அவர் மீது எந்த ஈர்ப்பும் நமக்கு வரவேயில்லை. அதனால் அவர் கடைசியில் உடைந்து அழும்போது நமக்கு எந்த பதைபதைப்பும் பாதிப்பும் ஏற்படவேயில்லை.
ராஜேஷ் கே.நாயரின் ஒளிப்பதிவில் படம் முழுதும் ‘மிட் ஷாட்’ காட்சிகளே ஆக்கிரமித்து ஒரு ‘லாங் ஷாட்’ எங்காவது வந்துவிடாதா என்று ஏங்க வைக்கிறது.
அரவிந்த் சித்தார்த் பின்னணி இசை நயம். அவர் இசையில் வைரமுத்துவின் ‘இரு விழியில் ஈரமா’ பாடல் பழைய ‘இன்று வந்த சொந்தமா…?’ பாடலை நினைவுபடுத்துகிறது.
படத்தின் தேவையற்ற நிதானப் போக்கும் நெளிய வைக்கிறது. ஏதாவது ஒரு கட்டத்திலாவது படம் வேகமெடுக்க வேண்டாமா..? பாலுமகேந்திரா இப்படியெல்லாம் நிச்சயம் நெளிய வைத்ததேயில்லை.
அழியாத கோலங்கள் 2 – வீட்டில் முயற்சித்த திருநெல்வேலி அல்வா..!
– வேணுஜி