May 18, 2024
  • May 18, 2024
Breaking News
March 19, 2018

6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்

By 0 1049 Views

கடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான்  நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள்.

உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம்.

அதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி ‘கடைசிப் பக்கம் கிழிந்த நாவலின்’ வடிவமாக அதனதன் கடைசிப் பக்கங்களைக் கிழித்து வைத்து வாசகனின் ஆவல் சுரப்பை அதிகரிப்பது போல அடுத்தடுத்த கதைகளின் கிளைமாக்ஸை மட்டும் மறைத்து வைத்து கதைகளை நகர்த்தி க்கொண்டு போய் என்ன  நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்து… கடைசியில் புதிரை அவிழ்க்கும் முடிச்சுகளையும் அந்த வரிசையிலேயே அடுத்தடுத்து அவிழ்த்து முடிக்கிறார்கள்.

ஆறு கதைகளை மனத்தில் வைத்துக்கொண்டு முடிவுகளைத் தொடர்வது சாத்தியமா..? என்கிற எல்லோருக்கும் எழுகிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், அப்படி எந்தக் குழப்பமும் நிகழவில்லை என்பதைப் படம் பார்த்த நான் சொல்வதைப் போலவே நீங்களும் படம் பார்த்து வியந்து பார்க்காதவர்களிடத்தில் சொல்ல முடியும்.

இந்தப் படைப்பின் மூலம் ஆறு இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதுவும் எழுபது, எண்பது கலைஞர்களுக்கான படைப்பாற்றலுடன் கூடிய பணி கிடைத்திருக்கிறது என்பதும் அபாரம்.

அதுவும் ஒரே கதையை ஆறு பேரும் இணைந்து படைத்து ‘பல சமையல்காரர்கள் இணைந்து கெடுத்த சூப்’பாக ஆக்கிவிடாமல் அவரவர் படைப்புச் சுதந்திரம் அவரவர்களுக்கு… என்பதுதான் ஆந்தாலஜியின் ஆகம விதியே. அந்தச் சிறப்பு குன்றாமலும், ஏதோ இரண்டு படங்களைப் பார்த்தோமா, போதுமென்று எழுந்து போனோமா என்று பார்வையாளனையும் நகர விடாமல், கடைசிவரை பார்த்தால்தான் எந்தப் படத்தையும் முழுமையாக சுவைக்க முடியும் என்று கட்டிப் போட்டு ரசிப்புக்கும் ‘விதி’ வகுத்திருப்பதும் சிறப்பு.

பார்வையாளன் இதன் மூலம் அடையும் இன்னொரு பலன், ஒரு படத்தைச் சென்று 150 ரூபாய் கொடுத்துப் பார்த்து… ‘படம் மொக்கை…’ என்ற முடிவுக்கு வரும் சாத்தியத்தைத் தவிர்த்திருப்பது. ஆறு படங்களில் அது சூப்பர்… இது பெட்டர்… இது ஓகே…” என்று தரம்பிரித்து கொடுத்த பணத்தில் பாதியையாவது ‘செரிக்க வைக்க’ முடியும்.

இந்த ‘6 அத்தியாயம்’ அப்படியும் எது சிறந்தது என்ற விவாதத்தை வைக்க விடாமல் ‘சூப்பர் ஹீரோ’ (இயக்கம் – கேபிள் சங்கர்), ‘இனி தொடரும்’ (இயக்கம் -ஷங்கர் வி.தியாகராஜன்), ‘மிசை’ (ஈயக்கம் – அஜயன்பாலா) , ‘அனாமிகா’ (இயக்கம் – சுரேஷ் இஏவி), ‘சூப் பாய் சுப்ரமணி’ (இயக்கம் – லோகேஷ்), ‘சித்திரம் கொல்லுதடி’ (இயக்கம் – ஸ்ரீதர் வெங்கடேசன்) என ஆறும் ‘அறுசுவை’யாய் அமைந்து போனதும் சிறப்புதான். அதில் இடைவேளையில் இடம் பெறும் நகைச்சுவைப் படமான ‘சூப் பாய் சுப்ரமணி’ பத்து நிமிட இடைவேளையில் மெல்லுவதற்கான பாக்காக அமைந்திருப்பதும் சுவையான அடுக்கல்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை முதல் பாதிப் ‘புதிர்’ தந்த விறுவிறுப்பு, அதற்கான ‘விடை’ கிடைக்கும்போது  குறைவதைச் சொல்லலாம். ‘கிளைமாக்ஸ்’களை இன்னும் ஆழ்ந்து யோசித்திருக்கலாமோ..? ‘ஷார்ட் பிலிம்’ ஃபார்மேட்டுக்கு இது போதும் என்று ‘ஷார்ட் தாட்’டாக முடிவுகள் அமைந்தது சின்னக் குறை.

அந்தக் குறை தவிர்த்தால் நவீன சினிமாவில் இதுவும் ஒரு புதுமை என்றே கொள்ளலாம். கான்செப்ட் பிடித்துத்  தயாரித்த ‘ஆஸ்கி ஹட் மீடியா’ ஷங்கர் வி.தியாகராஜனுக்கு வந்தனங்களும், வாழ்த்துகளும்.

ஆனால், ‘அட… இது நல்ல ஐடியாவா இருக்கே..?” என்று ஐந்தோ, ஆறோ மொக்கைக் கதைகளுடன் இப்படியே இன்னும் சிலர் ‘ஆந்தாலஜி’க் களம் இறங்கி நம்மை ‘நொந்தாலஜி’க்குள் தள்ளினால் இதற்கு கம்பெனி பொறுப்பல்ல..!

6 அத்தியாயம் – சிறுகதைத் தொகுப்பு வாசித்த சுகம்..!

– வேணுஜி