வழக்கமாக தமிழ்ப் படங்களில் “நான் மதுரைக் காரன்டா..!” என்று ஹீரோக்கள் குரல் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் மெட்ராஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் வாலி மோகன்தாஸ் ஒரு மெட்ராஸ்காரனின் நேர்மையையும், தீரத்தையும், தியாகத்தையும் சொல்லி எடுத்திருக்கும் படம் இது.
சமீபத்திய மலையாள வரவுகளில் பளிச்சென்று அடையாளம் தெரிந்த ஷேன் நிகம்தான் படத்தின் ஹீரோ. சென்னையில் வேலை பார்த்து நாயகி நிஹாரிகாவைக் காதலித்துக் கைப்பிடிக்க நினைத்த அவர் திருமணத்தை மட்டும் தன் சொந்த கிராமத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்.
திருமணத்துக்காக இரு வீட்டாரும், கிராமத்துக்கு வந்து தங்கி இருக்க, விடிந்தால் கல்யாணம் என்கிற நிலையில் காரை எடுத்துக்கொண்டு வெளியே போகும் நாயகன் அசந்தர்ப்பமாக ஒரு விபத்தை ஏற்படுத்திவிட, அதன் விளைவு கொடூரமாக இருக்கிறது.
அதன் பிறகு திருமணம் திட்டமிட்டபடி நடந்ததா, விபத்தின் விளைவு என்ன, தான் சிக்கிய ஆபத்திலிருந்து மீண்டாரா என்பதெல்லாம் பரபரப்பான பின் பாதிக் கதையில் சொல்லப்படுகிறது.
ஷேன் நிகம் மெட்ராஸ்காரர் என்று சொல்லிக்கொள்ள பொருத்தமாக இருக்கிறார். என்ன, தமிழ் உச்சரிப்பு ஒன்று தான் அவர் சேட்டன் என்பதைத் தெரியப்படுத்தி விடுகிறது. ஆனால் மெட்ராஸ் என்பது எல்லா மொழி இனக்காரர்களின் குடியேற்ற மண்ணாக இருப்பதால் அதைப் பொருட்படுத்த வேண்டியது இல்லை.
தான் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டது தெரிந்தும் அதிலிருந்து தப்பிக்க நினைக்காமல் மனசாட்சியுடன் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்து, அதற்கான அதிகபட்ச தண்டனையையும் ஏற்றுக்கள்ளும் ஷேன் நிகம் மெட்ராஸ்காரர்களைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கலாம்.
அவரது நாயகியாக வந்தாலும் நிஹாரிகாவின் பங்களிப்பு குறைவாக இருப்பதால், ஒரு கிளாமரான பாடல் காட்சியை வைத்து காதல் சடுகுடு ஆடியிருக்கிறார் இயக்குனர்.
எதிர்பாராமல் அறிமுகமாகும் கலையரசனுக்கு ஒரு முரட்டுத்தனமான பாத்திரம். நல்ல விஷயத்துக்காக குரல் கொடுப்பவர் அல்லது அரிவாளை எடுப்பவர் என்றிருந்தாலும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற ரீதியில் அவசர முடிவுகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அந்தப் பாத்திரத்தில் அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார் கலை. உண்மையில் நடந்தது என்ன என்கிற உண்மை அவருக்குக் கடைசியில் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மாடர்ன் கேரக்டர்களில் கிளாமராக நாம் அறிந்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தாவை கிராமத்துப் பெண்ணாக… அதிலும் கர்ப்பிணியாக காட்டியிருப்பதில் இயக்குனருக்கு ரொம்ப தில்’தான். ஆனாலும் அந்தப் பாத்திரத்தை அழுத்தமாக செய்திருக்கிறார் ஐஸ்.
ஷேனின் தாய் மாமனாகி இருக்கும் கருணாஸ் பங்களிப்பு திருப்தியாக இருக்கிறது. ஆனால், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன் பொசுக் என்று காணாமல் போகிறார். அவருக்கும், ஷேனுக்குமான பாசத்தை விவரித்து சொல்லியிருக்கலாம்.
ஷேனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்கள்.
சத்தமான இசைக்கு சொந்தக்காரரான சாம்.சி.எஸ், இதில் கொஞ்சம் முன் பாதியில் இனிமையாகவும் இசை தருகிறார். இரண்டாம் பாதியில் அவருடைய வழக்கமான அடி, அதிர வைக்கிறது,.
பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் படத்தின் நேர்த்தி பல மடங்கு கூடியிருக்கிறது.
படத்தை நேர்த்தியான படமாக கொடுத்திருக்கும் வாலி மோகன் தாஸ், பின் பாதியில் நிறைய திருப்பங்களைக் கொடுக்க நினைத்து திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். முன் பாதியைப் போன்று பின்பாதியிலும் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும்.
என்றாலும் பொங்கல் வரவுகளில் திருப்தியான படமாக வந்திருக்கிறது மெட்ராஸ்காரன்.
– வேணுஜி