முட்டைகளை அடைகாத்தாலும் எந்த பறவையும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை பறந்து போ உன் பாதையை தேடு என்றுதான் விட்டு விடுகிறது. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்திக் கொண்டே இருக்கிறான்.
இந்த தத்துவார்த்தமான விஷயத்தை போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம்.
சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிய வைத்தியம் ஆகியிருக்கிறது. இதுவரை அவர் தந்த ஆரோக்கியமான துவர்ப்பு கஷாயங்களை விடுத்து இது கொஞ்சம் இனிப்பான சிரப். இதுவும் கூட சிறப்(பு..!)
தலைமுறை இடைவெளிகள் தரும் தடுமாற்றங்கள்தான் இந்தப் படத்தின் கதை.
காசைக் கரியாக்காமல் கண்டிப்புடன் வளர்த்தது அந்த காலம். அது தவறு என்று (புரிந்து?) காசை செலவழித்து பிள்ளைகளை சந்தோஷமாக வளர்த்துக் கொண்டிருப்பதாக நினைத்தாலும் அவர்களது சந்தோஷம் அதுவல்ல என்று புரிந்து கொள்வதுதான் இந்தத் தலைமுறை என்பதுதான் படத்தின் அடிநாதம்.
வழக்கமாக நாயகன் சிவாவை பார்த்தாலே சிரித்து விடுவோம். ஆனால் கடந்த சில படங்களில் அவர் என்ன செய்தும் நம்மை சிரிக்க வைக்க முடியவில்லை. ஆனால் இந்த படம் அவர் மெனக்கிடாமலேயே சிரிக்க வைத்திருக்கிறது.