படங்களில் இரண்டு வகை. உண்மையில் இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ ஆனால் மக்களுக்கு பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை ஒரு வகை.
மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை.
இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான் இந்தப்படம். ஆனால் இப்படி எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் இருக்கிறது.
இதுதான் கதை என்று அப்படியெல்லாம் இரண்டு வரியில் சொல்லி வட்டு போய்விட முடியாது. மிக விளக்கமாக இந்த படத்தின் கதையைச் சொல்லியாக வேண்டும்.
பெருநகரங்கள் தோறும் புற்றீசலாக பரவி வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களைப் பற்றி நாம் என்றைக்காவது கவனித்திருக்கிறோமா..? அதை தெளிவாக கவனித்த கிருத்திகா இந்த படத்தில் கதையை அதை மையமாக வைத்தே எழுதி இருக்கிறார்.
இன்றைய நவீன யுகத்தின் பிரதிநிதிகளாக வருகிறார்கள் நாயகன் ஜெயம் ரவியும் நாயகி நித்யா மேனனும்.
ஒரு பக்கம் பெங்களூருவில் இருக்கும் ஜெயம் ரவி தனது நண்பன் வினய்க்கு கம்பெனி கொடுப்பதற்காக தனது உயிரணுவை அதற்கான மையத்தில் சேமித்து பாதுகாத்து வைக்கிறார். வினை எதற்காக அப்படி செய்கிறார் என்றால் அவர் ஒரு ஆணைக் காதலிக்கிறார். என்றாவது குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அப்போது உதவும் என்று தனது உயிரணுவைச் சேகரித்து வைக்க அவருக்கு கம்பெனி கொடுக்க ஜெயம் ரவியும் இன்னொரு நண்பன் யோகி பாபுவும் அப்படிச் செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சென்னையில் தனது கணவருடன் செயற்கை கருத்தரிப்பு மையத்துக்கு வரும் நித்யா மேனன், செயற்கை கருவூட்டல் மூலம் ஒரு குழந்தையை சுமக்க ஆரம்பிக்கிறார்.
கதைக்கான கருவும் இங்கேதான் உருவாகிறது. பெங்களூருவில் தன் உயிரணுக்களை ஜெயம் ரவி சேமித்து வைப்பதற்காக கொடுத்தார் இல்லையா, அது தவறுதலாக டோனர் அதாவது தானம் செய்பவர் லிஸ்டில் போய் அது நித்யா மேனனின் வயிற்றுக்கு வந்து சேர்கிறது.
இத்தனைக்கும் நித்யா மேனனுக்கு ஜான் கோக்கனுடன் திருமணம் ஆகியிருக்க, ஜான் கோகனின் கள்ள உறவு பொறிந்த நித்யா மேனன் அவரை விட்டு விலகி விடுகிறார். இந்தப் பக்கம் ஜெயம் ரவிக்கு அவர் காதலி டிஜே பானுவுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், அதில் விருப்பமில்லாத பானு மாயமாகி விடுகிறார்.
கட்டடக்கலையில் நிபுணர்களான ஜெயம் ரவியும் நித்யா மேனனும் பெங்களூருவில் நடக்கும் ஒரு கட்டடக்கலை கண்காட்சியில் சந்தித்ததில் ஒருவரிடம் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் நித்யா மேனனுக்கு அதில் விருப்பம் இல்லாமல் சென்னை வந்துவிடுகிறார்.
அதற்குப் பின் எட்டு வருடங்கள் ஓடிவிட நித்யா மேனனுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்க மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். அதற்குப் பின் நடந்தது என்ன என்பதெல்லாம் மாடர்ன் டேஸ் சமாச்சாரங்கள்.
ரவி மோகன் என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு ரொம்பவும் ‘ தில்’ தான். முதல் காட்சியிலேயே உயிரணுவை சேமித்து வைக்க புறப்படும் தைரியம் வேற எந்த ஹீரோவுக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.
அத்துடன் முந்தைய படத்தை விட ஸ்மார்ட் ஆகவும், அழகாகவும், உணர்வு ததும்பும் நடிப்புடனும் இந்தப் படத்தில் மெருகேறித் தெரிகிறார்.
அதைவிட நித்யா மேனனுக்கு ‘தில் ‘ அதிகம். “நான் வெர்ஜின்தான்னு உனக்குத் தெரியுமா..?” என்று அம்மாவிடம் கேஷுவலாகக் கேட்பதில் ஆரம்பித்து (அப்போது அருகில் அப்பாவும் இருக்கிறார்…) கணவன் விரைப்புத்தன்மை இல்லாதவன் என்பாதை அவன் வாக்குமூலமாகவே சொல்ல வைத்து, செயற்கை கருத்தரிபபின் மூலம் ஒரு குழந்தையைக் கணவன் இல்லாமலேயே வயிற்றில் சுமப்பது வரை வேற லெவல் நித்யா.
இவர்களைவிட ‘தில்’லான இன்னொருவர் ஆணை மோகிக்கும் கே ஆக வரும் வினய் தான்.
இப்படி படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரங்களும் நாகரிக உலகின் உச்சாணிக்கொம்பில் நிற்க, இப்படி ஒரு கதையை இயக்க எண்ணிய கிருத்திகாவின் ‘தில்’லை என்ன சொல்வது..?
ஜெயம் ரவியின் அப்பாவாக வரும் லால், மகனின் எல்லா கூத்துக்கும் ஈடு கொடுப்பதும் கூட ரசிக்க வைக்கிறது. ஆனால் ஷாக்குக்கு மேல் ஷாக் ஆக மகள் கொடுக்க, அதை தாங்க முடியாமல் “ஒண்ணு நான் வீட்டில் இருக்கணும், இல்லைன்னா அவள் வீட்டில் இருக்கணும்..!” என்று மகளை வீட்டை விட்டு விட்டு வெளியேற்றி விடுவது சம்திங் நேச்சுரல்.
மனைவியிடமும் மகளிடமும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் நித்யா மேனனின் அப்பா மனோவின் நிலை தான் பரிதாபம்.
மாடலுக்கென்று அளவெடுத்து செய்தது போல இருக்கும் டிஜே பானுவை ரசிக்க முடிகிறது. ரவிக்கும் நித்யாவுக்கும் காதல் கொஞ்சம் கொஞ்சமாக பொங்கி வரும் நேரத்தில், ஓடிப்போன பானு திரும்ப வந்து புகைமூட்டம் போடுவது நமக்குத்தான் எரிச்சலாக இருக்கிறது.
நித்யா மேனனின் மகனாக வரும் அந்த சுட்டி பையன் ரொம்பவே கவனத்தை ஈர்க்கிறார்.
நித்யாவின் எல்லா முன்வைப்புகளுக்கும் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வினோதினியையும் ரசிக்கலாம்.
காவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவையும், ரங்காவின் கைவண்ணத்தையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பிரேமுக்கு பிரேம் ஓவியம்.
அதேபோல் ஆஸ்கார் நாயகனின் இசையும், படத்தின் தன்மையை அழகாக பிரதிபலித்திருக்கிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு கூடுதலாக இருந்திருக்க வேண்டியதில்லை.
மெதுவாக கதை நகர்வது ஒன்றே இந்த படத்தின் பலவீனமாக இருக்கலாம். ஆனால் அதுவே தான் இதை ஒரு வாழ்க்கையாக உணரச் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
படத்தில் 60% ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பதும், இது யாருக்கான படம் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
இதெல்லாம் ‘கல்ச்சுரல் ஷாக்’ என்பவர்கள் இன்னும் ஒரு 20, 25 வருடங்கள் கழித்து இதையெல்லாம் ஆமோதிக்கவே செய்வார்கள்.
அந்த வகையில்…
காதலிக்க நேரமில்லை – ஒரு காலக் கண்ணாடி..!
– வேணுஜி
*Kadhalika Neramillai Cast & Crew List*
Starring : Jayam Ravi, Nithya Menen,Yogi Babu, Vinay Rai, TJ Banu, John Kokken, Lal, Lakshmi Ramakrishnan, Singer Mano, Vinothini, Rohaan Singh
Director: Kiruthiga Udhayanidhi
Production House: Red Giant Movies Pvt Ltd
Co- Producer: M.Shenbaga Moorthy, R.Arjun Durai
Music : A R Rahman
Director of photography : Gavemic Ary
Lyricist: Snekan, Vivek, Mashook Rahman, krithika Nelson
Editor : Lawrence Kishore
choreography: Shobi Paulraj, Sandy, Leelavathi Production Designer: Latha Naidu
Art Director: Shanmugaraja
Production Executive: E. Arumugam
Distribution Manager : C. Raja
Sound Designer : Vijay Rathinam
Sound Mixing : Rahamathulla
Publicity Designer : Gopi Prasannaa
Stills: R S Raja
Costume Designer : Kavitha J, Divya Lakshana
Makeup : Raj Kennedy
Costumer : V. Moorthy
Casting Director : Varsha varadarajan
DI : Pixel Light Studio
Colorist : Ranga
VFX : R.Hariharasuthan
Dubbing Engineer : N. Venkata Pari
Subtitles : Sajid Ali
PRO : AIM Sathish