November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சாய் பல்லவியிடம் கஷ்டத்தைச் சொன்ன சூர்யா

சாய் பல்லவியிடம் கஷ்டத்தைச் சொன்ன சூர்யா

By on May 23, 2019 0 1748 Views

முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.

நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார் சூர்யா சார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது.