April 25, 2024
  • April 25, 2024
Breaking News
July 31, 2019

தொரட்டி படத்தின் விமர்சனக் கண்ணோட்டம்

By 0 1746 Views

சஸ்பென்ஸ் வைக்காமல் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாளை மறுநாள் (02-08-2019) வெளியாகவிருக்கும் ‘தொரட்டி’ படம் நன்றாக இருக்கிறது…’

நிற்க… (உட்கார்ந்தாலும் கவனிக்க…) இந்த ‘நன்றாக இருக்கிறது…’ என்ற இரண்டு வார்த்தைகளை அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையே வேறு. அதனால், எப்படி ‘நன்றாக இருக்கிறது’ என்று புரிய வைக்க முயல்கிறேன்.

‘மெர்சல்’ படம் நன்றாக இருக்கிறது என்பதற்கும், ‘அவள் அப்படித்தான்’ நன்றாக இருக்கிறது என்பதற்கும் வார்த்தைகள் ஒன்றுதான். ஆனால், பொருள் வெவ்வேறு. “நன்றாக இருக்கிறது…” என்று சொன்னதை விஜய் ரசிகர் ஒருவர் கேட்டு ‘மெர்சலு’க்குப் போனால் பிரச்சினையில்லை.

அதேபோல் கலைப்பட விரும்பி ஒருவர் ‘அவள் அப்படித்தான்’ பார்க்கப் போனாலும் பிரச்சினையில்லை. ஆனல், இருவரும் மாறி விஜய் ரசிகர் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கும், கலைப்பட விரும்பி ‘மெர்சலு’க்கும் போனால் கதை கந்தல். இதுதான் நான் சொல்ல வந்த விளக்கம்.

கலைப்படைப்பின் நோக்கமே சமுதாயத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நல்ல செய்திகளைச் சொல்வது ஒருபுறமாகவும், ஒரு மண்ணின் வாழ்க்கை முறையை, நாகரிக பண்பாட்டு நிலைகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதாகவும் இருக்க முடியும் – இருக்கவும் வேண்டும். அது எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படமானாலும் சரி, ருத்ரையா, மகேந்திரன், லெனின்பாரதி படங்களானாலும் சரி…

‘நல்லவன் வாழ்வான், தீயவன் வீழ்வான்’ என்ற செய்தியை அது பொய்யென்றாலும், நல்ல நோக்கம் கொண்டு நேர்மறை எண்ணங்களை விதைக்கும் பொருட்டு எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்கள் எளிய மக்களுக்கும் புரிய பணத்தை வாரியிறைத்து கற்பனைகள் அதிகம் இட்டுச் சொல்லி வருகின்றனர். இந்தப்படங்களுக்கு பாமர ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம் இருக்கிறது.

ஆனால், கலைப்படங்களில் ‘நல்லவன் எப்போதும் வாழ்வதில்லை — தீயவன் வாழவும் செய்கிறான்…’ என்கிற கசப்பான – இயல்பான உண்மை வெளிப்படும். அதில் வணிக நோக்கங்களும், வெகுமக்கள் ரசனையும் குறைவாகவே இருக்கும். இது யாருக்காகச் சொல்லப்படுகிறதோ அவர்களாலேயே இந்தப்படங்கள் நிராகரிக்கப்படும்.

ஆனால்… ஒரு விமர்சகன் இரண்டையும் புரிந்து மக்களுக்குச் சொல்ல வேண்டும். வெகுமக்கள் விரும்பும் படத்தையும், கலைப்படைப்பையும் இனம் கண்டு பாராட்டியே ஆக வேண்டும்.

‘ஒருமாதிரி’ புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இப்போது ‘தொரட்டி’க்கு வருவோம். ‘தொரட்டி’ எப்படி நன்றாக இருக்கிறது..?

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை நிலையை, அவர்களின் ஆசை, கோபம், காதல், விருப்பு, வெறுப்புகளை அப்படியே பதிவு செய்திருப்பதுடன் அவர்களின் பணி எத்தகையது, நாகரிக, பண்பாட்டு முறைகள் எப்படி இருக்கின்றன என்பதை தலைமுறைகளுக்குக் கடத்தும் ஆவணமாகவும் இருக்கிறது படம்.

இதில் சுகன்யா ஆடு மேய்க்கும் அபத்தம் இல்லை. அருக்காணி போல் அரிவாள்மனை கொண்டை போட்டுக்கொண்டு திரியும் அதிகப்பிரசங்கமும் இல்லை.

ஆடு மேய்க்கும் பெண் எப்படி எண்ணெய் வழியும் கருத்த முகத்துடன் இருப்பாளோ அப்படியே இருக்கிறாள். அவளுக்கு பண்ணையார் மகன் மீதெல்லாம் காதல் வரவில்லை. தன்னைப் போல் ஒரு ஆடு மேய்ப்பவனை அவன் தூரத்துச் சொந்தம் என்பதால் அருகிலிருந்து கவனிக்க வாய்ப்பிருக்க, அவன் மீது காதல் வருகிறது.

கள்வர்களின் துணை கொண்டு அவன் காவாலிப் பயலாக அலைந்தாலும் அவனது நல்வாழ்வுக்காகவும், அதற்காக தன் காலில் விழத் தயாரான ஒரு தந்தைக்காகவும் அவனை மணக்கச் சம்மதிப்பது அவள் தாயுள்ளத்தைக் காட்டுகிறது.

Thoratti Movie review

Thoratti Movie review

உச்சாணிக் கிளையில் ஏறியாவது தான் விரும்பிய நாவற்பழங்களைப் பறித்துச் சுவைத்தாக வேண்டும் என்கிற அவளது வைராக்கியம்தான், தான் விரும்பியவனையே மணப்பேன் என்ற பிடிவாதத்துடன் பெற்றவர்களையும் எதிர்க்க வைக்கிறது.

பெண் பார்க்க வரும்போதே போதையுடன் வந்த நாயகனுக்கு உறவுக்காரர்கள் மத்தியிலேயே மோர் தந்து தெளிய வைத்து அவனை பொது வெளியில் போட்டியிட வைத்து வெல்லச் செய்கிறது.

திருமணத்தன்றும் அந்தக் கிராதகன் வராமல் போய்விட, அவன் பயன்படுத்திய ‘தொரட்டி’யை அவனாக பாவித்தே தாலி கட்டிக்கொண்டு மகிழ்ந்தாலும், (இது அந்த சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் அரிய வழக்கம் என்பது பண்பாட்டுக் குறியீடு…) அவன் திரும்பி வந்தபோது அவனுக்கு முந்தி விரிக்காமல், “உன்மீது சாராய நாத்தம் போய் என்னைக்கு ஆட்டு மந்தையோட இறைச்சி வாடை வருதோ அன்னைக்குதான் என் முந்தானை கீழ விழும். என் முதுகு மண்ணுல படும்…” என்று விரட்டி விடும் வீராப்பு புரிகிறது.

அவர்கள் முதலிரவுக்கான தனிமை கருதி நாயகனின் பெற்றோர் எம்ஜிஆர் படத்துக்குப் போய்விட, அந்த இரவிலும் அவள் வீராப்பு வென்றுவிட… இரண்டாம் இரவில் வீராப்பு கலைத்து அவளே முன்வந்து மாமனார், மாமியாரை எம்ஜிஆர் படத்துக்கு அனுப்புவது ரசிக்க வைக்கிறது. அப்போது அந்த மாமியார், “எத்தனை தடவைதான் இந்த எம்ஜிஆர் படத்தைப் பாக்குறது..?” என்று புலம்பிக் கோண்டே போவது வெடித்து ரசிக்கவும் வைக்கிறது.

அப்படி மாற்றத்துக்குள்ளான கணவன் மீண்டும் சண்டாளர்கள் சேர்க்கை தேடிப்போய் போலீஸில் மாட்டிக்கொள்ள அவனை போலீஸ் ஜீப்பில் கண்ணீருடன் பார்த்து நிலை குலைந்தாலும், அவனை மீட்க குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து “பட்டாதான் அவனுக்கு புத்தி வரும். பட்டு திருந்தி வரட்டும்..!” என்று உறுதியுடன் எடுக்கும் முடிவில் கற்புக்கரசி கண்ணகியின் காற்சிலம்பையெல்லாம் தலையை சுற்றித் தூக்கி எறிந்து விடுகிறாள்.

கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டதற்காக களவாணிகளைக் காட்டிக்கொடுக்காமல் விட்டதில் அவளிடம் நாம் உணரும் பரிவு, அவர்களைத் தேடிவந்த பெரியமனிதர், திருமணமான தன் மகளின் தாலியை அன்றே அறுத்துக்கொண்டு அவர்கள் தப்பித்த கதை சொல்ல கள்வர்களைக் காட்டிக்கொடுக்க முன்வரும் வீரம் என்று… ஒரு பெண்ணின் எல்லா குண நிலைகளையும் வெளிப்படுத்தும் நாயகியின் பாத்திரப்படைப்பும், அதை ஏற்று நடித்திருக்கும் ‘சத்யகலா’வின் நடிப்பும் அபாரம்..!

நாயகன் வேடமேற்றிருக்கும் ‘ஷமன் மித்ரு’வும் அப்படியே. சினிமா ஹீரோவுக்கான எந்த மிகையும் இல்லாமல் நம்மைக் கடந்து போகிற ஒரு ஆட்டிடைக்காரனின் அப்பட்டமான பிரதிபலிப்பில் மின்னுகிறார். ரொம்பவும் நடிக்காமல் இருந்ததே அவரிடம் கண்ட நல்ல நடிப்பு..!

ஷமனின் தந்தையாக வேடமேற்றிருக்கும் அழகு, அவரது மனைவியாக வரும் பேச்சி, சத்யகலாவின் பெற்றோராக வரும் குமணன், ஸ்டெல்லா மற்றும் சண்டாளர்களாக வரும் சுந்தர்ராஜ், சீலன், முத்துராமன் யார் நடிப்பை எப்படிச் சொல்ல, அது நடிப்புதான் என்று… அப்படியே அவர்களிடம் வாழ்க்கையைக் கேட்டு வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

‘கிடை’ என்றால் என்ன, அதைப் போடுவதால் விவசாயத்துக்கு ஏற்படும் நன்மை என்ன, கிடைக்கூலி கிடைக்கப்பெறாத ஒரு ஆடு மேய்ப்பவன் கொள்ளும் கோபம் அவனை எந்த எல்லைக்கு இட்டுச்செல்லும்… பட்டிக் காவலில் நின்று கொண்டே தூங்கும் லாவகம் என்ன என்ற நுணுக்கங்களையெல்லாம் அப்படியே போகிற போக்கில் கதையினூடே தூவி விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர் பி.மாரிமுத்து.

முக்கியமாக “ஆடு மேய்க்கிறதுதாண்டா ஆதித்தொழில்…” என்றெல்லாம் அடுக்குமொழி வசனம் பேசியோ, சாதிக் குறியீடுகளைத் துருத்தியோ கதை சொல்லாமல் சொல்லியிருப்பதே ஆகச் சிறந்த இயக்கம்.

இன்னும் கேட்டால் ‘அவனைத்தான் கட்டுவேன்…’ என்ற நாயகியின் பிடிவாதத்தைப் பார்த்து அவள் அம்மா, “அரிப்பெடுத்தவ அருவாமனைல ஏறுன மாதிரி…” என்று பேசும் வசனமோ, நாயகனைப் பார்த்து நாயகி, “இழுத்து பாறையில வச்சு அறிஞ்சு உப்புக்கண்டம் போட்ருவேன்…” என்று பேசும் வசனமோ திடுக்கிட வைக்காமல் கதைக்குள் கரைந்து போகுமளவுக்கு அத்தனை இயல்பு இயக்கத்தில்.

நேர்த்தியான படமெடுக்கும் இயக்குநர்கள் வரிசையில் இந்த மாரிமுத்து ஒரு நல்முத்து.

கிளைமாக்ஸில் இறுதித் தீர்ப்பை எல்லோருமே எழுத முன்வந்தாலும் யார் எழுதிய தீர்ப்பு வென்றது என்பதில் இருக்கும் பரபரப்பும், சஸ்பென்ஸும்… அடடா..!

“ராஜாவோ…” என்று அங்கங்கே பிரமைக்குள் தள்ளும் வேத் சங்கரின் இசையில் பாடல்கள் இனிக்கின்றன. ராஜா இருந்திருந்தால் அது வேற லெவலில் இருந்திருக்கும் என்றாலும் அது நாம் ‘பார்த்த’ (கேட்ட..?) சினிமாவாக ஆகியிருக்கக் கூடும். குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் தேவையில்லாத குளோஸப், ஜூம்கள் இல்லாததும் வழக்கமான சினிமாவிலிருந்து தள்ளி நிற்கிறது.

இன்னும் பாராட்ட சினேகனின் பாடல் வரிகள் மிச்சமிருக்கின்றன. “செத்த நேரம் செத்துப் போவோம்… செத்துப் போனாலும் ஒத்தே போவோம்…” என்பது காதலின் உச்சக்கட்டம்.

இப்படி ஒரு படம் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் இந்து கருணாகரனுக்கு வெள்ளியில் ஒரு தொரட்டி செய்து பரிசளிக்கலாம்..!

இப்போது சொல்கிறேன்… ‘மெர்சல்’, ‘விஸ்வாச’ மன நிலைகளைக் களைந்துவிட்டு ஒரு வாழ்க்கையைக் காணப்போகிறோம் என்ற நினைப்புடன் திரையரங்கு சென்றால் இந்தப்படம் ஏமாற்றாது. 

இன்னொரு விஷயம் இந்தப்படம் திருட்டு டிவிடிக்களிலோ ‘அமேசான்’, ‘நெட்பிளிக்ஸி’லோ காணக்கிடைக்கும் வாய்ப்பும் இல்லாதது என்பதால் திரையரங்கு சென்று காண்பதே சிறந்த வழி.

இந்தத் ‘தொரட்டி’யை வைத்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியுமோ இல்லையோ ஆனால், அவர்கள் பறித்திருப்பது ‘நெல்லிக்கனி’ என்கிறது உள்ளங்கை.

– வேணுஜி