March 29, 2024
  • March 29, 2024
Breaking News
May 2, 2018

கண் கலங்கிய பாண்டியராஜன்… ஃபீல் ஆன பாக்யராஜ்

By 0 1180 Views

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை, திரைக்கதை இயக்கத்தில் ‘ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ்’ ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. .

பாண்டியராஜன் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் நாயகன் பிருத்வியின் தந்தை பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது..!” என தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

இதன் தொடர்ச்சியைப் போல் அமைந்தது நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியது – “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்.

பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில்தான் வரும்.

என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்..!” என்றார்.

ஃபீலிங்ஸிலும் சிஷ்யனை மிஞ்சி விட்டார் குரு..!