April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?
January 16, 2019

சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?

By 0 827 Views

பொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும் டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கக் கட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தன் கட்டவுட்டுகளுக்கு மாலை வாங்கி சூட்டுவதையும், பால் அபிஷேகம் செய்வதையும் தவிர்த்து அந்தப் பணத்தில் தங்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு வேட்டி, சேலை முதல் இனிப்பு வரை எது முடியுமோ அதை வாங்கிக் கொடுக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் சர்கார், ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியது மட்டுமல்லாமல் உயர உயர கட்டவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம், மாலை தோரணங்கள் அணிவித்தும் அதில் நடந்த விபத்தில் பலர் காயம் பட்டதும் பொது வாழ்வில் பெரும் வருத்தத்தை விளைவித்ததை எல்லோரும் அறிவார்கள். 

அவர்கள் சொல்லைக் கேட்கக் கூடிய ரசிகர்களிடம் அப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவர்கள் அறிவிக்கவோ, வேண்டுகோள் விடுக்கவோ இல்லை. மாறாக அதை அவர்கள் மௌனமாக ரசிக்கவே செய்யும் நிலையில் சிம்பு இப்படி தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பொது வாழ்வில் அவரது பெருமையைக் கூட்டியிருக்கிறது.

ஆனால், ரஜினி, விஜய், அஜித் அளவுக்கு சிம்புவின் ரசிகர்கள் அவரது படத்தைக் கொண்டாடுவார்களா, பிளாக்கில் டிக்கெட் எடுப்பார்களா, பாலாபிஷேகம் செய்வார்களா என்பது ஒரு புறம் எழும் கேள்வி.

எப்படி இருந்தாலும் தனி வாழ்வில் ஒழுக்கமில்லாதவர் என்று பெயரெடுத்த சிம்பு பொது வாழ்வில் ஒழுக்கத்தை ஏற்படுத்த முனைந்ததும், உச்ச நடிகர்களுக்கு இல்லாத தைரியம் அவருக்கு இருப்பதையும் பாராட்டியே ஆக வேண்டும்.

அந்த வீடியோ கீழே…