March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்
July 8, 2018

விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்

By 0 978 Views
புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.
 
இப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…
 
“இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு  முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார். எப்படி பேசுகிறார் என ஆச்சரியமா க இருந்தது.  என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது.
 
அத்துடன் கிராந்தி பிரசாத்  இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார். பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும். நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் “பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்” என்று .
 
“பதினாறு வயதினிலே’ படத்தின்  நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம் ,உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம், முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம். ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு  புறப்பட்டபோது ‘படப்பிடிப்பு ரத்து’ என்றார்கள். போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது. தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும்..?
 
அதே மாதிரி  நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது. எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும், பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும். வெயிலில் சுற்றினால்தான் நிழலின் அருமை தெரியும். கிராமத்தில் சொல்வார்கள்…’விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு..? வெறட்டி எதுக்கு..? என்று.
 
இந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன். படம் இந்த வகை என்று முடிவு செய்ய முடியவில்லை. அதனால் படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது..!” 
 
முன்னதாக இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , ” இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள். யார் நடித்தது என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். கடைசியில் ‘ஜங்லீ மியூசிக்’ வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன்…”புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டேன் என்கிறீர்கள்… இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே..?” என்றார். 
 
மேலும் விழாவில்  இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி, அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன், எடிட்டர் கிராந்தி குமார், தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர் .