March 29, 2024
  • March 29, 2024
Breaking News
September 21, 2018

சாமி 2 திரைப்பட விமர்சனம்

By 0 1406 Views

இயக்குநர் ஹரி ஆபீஸில் இரண்டு செட் காக்கி யூனிபார்ம்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து வடித்த கஞ்சி போட்டு இரும்பு அயர்ன் பாக்ஸில் பெட்டி போட்டால் சிங்கம் ஸ்கிரிப்ட் தயார் என்று அர்த்தம். அதுவே இன்ஸ்டன்ட் லிக்யூட் ஸ்டார்ச் போட்டு எலக்ட்ரிக் பாக்ஸில் அயர்ன் பண்ணினால் சாமி ஸ்கிரிப்ட் ரெடி என்று அர்த்தம். 

ஒரு செட் யூனிபார்மை மூன்றுமுறை வடித்த கஞ்சியில் முக்கி எடுத்த ஹரி, இன்னொரு செட்டை இரண்டு முறை இன்ஸ்டன்ட் ஸ்டார்ச் போட்டு மொடமொடக்க வைத்திருக்கிறார்.

கதை என்று யாராவது கேட்டால் கொமட்டுல ஒரு குத்து விட வேண்டியதுதான். ‘சாமி ஒன்’ பார்ட்டின் ஸேம் ‘டெம்ப்ளேட்’தான் இதுவும். அதில் திருநெல்வேலி ஜில்லாவைக் கட்டியாண்டு மொடக்கடி பண்ணிக்கொண்டிருந்த பெருமாள் பிச்சையை சாமி, காணாப்பொணமாக்கினார் அல்லவா? இதில் அவரைப் பழிவாங்க இலங்கையிலிருந்து பெருமாள் பிச்சையின் மூன்று மகன்கள் வந்து ஆறுச்சாமியைப் போடுத்தள்ள, அவர் மகனான ‘ராம் சாமி’ பதிலுக்கு ‘பிச்சை’ சகோதரர்களைப் போட்டுத்தள்ளுவது எப்படி என்பதை ஹைஸ்பீட் ஹை வோல்டேஜ், ஹை டெஸிபலில் வைத்து சொல்லியிருக்கிறார் ஹரி.

என்ன ஒன்று… அதில் இட்லியில் பீர் பிசைந்து ஆறுச்சாமி சாப்பிட்டார். இதில் இவர் ‘ராம் சாமி’ என்பதால் இட்லியில் மோர் ஊற்றி (என்னா ஹரி சார் உங்க டேஸ்ட்டு..?) பிசைந்து அடிக்கிறார். அதுக்கும் ஒரு லாஜிக் வைத்திருக்கிறார் ஹரி. இந்த ராம் சாமியை டெல்லி கணேஷ் என்ற அய்யர் எடுத்து வளர்ப்பதால் இப்படி ‘ஒழுங்கான பிள்ளை’யாக வளர்ந்திருக்கிறார் இந்த ‘ராம் சாமி’.

அதுவும் அப்பா மாதிரி போலீஸாகி விடக்கூடாதென்று சாந்த சொரூபியாக மந்திரமெல்லாம் ஓதும் அளவுக்கு அவரை வளர்த்தும் அவர்மீது காக்கிச்சட்டை பட்டால் போதும் குபுக்கென்று ஆவி புகுந்தமாதிரி வெறியாட்டம் போட்டு விடுகிறார் இந்த ராம் சாமி. அதனாலேயே ஐஏஎஸ் பயிற்சிக்குப் போனவர் அங்கே ஒரு போலீஸ் அதிகாரி உரசிவிட்டுப் போக, அடுத்த செகண்டே ஐபிஎஸ் தான் வேண்டுமென்று கேட்டு காக்கிச்சட்டையோடு வந்து டெல்லி கனேஷுக்கு ‘பர்கோலாக்ஸ்’ கொடுக்கிறார்.

அது மட்டுமா..? அதில் ஆறுச்சாமி “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா..?” என்று கலாச்சார ரீதியாக ஷாக் கொடுத்தார். இதில் இவர் ராம் சாமி என்பதால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவே மாறி ஒரு பெண் தன்னைத் தொட்டுப் பேசியதற்கே அடிக்கப் போகிறார். 

இப்படியே நாம் கதைக்குள் மூழ்கிவிடுவதால் இந்த ‘சாமி’ பாத்திரத்தில் முங்கி அதை ஏற்றிருக்கும் விக்ரம் என்ற மகா நடிகனை மறந்தே போகிறோம். எத்தனை அபூர்வமான நடிகன்..? ஆனாலும், கொடுக்கிற பேட்டிகளில் எல்லாம் “சேது’ மாதிரியேதான் ‘சாமி’க்கும் கஷ்டப்பட்டு நடித்தேன்…” என்று நியாயப்படுத்துவார். “ஆனால், சாமியில் நீங்க கஷ்டப்பட்டு நடிக்கும்போது நாங்களும் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டீயிருக்கு சீயான்..!”

விக்ரம் என்னவோ எஞ்சாய் பண்ணித்தான் அப்பாவுக்கு ஒரு ‘பாடி’ ஃபிட்டும், மகனுக்கு ஒரு ‘ஃபிட்டு’மாக நடித்திருக்கிறார். அதற்காக அவருக்கு ‘மீரா’ படத்தில் ஜோடியான ஐஸ்வர்யாவையே இதில் மாமியாராகப் பார்க்க நேர்வதில் நமக்குதான் ‘ஷாக்’. ஐஸ்வர்யாவின் மகளான கீர்த்தி சுரேஷ் இதில் சீயானுக்கு ஜோடி. 

கடந்த படங்களில் நல்ல பெர்ஃபார்மர் என்று பெயர் வாங்கிய கீர்த்தியும் ஒரு ஹாலிடே மூடில் நடித்துவிட்டுப் போயிருக்கிறார் இதில். இன்னொரு நாயகியான த்ரிஷா இதில் நடிக்கவில்லை என்பாதால் அந்த இடத்தில் சீரியல் ரேஞ்சுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை மாற்றியிருக்கிறார்கள். (ரோஜாப்பூ இடத்தில் டேபிள் ரோஸ்..?)

இதில் மெயின் வில்லன் பாபி சிம்ஹா. ஹரி படத்தில் பல ஜாதிகள் ‘மிக்ஸ்’ ஆகிக் கிடப்பது போல், இதில் பல நாட்டு அடையாளங்களும் ‘மிக்ஸ்’ ஆகிக் கிடக்கின்றன. திருநேல்வேலி ஆதிக்க ஜாதிக்காரர் கோட்டா சீனிவாசராவுக்கு இலங்கையில் ஒரு மனைவி இருந்தாளாம். (இதில் சொல்லப்படும் கதை) அவளுக்கு மூன்று மகன்கள். ஜான் விஜய், ஓஏகே சுந்தர், பாபி சிம்ஹா என்று.

அப்பா ஓடிபோய்விட்டார் என்று கேள்விப்பட்டு இலங்கையில் இருந்து கிளம்பி வரும் மூவரும் அப்பா ஓடிப்போகவில்லை, சாமிதான் கொன்றார் என்றறிந்து சாமி கதையை முடித்து திருநெல்வேலியில் தங்கள் ராஜ்ஜியத்தை நிலைநாட்ட, இப்போது ராம்சாமி வந்து அப்பா போலவே மகன் பாபிசிம்ஹாவையும் ராஜஸ்தான் பாலைவனத்தில் வைத்து காணாப் பொணமாக்குகிறார். 

சூரி என்ற நல்ல காமெடி நடிகனும் இதில் காணாப்பொணமாகியிருக்கிறார். அவர் காட்சிகளை அப்படியே வெட்டித்தூக்கினால் படத்தின் நீளமாவது குறையும்.

மட்டுமல்லாமல் வழக்கம்போல் லாரி மோதுகிறது… வில்லன்  கை நாடி கால் நாடி என்று நாடியாக பிரித்து கத்தியால் அரிந்து கொல்கிறார். 4லட்சம் அடி புட்டேஜை நாலு வினாடிக்குள் ஹைஸ்பீடில் கடத்துவதும், காருக்குக் கூட ரவுண்டு டிராலி போடுவதும், அது முடியாத இடத்தில் கேமராவையே ரவுண்டடிக்க விடுவதுமாக படம் முழுதும் ‘ஹரி ஸ்டைல்’ பொறி பறக்கிறது. 

படம் முழுதும் ஒளிப்பதிவாளர் வேலைதான் ‘டாப்’. ‘தேவி ஸ்ரீ பிராசாத்’ தன்னிடம் வழக்கமாக உள்ள டியூன்களை இன்னொரு தரம் தூசு தட்டியிருக்கிறார்.

ஆனால் இப்படியான ‘லாஜிக்’, ‘க்ளிஷே’ நியாயங்களை திரைப்படங்களில் ஒதுக்கிவிட்டு நிஜ வாழ்க்கைக்கு வந்தால், ‘ஜல்லிக்கட்டு’, ‘தூத்துக்குடி’ சம்பவங்களில் காக்கிச்சட்டைகளின் பெருமை பொதுமக்களிடம்  குறைந்து போன நிலையில் இப்படியான படங்களில்தான் போலீஸின் பராக்கிரமங்களைப் பார்த்துப் பெருமை கொள்ள வேண்டும்.

அதற்காக ஜாலி மூடில் போய் பார்த்துவிட்டு வர ஒரு ‘வீக் என்ட்’ என்டர்டெயினர் ..!