March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இக்கட்டில் கைகொடுத்த தயாரிப்பாளருடன் இணைந்தது மகிழ்ச்சி – விக்ரம்
July 24, 2018

இக்கட்டில் கைகொடுத்த தயாரிப்பாளருடன் இணைந்தது மகிழ்ச்சி – விக்ரம்

By 0 1241 Views

விக்ரம் – இயக்குநர் ஹரி இணைந்த வெற்றிப்படமான ‘சாமி’யின் இரண்டாம் பாகம் தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து…

நடிகர் சூரி –

“இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின் போது வைட் ஷாட், குளோஸ் ஷாட் என்பதைப் போல் ‘ஹரி சார் ஷாட் ’என்று ஒரு விஷயத்தைப் பற்றி பேசுகிறார்கள். டைரக்டர் ஹரி சாரோட பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ஹிந்தி நடிகர்களும் தொற்றிக்கொண்டதை நான் உடனிருந்து கவனித்து சந்தோஷப்பட்டேன்..!”

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

நடிகர் பிரபு –

“அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதை அவரிடம் கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அந்த பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்..!”

ஐஸ்வர்யா ராஜேஷ் –

“இந்த படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்க தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்..!”

கீர்த்தி சுரேஷ் –

Keerthy Suresh

Keerthy Suresh

இந்த படத்தில் சூரி, இமான் அண்ணாச்சி, சுமித்ரா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு பாடல் பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன் தான். அவர் தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன்.

என்னுடைய சிறிய வயதில் ‘அன்னியன்’ படத்தின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்தேன். அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்தேன். தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். சாமி படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இருக்கிறார்..!”

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் –

“வெற்றி பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதனை ஹரி தலைமையிலான இந்த குழுவினர் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் விக்ரம் அவர்களை ஒரு பாட்டு பாடவைக்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அவரை எந்த பாடலை பாடவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை பாடவைக்கலாம் என்று தீர்மானித்து பாடவைத்தோம். இந்த பாடல் அவருடைய ரசிகர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

Devi Sri Prasad

Devi Sri Prasad

ஆனால் பெண் குரலில் யாரை பாடவைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஷிபு சார் தான் கீர்த்தி சுரேசை சிபாரிசு செய்தார். பிறகு அவர் ஸ்ருதியில் பாடியதை கண்டு ஆச்சரியப்பட்டேன். பிறகு அவரை அழைத்துப் பாட வைத்தோம். அவர் சிறிய வயதில் இசையை முறைப்படி கற்றிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டோம். நடிகை கீர்த்திசுரேசிடமிருந்து மற்றொரு திறமையை கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இயக்குநர் ஹரி –

“தயாரிப்பாளர் ஷிபு ஒரு வெற்றிக்கரமான விநியோகஸ்தராக இருந்து தரமான தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர். ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள உண்மையான காரணத்தை நடுநிலையோடு சொல்பவர் ஷிபு. தரமான படத்திற்காக தேவைப்படும் அனைத்து செலவுகளையும் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஐந்து மாநிலங்கள், ஆறு விமான நிலையங்கள், இருபதிற்கும் மேற்பட்ட சுமோக்கள். சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி அடித்து உடைத்திருக்கிறோம். இதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையல்ல. கதை கேட்டதால் செலவு செய்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் பெருமாள் பிச்சை சாமிக்கும் ஆறுசாமியின் சாமிக்கும் இடையே நடைபெறும் போராட்டம் தான் கதை.

Vikram

Vikram

நடிகர் விக்ரம் –

“சாமி என்னை கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். தில், தூள் வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம். இயக்குநர் ஹரியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதை தவம் போல் ஓய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார்.

கந்தசாமி படத்தில் எல்லா பாடல்களையும் பாட வைத்ததற்கு இயக்குநர் சுசிக்கும், தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் நன்றி சொல்லவேண்டும். அந்தப் படத்தில் அந்த ஒரு விஷயத்தை நான் புதிதாக செய்திருக்கிறேன். அதே சமயத்தில் மற்ற இசையமைப்பாளர்களை விட தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடும் போது, பாடல்வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச்சொல்வார்.

இந்த வரிக்கு காமெடியாக முயற்சிக்கலாமா…? இந்த எமோஷனில் பாடலாமா..? என கேட்பார். இந்த படத்தில் நான் பாடிய பாடலில் கூட ஒரு இடத்தில் ‘ஏக்க்க்க்..’ என ஒரு இடத்தில் வரும். அதில் ஒரு எமோஷனை முயற்சித்திருப்போம். இது அவரின் ஸ்பெஷல். ஆனால் எனக்கு மெலோடி பாடல் பாட ஆசை. அடுத்த முறையாவது எனக்கு மெலோடி பாட்டை பாட வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.

ஒரு சிக்கலான சூழலில் ‘இருமுகன் ’ படத்திற்கு கைகொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி..!”

இந்த படத்தின் ஆடியோவை படக்குழுவினருடன் வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களான திருப்பூர் சுப்ரமணியம், பைனான்சியர் அன்புசெழியன் முன்னிலையில் படத்தின் இசை வெளியிடப்பட்டது.