March 29, 2024
  • March 29, 2024
Breaking News
November 18, 2019

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த பாபா நடிகை

By 0 1197 Views
தமிழில் ‘பாபா’, ‘உன்னை சரணடைந்தேன்’, ‘வீராப்பு’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ‘ருத்ர வீணை’, ‘அரசி’, ‘இளவரசி’, ‘பொண்டாட்டி தேவை’, ‘வாழ்க்கை’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். 
 
அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம் இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge’* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள் எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம்  பயிற்சிக்கு வருகின்றனர்.
 
இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்தினார் சந்தோஷி.. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த  லட்சுமி அகர்வால், சின்னத்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
Laxmi Agarwal

Laxmi Agarwal

இந்த நிகழ்வின்போது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் பேஷன் வாக் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

சந்தோஷி பேசும்போது, “சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன். 
 
இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறிய நாள் இன்றுதான். இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான்.
 
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, இதில் என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன். இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள்.. விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது…” என கூறினார் சந்தோஷி..
 
லட்சுமி அகர்வால் பேசும்போது, “இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம். அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என்பது கடினமான ஒன்று. 
 
2009 வரை முகத்தை மறைத்தபடிதான் எங்கும் சென்று வந்தேன். ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும். யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான். ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்.. 
 
ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன். மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும். அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்…” என்று கூறினார்
 
நடிகை நமீதா பேசும்போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி.
 
பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள். வீராங்கனைகள். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும்தான் இதற்கு தகுதியானவர்கள். வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..!” என்று கூறினார்.
Plush Event

Plush Event