April 20, 2024
  • April 20, 2024
Breaking News
January 13, 2019

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

By 0 1174 Views

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார்.

சரிதான்… ரஜினி அறிமுகம் முடிந்தது என்று நினைத்தால் ‘ஒரு மாதத்துக்கு முன்’ என்று பிளாஷ்பேக் போய் மீண்டும் ஒரு பில்டப் கொடுத்து ரஜினியை ஒரு கல்லூரிக்கு வார்டனாக வந்து சேர்வதாக இன்னொரு அறிமுகம் கொடுக்கிறார்கள். இவர் பெயர் காளி. ஓகேயா..?

இடைவேளைக்கு முன்னர் ‘பேட்ட’ என்று அதே ரஜினிக்கு இன்னொரு பில்டப்புடன் முதல் அறிமுகம் மாதிரியே மூன்றாவது அறிமுகம் கொடுக்கிறார்கள்.

எந்த வித திரைக்கதையிலும் இப்படி மூன்று அறிமுகங்கள் ஒருவருக்கே வைத்தது இல்லை. அப்படி மீண்டும் மீண்டும் பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பது இனி ரஜினி படம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஆர்வத்தினாலோ என்னவோ.?

முன்பாதிக்கதை முழுதும் ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்து சில வருடங்களுக்கு முன் வந்த ‘ஏகன்’ படத்தை ஒத்தது. அது ஷாரூக் கான் நடித்த ‘மே ஹோ நா’ படத்தின் தழுவல்.

அதில் ஷா ரூக்கான் ஒரு கல்லூரியில் மாணவராக வந்து சேர்வார். அவர் வயதுக்கு அவரை மாணவர்கள் ஆசிரியர் என்று நினைப்பார்கள். பின்னால்தான் தெரியவரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி ஆபத்தில் இருப்பதால் அவரை அன்டர்கவர் ஆபரேஷனில் காக்க வந்த ராணுவ மேஜர் இவர் என்பது. அதன் அடிநாதம் இந்தியா பாகிஸ்தான் அரசியலைக் கொண்டதாக இருக்கும்.

அதே போல மந்திரி ஒருவரின் சிபாரிசுடன் கல்லூரி ஒன்றில் வார்டனாக வந்து சேர்கிறார் ரஜினி. அங்கே படிக்கும் மாணவன் ‘சனந்த் ரெட்டி’யைக் கண்காணித்து அவனை ஆபத்துகளிலிருந்து மீட்கிறார். அத்துடன் அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்களால் அவர் அப்படி வந்து சேர்ந்ததற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று பெரிதாக எதிர்பார்க்கிறோம்.

ஆனால், ‘சவ சவ’வென்று அவரது சொந்த காரணம் ஒன்றைச் சொல்லி ‘சப்’பென்று பின்பாதியை ஆக்கிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.

ஆரம்பித்த பில்டப்பும், மந்திரி ரெகமன்டேஷனும், ரஜினி கல்லூரி மேலாளரைக் கூட மத்திக்காமல் நடக்கும் விரைப்பும் அவர் ஏதோ இந்திய அளவில் பயங்கரமான பின்னணி கொண்டவர் என்று எதிர்பார்க்க வைத்து, கடைசியில் அவர் ஒரு முன்னாள் தாதா என்கிற வழக்கமான ரூட் பிடித்து இரண்டு வன்முறைக் குடும்பங்களுக்கு இடையே நடந்த சாதாரண பழிவாங்கும் கதையாக்கி விடுகிறார்கள்.

அதற்கு ஏன் அவர் கல்லூரிக்கு வர வேண்டும்..? அவ்வளவு எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டும்..? அவர்களது சொந்த குடும்ப பிரச்சினைக்கு மந்திரி ஏன் ரெகமண்ட் செய்ய வேண்டும்..? 

Petta Review

Petta Review

அதுவும் வில்லனாக நடித்திருக்கும் சிறந்த நடிகரான நவாஸுதீன் சித்திக்குக்கு ஒரு வேலையும் இல்லை. இளவயதில் சுமாரான வில்லத்தனம் செய்கிறார். அந்த ஒடிசல் தேகம் அதற்குத் தோதாகவும் இல்லை. வயதான கெட்டப்பில் டயாலிஸிஸ் செய்துகொண்டு ரத்தக்கொதிப்பில் மானிட்டருடனேயே இருக்கிறார். அவரை கடைசியில் ‘மிஷின் கன்’னைக் கொண்டு சல்லடையாகச் சுடுவதில் பரிதாபமே மிஞ்சுகிறது.

அப்படி மரணப்படுக்கையில் இருக்கும் வில்லனைக்கொல்ல அவன் மகனான விஜய் சேதுபதியையே பகடைக் காயாக்குவது ரஜினி, விஜய் சேதுபதி இருவரின் கேரக்டர்களையுமே காலி பண்ணி விடுகிறது. நியாயப்பட்டி பார்த்தால் அடுத்தவர் குடுமபத்தில் தலையிட்டு போலீஸ், கோர்ட், கேஸ் இல்லாமல் நவாஸுதீனின் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு பிரச்சினையை பெரிதாக்குவதே ரஜினிதான் என்றிருக்க, அதற்கு நவாஸுதீன் காட்டும் எதிர் வினையில்தான் ரஜினியின் குடும்பம் அழிகிறது.

அப்போதும் கூட ரஜினிதான் பயந்து ஓடிப்போகிறார். ஆனால், கதையில் நவாசுதீன் வடக்கே போய் பெரிய தாதாவாகிறார் என்று கதை சொல்கிறார்கள். ரஜினியே தலைமறைவாக இருக்க, நவாஸுதீன் ஏன் சொந்த மண்ணைவிட்டு வெளியே போயிருக்க வேண்டும்..? கடைசியில் ரஜினியே அறிமுகப்படுத்திதான் நவாஸுதீனுக்கு, சனந்த் ரெட்டி தன் சகோதரி மகன் என்றே தெரிகிறது. அப்படியிருக்க அவரால் சனந்துக்கு ஆபத்து வரும் என்று ரஜினி எதற்காக பாதுகாப்பு கொடுத்தார்..? இப்படியெல்லாம் ஒரு நூறு லாஜிக் கேள்விகளாவது படாம் நெடுக எழுகின்றன.

ஆனால், ரஜினியை துடிப்பான பழைய ரஜினியாகக் காட்டிய ஒரே காரணத்துகாக கார்த்திக் சுப்பராஜை மன்னித்து விடலாம். 

படத்திலேயே ரஜினியைப் பார்த்து மேகா ஆகாஷ் சொல்லும் “இன்னும் நீங்க ஸ்டைலாதான் இருக்கீங்க…” என்ற வசனத்துக்குத் தோதாகவே இருக்கிறார் ரஜினி. வார்டனாக வருவதில் கொஞ்சம் வயது முதிர்ந்தவர் போல வருபவர், பிளாஷ்பேக் ‘பேட்ட’ கேரக்டரில் யூத்தோ யூத்தாகி நிற்கிறார். சிம்ரனைப் பார்த்து காதல் வயப்படும் காட்சிகள் ரகளை. போதாக்குறைக்கு அந்த ஒரே சீனில் வரும் சின்னி ஜெயந்த் “ஞா….” என்பது செம்ம ரகளை.

அவருக்காவே எழுதப்பட்ட அரசியல் வசனம் – “நாம ஏற்கனவே 20 வருஷம் லேட்…” ( “கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியே ஒரு வருஷம் ஆகுது தலைவா…” என்கிறார்கள் தியேட்டரில்…)

சிம்ரன் ரெண்டு காட்சிகளில் வருகிறார்… ரஜினியின் மனைவியாக வரும் திரிஷாவுக்கும் ரெண்டு காட்சிகள். அப்படியே ரஜினியின் இளவயதுத் தோழனாக வரும் சசிகுமாருக்கும் ரெண்டு… என்று ஏகப்பட்ட நட்சத்திரங்களுக்கு இடஒதுக்கீடு செய்தே காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

அவர்களில் விஜய் சேதுபதிக்கும், பாபி சிம்ஹாவுக்கும் மட்டுமே சற்றே பெரிய கேரக்டர்கள். ஆனாலும், அவர்கள் பளிச்சிட வழியேயில்லை. எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் ஸ்கோர் பண்ணிவிடும் விஜய் சேதுபதியும் எதிரே ரஜினி நிற்க ‘தேமே..’ என்று பரிதாபமாக நின்று ‘சூழ்ச்சி’க்கு ஆளாகிறார்.

ரஜினிக்கு அடுத்து படத்தின் கிரெடிட் ஒளிப்பதிவாளர் ‘திரு’வுக்குதான். என்ன ஒரு அழகியல்..? ஆனால், அதற்கு நேர்மாறாக அனிருத்தின் பின்னணி இசை பாடாய்ப் படுத்துகிறது. காட்சிகளுக்கு சம்பந்தமேயில்லாமல் பக்கத்து தியேட்டரின் சவுண்ட் லீக் ஆவது போல் மகா கொடுமை. பாடல்கள் ஹிட் ஆனாலும் அத்தனையும் பழைய மெட்டுகள். 

இந்தப்படத்தை ‘பாட்ஷா’வோடு ஒப்பிடுவதெல்லாம் ஹம்பக். பாட்ஷாவின் அழகே மாணிக் பாட்ஷா மகத்தான டான் ஆகவும், மாணிக்கம் அமைதியான ஆட்டோ டிரைவராகவும் இருக்கும் நேரெதிர் கேரக்டர்கள்தான். இதில் ‘காளி’யும் அடிக்கிறார். அதே லெவலில் ‘பேட்ட’யும் அடிக்கிறார். இதை ‘பாட்ஷா’ என்பதெல்லாம் ‘டகுல் பாச்சா’ வேலை. 

இதில் ரஜினிக்கு பதிலாக பிரபுதேவா நடித்திருந்தால் இது இன்னுமொரு ‘மெர்க்குரி’ ஆகத்தான் இருந்திருக்கும். ரஜினியுடன் எல்லாம் வல்ல சன் பிக்சர்ஸ் கைகோர்த்திருப்பதால் நிமிடத்துக்கு நிமிடம் ‘பேட்ட’ பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது – அதுவும் எட்டு நாள் மாநில விடுமுறை என்பது கூடுதல் பலம்.

கார்த்திக் சுப்பராஜ் கவனமாக இருந்திருந்தால் இது எல்லாக் காலத்திலும் கொண்டாடத்தக்க படமாக இருந்திருக்கும்.  

பேட்ட – விடுமுறை வேட்ட..!

– வேணுஜி