April 24, 2024
  • April 24, 2024
Breaking News
February 14, 2020

ஓ மை கடவுளே திரைப்பட விமர்சனம்

By 0 807 Views
வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது.
 
நாயகன் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் நண்பர்கள். அசோக் செல்வன் அரியரில் இஞ்சினீயரிங் முடித்தவர். இந்நிலையில் ரித்திகாவுக்கு அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் மாப்பிள்ளை பார்க்க, ரித்திகாவுக்கோ அசோக் மீது ஒரு காதல் இருக்கிறது. ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக் செல்வனைக் கேட்க நட்பில் காதலை குழப்பிக்கொள்ள விரும்பாத அசோக் செல்வனும் ஒரு கட்டத்தில் அதற்கு சம்மதிக்கிறார்.
 
திருமணம் செய்து கொண்டாலும் அசோக்குக்கு ரித்திகா மீது காதல் வரவே இல்லை. அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் கம்பெனியிலேயே அவருக்கு ரித்திகா வேலை வாங்கிக்கொடுக்க, ஒரு அடிமை போல் வாழ்வதாக உணர்கிறார் அசோக். இந்த சூழலில் அசோக் செல்வனின் சீனியர் நண்பியான வாணி போஜன் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அசோக் செல்வனும் வாணி போஜனும் நெருங்கி பழகுவது ரித்திகா சிங்கிற்கு பிடிக்கமல் போக, அதுவே இருவரும் விவாகரத்து வரை போகும் நிலையை ஏற்படுத்துகிறது. 
 
அசோக் செல்வனின் அந்தப் பிரச்சினையில்தான் ‘கடவுள் அட்வகேட்’டாக விஜய்சேதுபதி ஆஜராகி அவருக்கு இன்னொரு வாழ்க்கை வாழ, ரிவர்ஸ் கியர் போட்டு வாழ்க்கையை ரீவன்ட் பண்ணித் தருகிறார். முடிவு என்ன ஆகுமென்று குழந்தை கூட சொல்லிவிட முடியுமென்றாலும் அது எப்படி ஆகிறதென்பதுதான் சஸ்பென்ஸ் கலந்த அசத்தல் அனுபவம்.
 
நாயகன் அசோக் செல்வன் பாடு கொண்டாட்டமாக இருக்கிறது. ஒரு பக்கம் ரித்திகாவும், இன்னொரு பக்கம் வாணி போஜனுமாக, செம ஜாலியாக உலா வருகிறார். அவர் இயல்பாக நடித்தாலே மிகச்சரியாக இருக்க, அங்கங்கே ஓவர் ஆக்ட் கொடுப்பது கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. ஆனால், அவருக்கு இருக்கும் நடிப்பு ஆர்வத்துக்கு விஜய் சேதுபதியைக் கடவுளாக ஒத்துக்கொள்ள முடியாமல் லொள்ளாக சிரிப்பதையும், கௌதம் மேனன் முன்பு நடித்துக் காட்டும் ஆடிஷனையும் அடையாளம் காட்ட முடியும்.
 
ஒரு தோழியாக நாமும் உணர முடிவது ரித்திகா சிங்கின் சிறப்பு. இரண்டாம் பாதியில் ஒரு நல்ல தோழியாக அவரைக் காட்டும்போது காதலிக்கத் தோன்றுகிறது. கணவனை சந்தேகப்படும் காட்சிகளிலும், ஓங்கி ஒரு ‘பொளேர்…’ வைப்பதிலும் மனைவியாக பயமுறுத்தவும் செய்கிறார்.
 
காதலிக்கத் தோதாக வரும் வாணி போஜனுக்கு தமிழ்த்திரை சிவப்புக் கம்பளம் விரிக்கும். சின்னத்திரை நடிகையானாலும் அளவாக நடித்து அசத்தியிருக்கிறார். “ஐயோ… கொல்லுறாளே…” பாடலுக்கேற்ற அழகான ராட்சஸியாக வரும் வாணி, இளசுகளின் காதல் பசிக்கேற்ற ஃபுல் ‘போஜன்’
 
விஜய் சேதுபதி ஏற்றிருப்பது சிறிய வேடம் என்றாலும், முன்பாதி முழுக்க நிறைகிறார். படத்தின் யுஎஸ்பியாக அவர் இருப்பதால் உண்மையிலேயே அவர் படத்தின் கடவுள்தான். கூடவே இருந்து சேதுவை லந்தடிக்கும் இன்னொரு கடவுளாக ரமே‌‌ஷ் திலக் நல்ல கலகலப்பு. ‌
 
வழக்கமாக வரும் படங்களில் காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டும் ஷாரா, இதில் ஒரு நல்ல நண்பனாக வருவது ஆறுதலாகவும், அங்கங்கே ரசிக்கவும் வைக்கிறது. அவரிடம் “உனக்கு சொன்னா புரியாது…” என்று அசோக் செல்வன் அங்கங்கே சொல்வது நகைச்சுவை மட்டுமலாமல் பொருள் பொதிந்தும் இருக்கிறது. 
 
குறும்படங்களிலிருந்து பெரும்படங்களுக்கு வந்தவர்கள் கதையை நகர்த்த முடியாமல் தவிப்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களில் இந்தப்பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வித்தியாசப்பட்டு வென்றிருக்கிறார். முதல்பாதியை விட இரண்டாம் பாதி அட்டகாச நகர்த்தல். என்ன நடக்கப் போகிறதென்று முன்பே அசோக்குக்கும், நமக்கும் தெரியுமென்பதே சுவாரஸ்யம்.
 
லியோன் ஜேம்சின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. விது அய்யண்ணா ஒளிப்பதிவு காதலுக்கான வர்ணம் சேர்க்கிறது. 
 
‘ஓ மை கடவுளே’ – வேலன்டைன்ஸ் டே டிக்கெட்..!