April 19, 2024
  • April 19, 2024
Breaking News
August 8, 2019

நேர் கொண்ட பார்வை திரைப்பட விமர்சனம்

By 0 761 Views

இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது.

பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும். பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே சுற்றாமல் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அவளுக்கென்று உடற்கூறுகள் இருக்கின்றன. அதனால் ஆணைப் போல் இயங்குவது கடினம் என்றெல்லாம் காலம் காலமாகக் கூறி வந்ததை அப்படியே ஒதுக்கித் தள்ளி… அவள் ஆணைப் போல் எப்படியும் இருப்பாள். அது அவள் சுதந்திரம். அவள்… தோழியோ, மனைவியோ, பாலியல் தொழிலாளியோ யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அவள் “வேண்டாம்…” என்றால் விருப்பமில்லாமல் அவளைத் தொடாதீர்கள்… என்பதுதான் படம் சொல்லும் செய்தி.

அவள் இன்னொரு ஆணுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்தாள் என்பதற்காகவே அவளுக்கு நெருக்கடி கொடுத்து அவளைப் பலவந்தம் செய்யும் ஆணாதிக்கத்துக்கெதிராக சம்மட்டி அடியே கொடுக்கிற படம் இது.

அத்துடன் பெண்கள் மாற மாற அதைப் பார்க்கும் ஆண்களின் பார்வையும் எப்படி அத்துமீறிப்போகிறது என்பதையும் இனம் காட்டுகிற படம். மற்றபடி நாம் நன்கறிந்த வழக்கமான திரைக்கதைதான். 

வெவ்வெறு இடங்களிலிருந்து மாநகரில் வீடெடுத்துத் தங்கியிருக்கும் மூன்று இளம்பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்ந்து வர, அவர்கள் செல்லும் ஒரு கேளிக்கை விருந்து மேல்தட்டு இளைஞர்களால் அந்த நாளை மறக்க முடியாததாக மாற்றுகிறது. 

ஆண்களின் விருப்பத்துக்கு ஒத்துக்கொள்ள மறுக்கும் பெண்கள் என்னவிதமான விளைவுகளைச் சந்திக்கிறார்கள்… செல்வாக்கு மிக்கவர்கள் அவர்களை எப்படியெல்லாம் பொதுப்பார்வையில் மரியாதையைக் குறைந்து பழிதீர்க்கிறார்கள் என்பதைச் சொல்லி அந்தப் பெண்களுக்கு அஜித்குமார் எப்படி நியாயம் பெற்றுத்தருகிறார் என்கிறது கதை.

சொல்ல வந்த கருத்து ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கானதா என்றால் நிச்சயமாக இல்லை. கடந்த விஸ்வாசம் படத்தில் ஒரு எளிய சென்டிமென்ட் கதையைச் சொல்லி அஜித அன்ட் டீம் பெருத்த லாபம் பார்த்தார்கள் என்றிருக்க, அந்த வழியிலேயே போய் இன்னொரு ஹீரோயிஸம் தொணிக்கும் கதையில் அஜித் நடித்து விட்டு லாபம் பார்த்துவிட்டுப் போவது ஒன்றும் மகத்தான வேலை இல்லை.

ஆனால், ஒரு ஹீரோவுக்கான பகுதி சிறியதாக இருந்தும், இந்தக்கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்று இதில் நடிக்க ஒத்துக்கொண்ட அஜித்தைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியில் வெளியான இதே படத்தின் மூலமான ‘பிங்க்’கில் அமிதாப் இதே கேரக்டரை ஏற்றிருந்தார் என்றால் அவரது வயதுக்கேற்ற வேடம் அது. ஆனால், அஜித் அந்த வயது கேரக்டரை ஏற்க இன்னும் வருடங்கள் பல இருக்கும் நிலையில் இன்னும் இளமையான கேரக்டரிலேயே நடித்திருக்க முடியும்.

அதுவும், அறிமுகமாகும்போதே மன அழுத்தப்பிரச்சினையில் நோயாளியாக இருக்கும் ஒரு கேரக்டரில் அஜித்தைப் போன்ற வேறு ‘சேலபிள்’ ஹீரோ நடிக்க ஒத்துக்கொள்வது கடினம். இதற்கும் முன்பாதிப்படத்தில் அவரது ரசிகர்களுக்காக வைத்த ஒரு பிரமாண்ட சண்டையைத் தவிர அவர் வந்திருப்பது மிகக் குறைவான காட்சிகளே… அந்த அதிரி புதிரி ஆக்‌ஷன் வருவதற்கு முன்பு நாம் அஜித் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று நினைக்கும் அளவில் பிற நடிக நடிகையரே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித்தை நடிகராக மட்டும் பார்ப்பதற்கான படங்களில் ‘தல’யாய படம் இது. எடுத்துக் கொண்ட கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார். அவரை பயமுறுத்த ஆள்களை அனுப்பியதாகச் சொல்லும் ஜெயப்பிரகாஷிடம் “என் முகத்துல பயம் தெரியுதா..?” என்று கேட்டு அவர் பார்க்கும் பார்வையில் ஒருதுளி பயமில்லை. அதேபோல் மன அழுத்தக்காரரான அவரை எரிச்சலடையச் செய்யும் நோக்கில் பெரிய இடத்துப் பையன் நீதிமன்றத்தில் நடந்து கொள்ள முயற்சிக்க, அவனையே கேள்விகளில் துளைத்து அஜித் எரிச்சலுக்குள்ளாக்குவது ‘ஆஸம்…’

மாத்திரை எடுத்துக்கொள்ளும் நேரங்களில் அடையும் மௌனத்தையும், அமைதியையும் கூட சரியாகச் செய்திருக்கிறார். அந்த சண்டைக் காட்சி ‘டெரர்…’ ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனுக்குப் பாராட்டுகள்..! 

அஜித்துக்கு அடுத்த நிலையில் நடிப்பில் கவர்பவர் ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’. பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டாலும் அதில்  எல்லையைத் தாண்ட முடியாத தவிப்பையும், அதற்காக அடங்கிப் போகவும் முடியாத பரிதவிப்பையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார். உதவி செய்யும் அஜித்தே தன் அந்தரங்கம் பற்றிய கேள்விகளை எழுப்பும் நிலையில் அவரது இயலாமை கலந்த பார்வையைப் பாராட்டியே ஆக வேண்டும். கடைசியில் உடைந்து நொறுங்கி அஜித்தின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆறுதல் அடைவதில் ‘சிரத்தை ஸ்ரீநாத்…’ 

அவருடன் வரும் இரண்டு பெண்களில் அபிராமியும் அவர் ஏற்றிருக்கும் சோகப் பாத்திரத்துக்கு மெத்தப் பொருத்தமாக அழுத முகமாக இருப்பதுடன், வழக்கறிஞரின் கேள்விகளில் எரிச்சலடைந்து அப்போதைக்கு தப்பித்தால் போதுமென்று தவற்றை ஒத்துக்கொள்வது பரிதாபம். அதேபோல் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்த பெண்ணாக ‘ஆன்ட்ரியா தாரியங்’ அப்படியே பொருந்துகிறார்.

இந்தப்படம் மூலம் நடிகராகியிருக்கும் ‘ரங்கராஜ் பாண்டே’வுக்கு நடிப்பு நன்றாக வருகிறது. படத்தின் தன்மையைப் பொறுத்த அளவில் அவர் மீது நமக்குக் கோபம் வர வேண்டும். அது நன்றாகவே வரும் அளவில் அவரது நடிப்பு சிறப்பு.

பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் பெரிய இடத்துப் பையன்களாக வரும் அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ், சுஜித் சங்கர் சரியான தேர்வு. அவர்களின் பின்னாலிருக்கும் பெரிய மனிதராக ஜெயப்பிரகாஷும் கச்சிதம். அவர் கிளைமாக்ஸில் ஏதாவது செய்திருக்கலாம்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு உலகத்தரம். பின்னணி இசையில் கவரும் அளவில் யுவனுக்கு பாடல்களும், சிச்சுவேஷனும் கைகொடுக்கவில்லை. தனியாகவே எட்டடுக்கு மாளிகை கட்டும் இயக்குநரான எச்.வினோத் இந்த எட்டுக்கு எட்டு கதைக்குள் முத்திரை பதித்திருப்பது பெரிய விஷயம்.

படத்தில் பாஸிட்டிவ்வான விஷயமும், நெகட்டிவ்வான விஷயமும் ஒன்றேதான். அது நீதிமன்ற காட்சிகள். பின்பாதி தொடங்கியது முதல் முடிவது வரையிலும் முழுக்க நீதி மன்றம்தான். ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவையெல்லாம் பல படங்களில் பார்த்தது போலவே இருப்பது சலிப்பாக இருக்கிறது.

அஜித் அடிக்கடி மாத்திரை சாப்பிடுவது எதற்காக என்றே தெரியவில்லை. மாத்திரை சாப்பிடாத இடங்களில் 25 பேர் ஆனாலும் ‘அடிச்சுத் தூக்கி’ ஹீரோயிஸம் காட்டுகிறார். மாத்திரை போட்டுக்கொள்ளாத நீதிமன்ற காட்சிகளில் ‘பொளந்து’ கட்டுகிறார். ஆனால், மாத்திரை போட்டுக்கொண்டால் பேசக் கூட முடியாமல் தடுமாறுகிறார். அப்புறம் எதற்கு அந்தக் கருமம்… தூக்கியெறிய வேண்டியதுதானே..?

அஜித் மேல் கைவைத்தால் வழக்குரைஞர்கள் பெரிய பிரச்சினை செய்துவிடுவார்கள் என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அப்படி அஜித்தை அந்த நீதி மன்றத்தில் ஒருவர் கூட மதிப்பது போல் காட்சிகள் இல்லை. இன்னும் கேட்டால் அவரை ஆகாதவர்கள் இளக்காரமாகத்தான் பார்க்கிறார்கள்.

வித்யாபாலன் இடம்பெறும் அஜித்தின் பிளாஷ்பேக் கலர் ஃபுல்லானது. ஆனால், பல வருடங்கள் கழித்து குழந்தை உண்டான நிலையில்… அதுவும் இரட்டைக் குழந்தைகள் எனும்போது வீட்டில் ஒரு பணிப்பெண் கூட இல்லாமல் பொறுப்பில்லாமலா இருவரும் இருப்பார்கள்..? அதனால் வித்யா பாலனின் வித்தைகள் வீண்.

ஒன்று, ஒரு நீட்டான படம் கொடுக்க வேண்டுமென்று விரும்பியிருந்தால் அஜித் 25 பேரை ஒற்றை ஆளாக அடிக்கும் காட்சியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், அது ரசிகர்களுக்காக வைக்கப்பட்டது என்றால் முன்பாதியில் அந்த சண்டைக் காட்சிக்கு ஈடாக கிளைமாக்ஸில் நீதி மன்றத்துக்கு வெளியே ஒரு சண்டை வைத்திருந்தால் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளவா போகிறார்களா..? மெல்ல நகரும் பின்பாதியில் ‘பொசுக்’கென்று முடிகிறது படம்..!

வீதிக்கு வந்து பெயர் கெட்ட பின்பும் அந்தப் பெண்கள் வீட்டில் ஒருவராவது அவர்களின் செயலைக் கண்டிக்காததும் இயல்புக்கு முரணாக இருக்கிறது. அவர்களாக தங்கள் பிரச்சினையில் வென்றிருந்தால் தவறில்லை. ஆனால், அஜித் என்ற ஒருவர் வராதிருந்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகியிருக்கும்..?

படத்தில் காட்டப்படும் பாதிக்கப்பட்ட பெண்கள் செய்யும் காரியங்களைத் தங்கள் வீட்டுப் பெண்கள் செய்தால் எத்தனை குடும்பங்கள் அவர்களை ஆதரிக்க முடியும்..?

நேர் கொண்ட பார்வை – நேர்மை மட்டுமே ஜெயிக்காது… அதற்கு அமிதாப்போ, அஜித்தோ வர வேண்டும்..!