சென்னை 28 பிப்ரவரி 2025 அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் தேசிய அளவிலான, கலாச்சார திருவிழா மிலான்’25, 2025 மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ரூ.15 லட்சம் என்ற மொத்த பரிசுத் தொகையுடன் 40-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளுடன் நான்கு நாட்கள் நிகழ்வாக நடைபெறவிருக்கும் இக்கலைத் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து திறமைமிக்க பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
மார்ச் 3-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாபெரும் தொடக்கவிழா நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் திரு. அதர்வா முரளி மற்றும் Ms. காயடு லோஹார் ஆகியோர் கலந்துகொண்டு மிலான்’25 கலைவிழா நிகழ்ச்சிகளை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கின்றனர். அன்றைய இரவு நிகழ்ச்சியானது 15 உறுப்பினர்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற ராக் இசைக்குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் வழங்கும் துடிப்பான இசை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கிறது.
உலகெங்கிலும் தங்களது சிறப்பான இசை ஆல்பங்களான நவரசம் (2016) மற்றும் நமா (2019) ஆகியவற்றின் மூலம் இலட்சக்கணக்கான இரசிகர்களை கைவசப்படுத்தியிருக்கும் இந்த இசைக்குழு இதுவரை 25 நாடுகளில் 650-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்திய நாட்டுப்புற இசை, சாஸ்திரிய சங்கீதம் மற்றும் உலகளாவிய, மேற்கத்திய இசை வடிவங்களை கலந்ததாக இந்த இசைக்குழுவின் இசை பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.
மார்ச் 4-ம் தேதியன்று, புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான திரு. S. தமன் வழங்கும் சிறப்பான இசை நிகழ்ச்சி இக்கலைத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். Dookudu (2011), Race Gurram (2014), மற்றும் Ala Vaikunthapurramuloo (2020) போன்ற எண்ணற்ற வெற்றிகர திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், இந்திய இசைத் தொழில்துறையில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறார். தேசிய திரைப்பட விருதை வென்றிருக்கும் தமன், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் திரைத்துறையில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
இந்த கலைத் திருவிழாவானது, அனைத்து பங்கேற்பாளர்களின் சாதனைகளையும், உற்சாகத்தையும் கொண்டாடுகிற நிறைவுவிழா நிகழ்ச்சியோடு மார்ச் 6-ம் தேதியன்று நிறைவடையும்.
கண்களையும், மனங்களையும் கவரும் சிறப்பான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிலான்’25, என்றும் மறக்க இயலாத மாபெரும் கலாச்சார திருவிழாவாக மனங்களை கொள்ளையடிப்பது உறுதி. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த மேடையாக இருப்பதோடு, அற்புதமான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்வாகவும் இக்கலைவிழா அனைவரையும் வசீகரிக்கும்.