March 29, 2024
  • March 29, 2024
Breaking News
June 13, 2019

பா இரஞ்சித் பேச்சுக்கு கருணாஸ் பதில் அறிக்கை

By 0 793 Views

சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார் – பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்!

இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது சில விடயங்களை பேச வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் ஏதோ ஒரு விழாவில் இராசராசச் சோழனை எந்த அளவுக்கு இழிவாகப் பேச முடியுமோ அந்த அளவுக்கு இழிவாக பேசியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அவர் பேசியதின் சாரம் – மூன்று வகை, அதற்கு மட்டும் இந்த பதில்:

”இராசராசச்சோழனை அனைத்து சாதியினரும் கொண்டாடுகின்றனர். இராஜராஜன்தான் எங்கள் (தலித்) நிலங்களை பறித்தார். பெண்கள் இராசராசச் சோழன் காலத்தில் இழிவாக நடத்தப்பட்டனர்” மேற்கண்ட இந்த மூன்றின் சாரம்தான் ரஞ்சித்தின் பேச்சு!

அனைத்து சாதியினரும் கொண்டாடுவதன் மூலம் இராசராசச்சோழன் சாதி கடந்த தமிழனாக இருக்கிறார்! அதில் என்ன பிழை இருக்கிறது. தமிழனாக இருக்கக்கூடாது ஒரு குறிப்பிட்ட சாதியினராக இருக்க வேண்டும் என்கிறாரா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாருங்கள் ரஞ்சித்! சாதி இருக்கணுமா? வேண்டாமா? சாதி ஒழித்த சமூகம் தான் உங்கள் நோக்கமா? இல்லை சாதிய மையவாதம் மட்டும்தான் உங்கள் அரசியல் உங்கள்கொள்கையா? வெளிப்படையாக தர்க்க ரீதியாக பேசுங்கள்!

இராசராசச்சோழன் வரலாற்றை என்றாவது முழுமையாக படித்ததுண்டா! வரலாற்றுச் சான்றுகளோடு கருத்துரைக்க பழகுங்கள் பொத்தாம் பொதுவாக உரைப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

எங்கள் நிலத்தை இராசராசசோழன் பறித்தார் என்கிறீர்களே! எதை வைத்து சொன்னீர்கள்! என்ன சான்று?

.. “பறையர்களுக்கு இராசசச் சோழன் இறையிலி நிலம் வழங்கினார்” இதுதான் வரலாறு. பல்வேறு நூல்களிலும் கல்வெட்டிலும் இதற்கான தரவுகள் காணக்கிடக்கின்றன! அதில் ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய ஆய்வு மிக முக்கியச் சான்று! அவர் சான்றுகளை அப்படியே வரிசைப்படுத்துகிறேன். அது மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய “இராசராசேச்சரம்” உள்ளிட்ட பல கல்வெட்டு நூல்கள் சான்று காட்டுகின்றன சில தஞ்சை பெரியகோயில் கோயில் சுற்றிலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்!

சான்று:1

“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத்தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர் குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ கோயில்களும்குளங்களும் ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ் சுடுகாடும் உள்ளிட்டு இறைஇலிநிலங்களும்…’ (இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)

இக் கல்வெட்டு கூறும் தகவல், ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும்,கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள்அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை. இதிலிருந்து நாம் இப்போது அறிந்து கொள்ளும் செய்தி இறையலி நிலங்களை பறையர்களுக்குக் கொடுத்தார் என்பதே!.

அடுத்த கல்வெட்டு,

’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்துகூறிட்டமையில்…..இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின…’ (சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் /முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழுஉரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன்மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. இது நில அபகரிப்பை மீட்டு அனைவர்க்கும் வழங்கப்பட்டதற்கான சான்று!

இவற்றையெல்லாம் கடந்து பலர் தொடர்ந்து பொய்யுரைப்பதுபோல் “சோழ நாட்டு வளமான விளை நிலங்களின் பெரும்பகுதி,பிராமணர்களுக்குக் கொடையளிக்கப் பட்டிருந்தது, பிறதமிழ்க்குலத்தாரின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்பது உண்மைக்குப் புறம்பான செய்திகளாகும்.. சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாகஇருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன.எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215) என்கிறார் ஆய்வாளர் மே.து.ரா.

இது கொடையளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது.

அடுத்து, தஞ்சை பெரியல் கோயில் கல்வெட்டுகளில் உள்ள சான்று:

“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டுவரிகள் உணர்த்தி நிற்கும் சேதி, “தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்றமுறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர்குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு கூறுகிறார்:

“தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப்பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும்சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

மேற்கண்ட நூல்கள், கல்வெட்டு ஆய்வுகள் சொல்ல வந்த செய்தி என்னவென்றால் கோயில் நிலங்களை வேளாண் செய்து கொள்ள பறையர்களுக்கும், மற்றவர்களுக்கு வழங்கினார். என்பதுதுதான்! இங்கே பறையர்கள் என்று நாம் சொல்ல வேண்டியது ரஞ்சித் புரிதலுக்காக! இராசராசசோழன் காலத்தில் பார்ப்பனர்கள் தவிர்த்த அனைவரும் தமிழர் குலம்தான்! (அன்று வேளாண்மை செய்த வேளாளர் – கம்மாளர் – உள்ளிட்ட தமிழ்க்குலத்தார் பிற்காலத்தில் ஆரியர்களால் – தாழ்த்தப்பட்டவர்களாகவும் தலித்துகளாகவும், பிறசாதியினராகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது வரலாறு)

இராஜராஜன் காலத்தில் பிறப்பு வழி அடிப்படையில் சாதி இல்லவே இல்லை. தொழிற்குடி சாதிகள் தான் இருந்தன. அந்த சாதிகள் இராசச் ராசசோழனால் கெளரவிக்கப் பட்டதாகத் கல் வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.

அடுத்து ம. செந்தமிழனின் சான்றுகள்:

பெண்களை இழிவாக தேவதாசிகளாக பயன்படுத்தியது இராசராசச்சோழன் காலம்தான் என்று பேசுகிறார் ரஞ்சித்! தேவதாசிகள் என்பது வேறு! தேவரடியார் என்பது வேறு, இராசராசன் காலத்தில் இருந்தவர்கள் தேவரடியார்கள். ரஞ்சித் சொல்லும் தேவதாசிகள் விஜயநகர திராவிடர் ஆட்சியில் வாழ்ந்தவர்கள்.

தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’ (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் செய்கிறவர்கள் அல்ல!

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

பெண்களின் நிலை

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 69 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 70 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்

11 ஆம் நூற்றாண்டு – 23 பெண்கள்

14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்

15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழன் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது என்பதே வரலாற்று உண்மை

நில அளவுமுறைகள், பாசன வழிமுறைகள், வேளாண்மைக்குரிய செயல்திட்டங்கள் கோவிலுக்கு என்று அளிக்கப்பட நிலங்களின் விவரணங்கள்,பிற தமிழ்க்குலத்தார் வேளாண் செய்யது கொள்ள கொடுக்கப்பட்ட நிலங்கள், கோவிலுக்கு கிட்ட வேண்டிய வருமானங்கள், அவை எவ்வாறுசெலுத்தப்பட வேண்டும் என்னும் முறைமைகள், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதும் மற்றும் இவற்றுக்கான கணக்கு வழக்குகள்பதியப்பட வேண்டிய வழிமுறைகள் எல்லாமும் தற்போதைய சட்ட திட்ட பத்திரப் பதிவு போல் தெளிவாக கல்வெட்டுகளில் அக்காலத்திலேயே பொறிக்கப்பட்டு நமக்கு சான்று காட்டுகின்றன.

இடையறாது போர் புரிந்து கொண்டிருந்த மன்னனின் படை வீரர்கள் பலர் கோவில் சேவகத்தில் சேர்ந்தனர் என்பது கல்வெட்டுகள் சொல்லும் ஒருவியப்புக்குரிய செய்தி. கோவிலுக்கு என்று அமர்த்தப்பட்ட இசைக்க கலைஞர்களும் 18 பேர் போர் வீரர்களாக இருந்தவர்கள் என்ற கல்வெட்டு குறிப்புஉள்ளது. சில படைப்பிரிவுகளுக்கும், வணிகர்களுக்கும் சிறிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சில தேவர்களின் சந்நிதிகளுக்குதேவையானவற்றை தந்துள்ளனர்.

கோவில் கட்டும் பணிகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் அவர்களின் பங்களிப்புகளும் கல்வெட்டுகளில்உள்ளன. அது மட்டுமன்றி கோவிலை சுத்தம் செய்ய அமர்த்தப்பட்ட பணியாளர்கள், சலவை தொழிலாளர், நாவிதர், கருமார், கொடி மற்றும் குடைஏந்துபவர்கள், பல்லக்கு தூக்குபவர், பந்தம் பிடிப்போர், சமையல் செய்பவர், தேவாரம் ஓதுவோர், திருமுறை இசைப்பவர்கள் என்று கோவிலின்தினப்படி செயல்பாடுகளில் பங்கேற்கும் எல்லோரையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இதை விட ஓர் ஜனநாயக ரீதியான நிர்வாக முறையை எந்த நாட்டில் எந்த மன்னன் 1000 ஆண்டுகளுக்கு முன் செய்தான்? தமிழ்நாட்டில் தமிழன் இராசராசன் மட்டும்தான் செய்திருக்கிறான். இது தமிழர் பெருமை இல்லையா? நாம் கற்றுகொள்ள வழிகாட்டும் செயல் திட்டங்கள் இல்லையே! முன்னோர்களை போற்றாவிட்டாலும் பரவாயில்லை ஏன் பொய்யாக தூற்றவேண்டும்?

மேற்கண்ட இந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதைகளோ, வாய் வழி செய்திகளோ அல்ல! வரலாற்றுச் சான்றுகள்