March 19, 2024
  • March 19, 2024
Breaking News
May 26, 2018

தூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்

By 0 953 Views

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது…

“தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச் சம்பவம் , அண்மைக் காலத்தில் நடந்தேறியதில்லை.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் காரணம், அரசாங்கம் மற்றும் காவல்துறையின் திறமையின்மையா அல்லது திட்டமிட்டு நடந்தேற்றப்பட்ட வன்முறையா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையவோ, அங்கிருக்கும் அலுவலர்களைத் தாக்கவோ, அரசு உடமைகளுக்கு சேதமோ விளைவிக்கவில்லை என்றே நமக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் உறுதி செய்கின்றன.

துப்பாக்கிச் சூடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளேயோ அல்லது வாசற்படிக்கு அருகாமையில் கூட நடத்தப்படவில்லை. மாறாக, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்திலேதான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பதற்கு ஆதாரமாக உயிர் இழந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் சாலைகளில் தான் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களைத் தீவைத்துப் போராட்டக்காரர்கள் எரித்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவது என்பது அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நடைபெற்ற இந்த வன்முறை மிகுந்த துயரச் சம்பவம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காத தமிழ்நாடு அரசின் மவுனம், அதிர்ச்சியூட்டக் கூடியதாகவே உள்ளது.

மக்களின் ஏகோபித்த கேள்விகளாகவும், பல்வேறு தரப்பினரின் தொடர் கேள்விகளாகவும் இருக்கின்ற கீழ்க்கண்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு இதுவரை விடையளிக்கவோ, விளக்கமளிக்கவோ இல்லை.

* யார் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது?

* துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?

* துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும், குண்டுகளின் விவரங்களும் ஏன் இன்னும் அளிக்கப்படவில்லை?

* இறுதியாகத் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை?

* துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?

* இரண்டாம் நாளில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழு விவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?

காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறைச் செயலாளர் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில் கூட, நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அமைதியாகவே இருக்கிறது. எனவே, அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் தண்டனை நடவடிக்கையாக, அவர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தோ அல்லது பணியில் இருந்து நீக்கம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கு முழுப் பொறுப்பான அரசை நடத்தும் அரசியல் சக்திகளையும் தண்டனைக்குள்ளாக்குவது மிக அவசியம்.

14 பேரின் உயிரிழப்பிற்கு எவ்விதப் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிப்பதும், அதுகுறித்தக் கேள்விகளுக்குப் பதில் பதில் சொல்லாமல் இருப்பதும் மக்களாட்சியின் மாண்பிற்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், தொடர்ந்து எவ்வித சுணக்கமும், தொய்வுமின்றி தகுந்த ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்த மண்ணையும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில், மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தனது ‘மய்யம் விசில் செயலி’ மூலமாகத் தமிழ்நாடு முழுக்க இருந்து பல்வேறு அக்கறையுள்ள குடிமக்கள் மூலம் கிடைக்கப்பெற்றப் புகார்களின் மீதான நடவடிக்கைகளை, கீழ்க்கண்ட நீதி அமைப்புகள் மூலமாக முன்னெடுப்புகளை எடுக்கவுள்ளது.

* தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம்

* நீதிமன்றங்கள்

* தமிழ்நாடு ஆளுநர்

* இந்திய குடியரசுத் தலைவர்

தூத்துக்குடி வாழ் எம் சகோதர, சகோதரிகளோடு தோள்நின்று, இந்தத் துயரச் சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்று உறுதி அளிக்கிறது..!”