March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்
January 7, 2019

இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்

By 0 820 Views

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான தீனா, பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டனர்.

விஷால் பேசுகையில், “இவ்விழா மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. ஆகையால், அதற்கான வேலைகளும், இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பும் தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து வரவிருக்கும் திரையுலகப் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

Vishal

Vishal

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் கிடைக்கப் போகும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மற்ற இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம்.

பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதை பற்றி விபரத்தை வரும் ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம்தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ரூ.500-லிருந்து ரூ.25000வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸும் இருக்கிறது..!”