April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் ஆண்டனி சிறிய படங்களின் எதிரியா – பாத்திமா விளக்கம்
November 11, 2018

விஜய் ஆண்டனி சிறிய படங்களின் எதிரியா – பாத்திமா விளக்கம்

By 0 977 Views

தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது.

ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி  படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே, அவர்கள் கையை விரிக்க ‘திமிரு புடிச்சவன்’ம் படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பின்வாங்கியது.

அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 16ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘செய்’, உத்தரவு மகாராஜா’, ‘சித்திரம் பேசுதடி2’ என நான்கு படங்களின் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்திருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியின் படமும் வெளியாவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி படம் வெளியானால் தங்கள் படங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது என்று இந்த நான்கு படங்களின் தயாரிப்பாளர்களும் பதறுகிறார்கள்.

அதன் சாட்சியாக 150 தியேட்டர்களில் வெளியாக இருந்த ‘செய்’ படம் 60 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டது. ‘உத்தரவு மகாராஜா’ படத்தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அந்தப்பட ஹீரோ உதயா 16ம்தேதிக்கு சிறிய படங்கள் வெளியீட்டுக்கு இருப்பதால் விஜய் ஆண்டனியின் படத்தை வெளியிட அனுமதி தரக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

ஆக, ஏற்கனவே பெரிய படத்தால் (விஜய்யின் சர்கார்) பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி இப்போது சிறு படங்களின் எதிரி போலாகி விட்டார்.

இது குறித்து நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ‘திமிரு புடிச்சவன்’ தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியின் மனைவியுமான பாத்திமா, “தீபாவளிக்கு அதிகமான தியேட்டர்களில் சர்கார் வெளியானதால் அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வினியோகஸ்தர்கள்  தியேட்டர்கள் இல்லாததால் பின்வாங்க எங்களால் அப்போது வர முடியவில்லை. இப்போது 16ம்தேதி வெளியிட அனுமதி கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறோம். தியேட்டர் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், வெளியீட்டுத் தேதியை மட்டும் வைத்து கட்டுப்பாடு விதிப்பது எப்படி சரியாகும்..?

அத்துடன் ‘சித்திரம் பேசுதடி 2’ படம் 16ம்தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிக் கொண்டதால் தியேட்டர்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் இல்லாத நிலை இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் எங்கள் நிலையறிந்து ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்கள்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யானை வரும்போதும் குனிய வேண்டும், பூனை வரும்போதும் ஒதுங்க வேண்டும் என்பது எப்படி சரி என்பதற்கு ‘ரெகுலேஷன் கமிட்டி’தான் விளக்கம் அளிக்க வேண்டும்..!