April 23, 2024
  • April 23, 2024
Breaking News
March 7, 2020

எட்டுத்திக்கும் பற திரைப்பட விமர்சனம்

By 0 1480 Views

இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது.

இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

உலகறிந்த தருமபுரி இளவரசன் – திவ்யா திருமணத்தால் ஏற்பட்ட ஜாதி கலவரத்தையும், அதையடுத்து நிகழ்ந்த இளவரசனின் மரணத்தையும் மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கும் அவர், காதல் என்பது சாதி, மதம் மற்றும் பொருளாதாரத்தைப் பார்த்து வருவதில்லை என்பதை உணர்த்துவதற்காக மூன்று நிலைகளில் நடக்கும் காதல் கதைகளைச் சொல்லியிருக்கிறார்.

அதில் காதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் ஆணவக் கொலைகள் பற்றியும் பேசியிருக்கிறார். காதலை சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் சாதி அரசியல் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அவர் உரக்கச் சொல்லியிருக்கிறார்.

மேற்படி தருமபுரி இளவரசன் – திவ்யாவை நினைவுபடுத்தும் ஜோடிகளாக சஜுமோனும், சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் நித்தீஷ் வீரா – சவுந்திகா, தீக்கதிர் குமரேசன் – நாச்சியாள் சுகந்தி என இரண்டு ஜோடி காதலர்களாக வருகிறார்கள்.

இவரக்ளில் சாந்தினி மட்டுமே நமக்கு அறிமுகமானவர் என்பதால் கதையைத் தாங்கி நிறுத்த சமுத்திரக்கனியை முக்கியமான அம்பேத்கர் என்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கீரா. அவரது உயரமும், மிடுக்கும், தீர்க்கமான வாதங்களும் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றன. கடைசிவரையில் சஜுமோனுக்கும், சாந்தினிக்கும் புத்தி சொல்லி சூழலைப் புரிய வைப்பதில் அவரது இழப்பும் அதிகமாக இருக்கிறது.

சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடும் போர்வையில் சாதிக்கட்சி நடத்தும் அரசியல்வாதி முத்துராமன் ஒரு சமகால அரசியல் தலைவரை நினைவுபடுத்துபவராக வருகிறார். 

துணைப்பாத்திரங்களில் வரும் ராம்தாஸ், நிதிஷ் வீரா போன்றோர் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள். 

சிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப பயணித்திருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் பரவாயில்லை.

கருத்து என்னதான் உக்கிரமாக இருந்தாலும் அதை சினிமா மொழியில் சொல்ல இயக்குநர்களுக்கு இருக்கும் சவால் படத்தின் பட்ஜெட்தான்.அந்த வகையில் கையில் என்ன கிடைத்திருக்கிறதோ அதை வைத்து ஒரு நியாயமான படத்தைத் தந்திருக்கிறார் கீரா. இன்றைய தொழில்நுட்ப நேர்த்திமிக்க சினிமாவில் இதுபோன்ற பட்ஜெட் படங்கள் வணிக ரீதியாக போட்டியிட முடியாது.

ஆனால், சமூக நீதிக்காக படம் பேசியிருப்பதால் வரவேற்கலாம்.

‘எட்டுத்திக்கும் பற’ – காதலுக்கு ஆதரவுக் குரல்..!