March 19, 2024
  • March 19, 2024
Breaking News
February 7, 2019

தில்லுக்கு துட்டு 2 திரைப்பட விமர்சனம்

By 0 1069 Views

சரவணபவனில் என்னதான் மட்டன் பிரியாணி செய்து போட்டாலும் அங்கே வருபர்கள் மசால் தோசைக்கும், சாம்பார் வடைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் இயல்பு. அப்படித்தான் என்னதான் சந்தானம் ஹீரோவாகி விட்டாலும் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதென்னவோ ‘காமெடி’யைத்தான்.

அப்படி இப்போது வந்திருக்கும் அவரது சொந்தப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ நம் எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததற்கு மேல் நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இது ஆவி சம்பந்தப்பட்ட படம் என்பதால் அப்படியே ஆரம்பிக்கிறது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகி ஷ்ரிதா சிவதாஸை ஒருவன் காதலிப்பதாக சொல்ல, அவனை ஆவி அடித்துக் கொல்கிறது. அதேபோல் ஷ்ரிதா வேலை பார்க்கும் மருத்துவமனை டாக்டரும் காதலிக்க முயல, ஆவி அவரைப் புரட்டி எடுக்கிறது.

அதை வைத்து அந்த டாக்டர் தங்கள் ஏரியாவில் அலப்பறை பண்ணிக்கொண்டு அமைதியைக் கெடுக்கும் சந்தானத்தைப் பழிவாங்க, ஷ்ரிதாவை அவருடன் பழக வைத்துக் காதலை ஏற்படுத்த முயல்கிறார். அப்படி சந்தானம் ஷ்ரிதாவைக் காதலித்தால் அவரை ஆவி கொன்று விடும் என்பது அவர் திட்டம். அந்தத் திட்டப்படியே சந்தானம் காதலிக்க ஆரம்பிக்க… என்ன ஆகிறதென்பது கதை.

படம் முழுதும் சந்தானத்தின் ராஜ்ஜியம் என்றாலும் முதல் பாதியில் அவரது நகைச்சுவை அதிரி புதிரியாக இருக்கிறது. அவரது அலப்பறையை முடிவுக்குக் கொண்டு வர, அந்த ஏரியாவாசிகளே அவருக்கு சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டு, அதன் விளைவாக சந்தானம் ஏற்படுத்தும் எதிர்வினையிலிருந்து தப்பிக்க எல்லோருமே மாலை போட்டுக் கொள்வதும் ‘கல கல’. ஒரு கைவலியை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே திக்குமுக்காடுகிறது.

கேரளாவே அஞ்சி நடுங்கும் மாந்திரீகரிடம் சந்தானமும், ‘மொட்ட’ ராஜேந்திரனும் அரங்கேற்றும் அமளிகளும் ‘லக லக’. இதற்கெல்லாம் ஒத்தாசையாக திரைக்கதை, வசனங்களை அமைத்த இயக்குநர் ராம்பாலாவின் திறமையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஷ்ரிதா அப்படியொன்றும் அழகியில்லை. ஆனால், அந்த அப்பாவித்தனமான முகமும், பார்வையும் கொள்ளை கொள்கிறது. சந்தானத்தை காதலிக்கவும் முடியாமல், தவிர்க்கவும்ம் முடியாமல் ஷ்ரிதாவின் பாடு… பாவம் பெண் குட்டி..!

ரொம்ப நாள் கழித்து ‘மொட்ட’ ராஜேந்திரன் காமெடிக்கு மனம்விட்டு சிரிக்க முடிகிறது இந்தப்படத்தில். அந்த மருத்துவமனை காமெடி ஒன்று ‘ரொம்ப ஓவர்’ என்றாலும் தியேட்டர் கிழிகிறது.

சந்தானத்தின் ஏரியா ஆள்களாக வருபவர்கள் அனைவருமே சந்தானம் பட நிலைய வித்வான்கள்தான் என்றாலும் சிரிக்க… ரசிக்க வைக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஊர்வசி வந்து அவரும் அலப்பறைகிறார்.

முதல் பாதியில் பயமும், காமெடியுமாக பிரிந்து ரசிக்க வைத்த திரைக்கதை இரண்டாம் பாதியில் அப்படியே மாறி காமெடியாகி விடுகிறது.

படம் காமெடியாக நகர்ந்தாலும் ஷபீரின் இசை பயமுறுத்திக்கொண்டே இருப்பது பலம்தான். தீபக் குமார்பதியின் ஒளிப்பதிவும் நன்று.

அங்கங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்களை சென்சார் கண்கள் மற்றும் காதுகளிலிருந்து எப்படித் தப்புவித்தார்கள் படக்குழுவினர் என்பதும் ஒரு ‘திரில்’தான்..!

இந்தப் படத்தைத் தைரியமாக தயாரித்திருக்கும் சந்தானத்தின் ‘தில்’லுக்கே வெற்றி ‘துட்டா’கத் திரும்பி வரும்.