April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் அஜித் இருந்தால்தான் நல்ல கருத்தைச் சொல்ல முடியுமா – தாதா இயக்குநர்
August 12, 2018

விஜய் அஜித் இருந்தால்தான் நல்ல கருத்தைச் சொல்ல முடியுமா – தாதா இயக்குநர்

By 0 1000 Views

‘கலை சினிமாஸ்’ வழங்கும் ‘தாதா 87’ படத்தின் நாயகனாக சாருஹாசன் நடிக்க, அவருடன் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, நவீன் ஜனகராஜ், கதிர், பாலாசிங், மனோஜ் குமார், சரோஜா பாட்டி உள்ளிட்டோர் நடிக்க, நெடுநாளைக்குப் பிறகு இதில் ஜனகராஜ் நடிக்கிறார்.

‘விஜய் ஸ்ரீஜி’ இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் முக்கிய விருந்தினராக கௌதமி கலந்துகொண்டார். விருந்தினர்கள் பேசியதிலிருந்து…

மனோஜ்குமார் –

‘தாதா 87’ படத்தின் இயக்குநர் மட்டுமல்லாமல் உதவி இயக்குநர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். ஈரமான என் தலையை துடைத்தால் கூட “துடைக்காதீங்க சார்… அடுத்த ஷாட் ரெட் ரெடி..!” என்பார்கள். என் சட்டையைக் கசக்கி விட்டு கன்டியூனிட்டி கெடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

சாருஹாசனுக்கு தேசியவிருது பெற்றுத்தந்த கன்னடப்படமான ‘தாபரின கதா’ எனக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து அப்போது சட்டத்தில் திருத்தம் வந்ததைப் போல் இந்தப்படத்தில் சொல்லப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களையவும் சட்ட திருத்தம் வர வேண்டும்..!”

Dhadha 87 Audio launch

Dhadha 87 Audio launch

கவிஞர் சினேகன் –

“சிங்கப்பூரில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வைத்திருக்கும் செல்போனில் நடு பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த பத்தாவது நிமிடத்துக்குள் அங்கு காவல்துறை வந்து நிற்கும். அப்படி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த சில மணிநேரங்களில் ஆட்சிக் கலைப்பே நடைபெறும் அளவுக்கு சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன். அதனால்தான் கடந்த 25 ஆண்டுகளில் அங்கே குற்றங்களே நடைபெறவில்லை.

கேரளாவில் வெள்ளம் வந்து தமிழ்நாட்டுக்கு உபரியாக வரும் நீரையெல்லாம் தேக்கி வைக்க வழியில்லாமல் கடலில் கலக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். இருக்கும் தண்ணீரை சேமிக்கத் தெரியாமல் அடுத்த மாநிலத்திடம் எப்போதும் போராடிக்கொண்டிருப்பது என்ன நியாயம்.?”

கௌதமி –

“இங்கு பேசியவர்கள் எல்லோருமே படத்தைத் தாண்டி பலவித கருத்துகளைப் பேசியது வியப்பாக இருந்தது. இங்கு நான் வந்ததற்கு முக்கியக் காரணம் சாரு அண்ணா. அவரிடம் தோழமையுடன் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். பேசியிருக்கிறேன் என்பதைவிட அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது சரியாக இருக்கும்.

இந்தப் படத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கும்போது மனிதத்துடன் யோசித்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்..!”

Dhadha 87 Audio launch

Dhadha 87 Audio launch

சாருஹாசன் –

“யோசித்துப் பார்க்கும்போது நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவர்கள் எல்லாம் சட்டம் படித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களால் சமுதாயத்தைப் பற்றி சரியாக சிந்திக்கத் தெரிந்திருக்கிறது. இந்தப்பட இயக்குநரும் சட்டம் படித்தவர்தான். அதன் அடிப்படையில் சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைப் படத்தில் சொல்லியிருக்கிறார்..!”

இயக்குநர் விஜய் ஸ்ரீஜி-

“விஜய், அஜித் கிடைத்தால்தான் நல்ல கருத்துகளைச் சொல்ல முடியும் என்ற நிலையில் ‘அருவி’ போன்ற சிறிய படங்களும் நல்ல கருத்துகளைச் சொல்லின. அப்படித்தான் இந்தப்படத்திலும் வயதான சாருஹாசன் அவர்களைப் பார்த்து நீங்கள்தான் இந்தப்படத்தின் ஹீரோ தாதாவாக நடிக்க வேண்டும் என்றேன். “நான் தாதா அல்ல, தாத்தா…” என்றார்.

ஆனாலும், ஒத்துக்கொண்டு அற்புதமாக நடித்திருக்கிறார். யார் சொன்னாலும் நல்ல கருத்துகள் எடுபடும் என்பதன் அடையாளம்தான் அவர் பெண்களின் பாதுகாப்புப் பற்றி பேசியிருக்கும் படத்தின் டீஸர் உலகமெங்கும் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இங்கே பெண்களுக்கெதிரான குற்றங்களைக் குறைக்க சிகரெட், மது பானத்துக்கு டிஸ்கிளைமர் போடுவது போல் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் களையவும் போட வேண்டும். இதுதான் மிக முக்கிய பிரச்சினை.

அதிலும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இயற்றப்பட வேண்டும் என்பதுடன் பெண் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ சொல்லிக் கொடுப்பதைவிட ஆண் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து பழக்க வேண்டும்..!”