April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்
August 7, 2018

ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்

By 0 1057 Views

இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம், ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்ட அன்னார், தனது 14-வது வயதிலேயே சமூக இயக்கங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். கலைஞர் கருணாநிதி அவர்கள், 1957 ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சிறப்புக்குரியவர். சமூக நீதிக்காகப் போராடியவர்

கருணாநிதி அவர்கள் 1969 -ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

அரசியல் மட்டுமன்றி , தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர்

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் ஆன்மா சாந்தியடையை நான் பிரார்த்திக்கிறேன்”