April 25, 2024
  • April 25, 2024
Breaking News
December 1, 2019

மனைவியால் தயாரிப்பாளரான சீயான்கள் ஹீரோ

By 0 592 Views
Director Vaigarai Balan

Director Vaigarai Balan

‘சேது’ படம் மூலமாகத்தான் சீயான் என்ற பெயரே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அறிமுகமானது. ‘சீயான்’ என்றால் என்ன என்று இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. அதன் அர்த்தம் ‘பெரிசு’ என்பதாகும்.

இப்போது ஒரு சீயான் அல்ல… 7 சீயான்களை வைத்து ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சீயான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.

“வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மணம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும்..!” என்ற இயக்குநர் வைகறை பாலன் இதற்கு முன் வீட்டுவாடகைப் பிரச்சினையை பிரதானமாக வைத்து ‘கடிகார மனிதர்கள்’ என்ற நேர்த்தியான படைப்பைத் தந்தவர்.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் பற்றி தொடர்ந்தார் இயக்குநர் வைகறை பாலன்…

“வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக ‘சீயான்கள்’ படம் இருக்கும்.

இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். ‘சீயான்கள்’ என்பது கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின் வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம்.

உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும் கூடயே வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம். இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும் அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்..!”

தயாரிப்பாளரும் படத்தின் நாயகனுமான கரிகாலன் சொன்னது நெகிழ்ச்சியான விஷயம்…

“இந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாபாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால் தான் இப்படம் நடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம் இருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட இருக்கிறோம்..!”

இப்படியான மனைவி அமைந்தது கரிகாலனுக்கு இறைவன் கொடுத்த வரம்தான்..!