ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.
தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கரவொலி எழுப்பினர். பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் பேசுகையில், ‘தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோடை மழை பெய்தது. கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ.. அந்த அளவிற்கு இந்தப் படமும் அபூர்வமான திரைப்படம். இயக்குனர் அறிவழகன் என்பது அறிவு- அழகன் என காரணப்பெயராகிவிட்டது. இதைவிட சிறப்பாக அவரது பெற்றோர்கள் இவருக்கு பெயர் சூட்ட இயலாது.
இன்று பிறந்திருக்கும் ‘பிலவ’ ஆண்டிற்கான அர்த்தத்தில் ‘தாவி குதித்து’ என்ற ஒரு பொருளும் உண்டு. அதேபோல் இந்த ஆண்டில் திரை கலைஞர்களுக்கு ‘தாவிக்குதித்து அடையும் வெற்றி போல்’ பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நாளில் ‘பார்டர்’ படத்தையும், அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்..!” என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்,’ இன்னும் ‘ஈரம்: குறையாமல் இருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் திரைப்படங்களுக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு ரசிகர்களை வரவழைப்பது தான் சவாலான பணியாக இருக்கிறது. அதற்கான பணியை இந்த படக்குழுவினர் மிகப்பொருத்தமாக செய்திருக்கிறார்கள்..!”என்றார்.
இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,’ இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது.
‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.
எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் ‘பார்டர்’ இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.
‘குற்றம் 23’ படத்திற்கும், ‘பார்டர்’ படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார். ‘பார்டர்’ படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம். இந்த ‘பார்டர்’ திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்..!” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில் “என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான்.
இதற்குமுன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.
நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..!” என்றார்.
இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.