April 20, 2024
  • April 20, 2024
Breaking News
March 13, 2020

அசுரகுரு திரைப்பட விமர்சனம்

By 0 1655 Views

இதுவரை ஹீரோக்கள் கொள்ளைக்காரனாகிய ‘ராபின் ஹுட்’ வகைக் கதைகள் நிறைய வந்ததுண்டு. இதுவும் அப்படி ஒரு கதைதான். ஆனால், இதில் ராபின் ஹுட் போல ஹீரோ விக்ரம் பிரபு கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதில்லை. ஏன்..? அவரே அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட குடிப்பதில்லை. ஏன் என்பதுதான் இந்தப்படத்தில் இயக்குநர் ராஜ் தீப் சொல்லியிருக்கும் புதுமை.

படத்தின் ஆரம்பத்தில், ஓடும் ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு விக்ரம்பிரபு கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு சம்பவத்தை நினைவில் ஏற்றுகிறது. அந்தக் காட்சி நிமிர்ந்து உட்கார வைப்பதும் உண்மை.

இப்படியாக… ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்தபடியே, மிகப் பெரிய கொள்ளைகளில் ஈடுபடும் விக்ரம் பிரபு, அப்படி ஒரு போதைப் பொருள் தாதாவின் பணத்தையும் திருடிவிட, பிரச்சினை ஏற்படுகிறது. இதையடுத்து, காவல்துறை ஒரு புறம், தனியார் துப்பறிவாளர் மறுபுறம், போதைப் பொருள் தாதா இன்னொரு புறம் என பலமுனைத் துரத்தலுக்கு உள்ளாகிறார் விக்ரம்பிரபு. இது ஒரு பாதி.

அவர் ஏன் அப்படிச் செய்கிறார்… எப்படி இவற்றில் இருந்தெல்லாம் மீண்டார் என்பது மீதி.

இதுவரை நல்லவராகவே நாம் பார்த்துப் பழக்கப்பட்ட விக்ரம் பிரபுவை இதில் கொள்ளைக்காரனாக பார்ப்பதே வித்தியாசமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரி புதிரியாக அதகளம் செய்கிறார். எந்த சிக்கலிலும் பதற்றம் காடாமல் நடித்திருக்கிறார். ஆனால், அணியும் காஸ்ட்யூம்களில் கவனம் செலுத்த வேண்டும் அவர். வில்லன்கள் டி ஷர்ட் எல்லாம் அணிந்து ஸ்மார்ட்டாக இருக்க, இவர் ஒரு பெரிய முழுக்கை சட்டையுடனேயே படம் முழுவதும் வருவதைப் பார்க்க பாவமாக இருக்கிறது. 

நாயகி மஹிமா நம்பியார் விக்ரம் பிரபுவைப் பிடிக்க நியமிக்கப்பட்டு அவரை வீழ்த்தி, பின் அவரது நிலை கண்டு காதலில் வீழ்கிறார். கொஞ்சம் முன்பாதியிலேயே இந்த காதல் வந்திருந்தால் பின்பாதியில் வைத்து லேட்டாக வரும் டூயட்டை நாம் பார்க்க நேர்ந்திருக்காது.

இஸ்லாமியர் என்றாலே ஹவாலா தொழில் செய்பவராகவோ, கள்ளக் கடத்தலில் ஈடுபடுவராகவோ இருக்க வேண்டுமென்பது சினிமா சட்டம் போல. நாகிநீடு அப்படி ஒரு இஸ்லாமியராக வர, அவர் ஒரு வில்லன். அவர் தவிர விக்ரம் பிரபுவை வேட்டையாடத் துடிக்கும் காவல் அதிகாரி சுப்பராஜு கடைசியில் இன்னொரு வில்லனாகிறார்.

வழக்கமாக காமெடியனாக வரும் நண்டு ஜெகன், இதிலும் அங்கங்கே சிரிக்க வைத்தாலும் ஹீரோவுக்கு சீரியஸான நாண்பனாக வருகிறார். அவர் சிரிக்க வைக்க அதிகம் வழியில்லாமல் போக, அந்த வேலையை யோகிபாபு ஏற்கிறார். அவருக்கும் இட ஒதுக்கீடு குறைவு.

கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைக்க சைமன் கே கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இருவரின் பணியும் நிறைவாக இருக்கிறது. ராமலிங்கம் ஒளிப்பதிவில் ரயில் கொள்ளை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் வேகம் பெற்றிருக்கின்றன.

வித்தியாசமான கதைக்களத்தைப் பிடித்துவிட்ட இயக்குனர் ராஜ் தீப், திரைக்கதையில் குறிப்பாக பின்பாதியில் எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்திருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும். கொள்ளையடிக்கப்பட்ட அத்தனைப் பணமும் கடைசியில் அரசாங்க வசம் கிடைத்தது நேர்மையாக இருக்கிறது. 

படம் முழுவதும் பணமாக இறைந்து கிடக்க, கணக்கு பார்க்காமல் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி சதிஷுக்கு படத்தின் முடிவைப் போலவே போட்ட பணம் முழுவதும் திரும்பக் கிடைத்தால் நலம். 

அசுர குரு – தூக்கு… துரத்து..!