April 25, 2024
  • April 25, 2024
Breaking News
November 16, 2019

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

By 0 1020 Views

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது. 

அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில் அதிகாரி. மூவருக்குமான முக்கிய அடையாளம் எல்லோரும் வடிகட்டிய நல்லவர்கள் என்பது.

நட்புக்காக 4000 கோடி ரூபாய் புராஜக்டை வின்சென்ட் அசோகனுக்கு ராம்கி பெற்றுத்தரும்போதே வில்லங்கம் வரும் என்று தோன்றுகிறது. இன்னொரு பக்கம் அகில இந்தியக் கட்சி ஒன்றுடன் கூட்டு வைத்து தமிழக தேர்தலை சந்திப்பதற்காக அந்தக் கட்சித்தலைவர் தமிழகத்துக்கு வரும்போது அவர் குண்டுவைத்துக் கொல்லப்படுகிறார். அந்தப்பழி ராம்கி மீது விழ… அசந்தர்ப்பமாக அவரும் கொல்லப்படுகிறார்.

இன்னொருபக்கம் விஷாலுடன் வீரதீரமாகப் பணியாற்றும் தமன்னாவுக்கு விஷால் மீது ஒரு கண் இருக்க, விஷாலுக்கோ தன் சகோதரி மகள் ஐஸ்வர்யா லட்சுமி மீது இரண்டு கண்ணும் இருக்கிறது. தமன்னா காதல் தியாகியாகும் வேளையில் நல்ல வேளையாக (அட… இந்த நல்லவேளை தமன்னாவுக்குங்க…) ஐஸ்வர்யா லட்சுமியும் கொல்லப்பட (!)…

மேற்படி எல்லா காரணங்களுக்கும் விடை தேடி உலகெங்கும் பயணப்பட்டு வில்லன்களைக் கண்டுபிடித்து விஷால் பழி தீர்ப்பதுதான் கதை.

விஷாலுக்கு இது இன்னுமொரு ‘சண்டக்கோழி’ என்ற அளவில் அப்படியொரு ஆக்‌ஷன் கதாபாத்திரம். படம் நெடுக அவர் ஓடிக்கொண்டேயிருக்கிறார். யாரையாவது துரத்திக் கொண்டோ, பெண்டெடுத்துக் கொண்டோ இருக்கிறார். அது அவருக்குப் பொருத்தமாகவும் இருக்கிறது. அத்தனைப் பெரிய அன்பான குடும்பம் அமைந்தும் அவருக்கு ‘சென்டிமென்டல் ரியாக்‌ஷனு’க்கு வழியில்லாமல் செய்து விடுகிறது ‘சீரியஸ் ஆக்‌ஷன்.’

தமன்னாவையும் இதில் லேடி ஜேம்ஸ் பாண்ட் ஆக மாற்றியிருக்கிறார் இயக்குநர். விஷால் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரால் செய்ய முடிகிறது – கூடவே காதலிக்கவும். ஆனால், அதைப் புரிந்துகொள்ள முடியாத எந்திர மனிதனாக விஷால் வருவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஐஸ்வர்யா லட்சுமி எதற்கு வந்தார்… எதற்கு விஷாலைக் காதலித்தார்… எதற்கு உயிரை விட்டார் என்றே தெரியவில்லை. ஆனால், அவரைவிட வில்லியாக வரும் அகன்ஷா பூரி… ‘அடங்கா சூரி’யாக மாறி… பின்னியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். என்னா டான்ஸ்…? என்னா ஃபைட்..? என்னா கிளாமர்..?” முதல்பாதிப்படத்தை கண்கொட்டாமல் பார்க்க வைப்பது இவர்தான்..!

இடைவேளைக்குப் பின் பாகிஸ்தான் தீவிரவாதம்… இந்தியாவுக்குள் சதி வேலைகள் செய்து லாகூரில் தஞ்சம் புகுந்த இன்டர்நேஷனல் வில்லன், அவன் மகளுக்குக் கல்யாணம் என்று வேறு பாதையில் திரும்பும் கதை பிரமாண்டத்துக்காக மட்டும் உதவுகிறது. 

அந்த வகையில் 90 நாள்கள் துருக்கி, அசர்பைஜான், லண்டன், லாகூர் என்று பயணப்பட்டுப் படம் பிடித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். என்ன ஒன்று கொஞ்சம் நம்பகமான திரைக்கதை வைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும்.

‘டட்லி’யின் ஒளிப்பதிவு அபாரம். மேற்படி நாடுகளுடன் தமன்னா, அகன்ஷா பூரியிடமும் நாம் காணாத பகுதிகளையெல்லாம் குளிர்ச்சியாகக் காட்டி தியேட்டரின் குளிர்பதனத்தை இன்னும் கூட்டியிருக்கிறார். ஆனல், அந்த அளவுக்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆனால், துருக்கியிலிருந்து விஷாலும், தமன்னாவும் சாலை வழியே பயணப்படும் காதல் வழிப் பாடலும், படப்பிடிப்பும் ‘கிளாஸ்’.

ஆக்‌ஷன் – அதேதான்..!