April 19, 2024
  • April 19, 2024
Breaking News
October 2, 2018

96 படத்தின் திரை விமர்சனக் கண்ணோட்டம்

By 0 2122 Views

இப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’

‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..!”

முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண வடிவம் காட்டிக் களிக்க வைக்கும் ‘கலைடாஸ்கோப்’பை நினைத்துக் கொள்ளுங்கள். அதை ரசிப்பதற்குக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எப்படி இல்லையோ அப்படியே காதலுக்கும்.

மொத்த உயிர்களுக்கும் ஒத்த உணர்வான காதல் ஒவ்வொரு மனத்தின் திருப்புதலுக்கும் வேறு வேறு வடிவம் காட்டி லயிக்க வைக்கும் ஜால வித்தையை அப்படியே திரையில் இயக்குநர் பிரேம் குமார் மொழிபெயர்த்திருக்கும் முயற்சிதான் இந்தப்படம்.

படத்துக்குப் படம் காதலைத் தவிர ஒன்றுமில்லைதான். ரஜினியோ, கமலோ விஜய்யோ, அஜித்தோ காதலிக்காத படங்களில்லை. பார்த்த நிமிடத்தில் காதல் அரும்பி “ஐ லவ் யூ…” சொன்ன நிமிடத்தில் ‘கட்’ பண்னினால் “பாட்டு வரப்போகுதுடா…” என்று பார்வையாளனின் பாத்ரூம் அவசரம் பீறிட்டுக் கிளம்பும் வகையில் அமைவதுதான் சினிமாவில் ’95’ சதவிகிதம் சொல்லப்பட்ட காதல்கள்.

ஆனால், அந்தக் காதல்களுக்கும் ’96’ படம் சொல்லியிருக்கும் காதலுக்கும் இருக்கும் பெருத்த இடைவெளி, இதன் திரைக்கதை உயிர்களின் ஓரமாக உரசி உணர்வுகளைத் துல்லியமாகப் படம் பிடித்து எழுதப்பட்டிருப்பதுதான்.

திடீரென்று மலையாளத்தில் ஒரு படம் வரும். “இந்த மாதிரிப் படம் எடுக்கிறதுக்கு இங்க எவன் இருக்கான் சொல்லுங்க. அந்த தைரியம் இங்க நம்ம தமிழ் டைரக்டர்களுக்கு வருமா..?” என்கிற ஜோல்னாப் பையர்களின் ஒரு கேள்வி சிற்சில வருடங்களுக்கு ஒருமுறை நாம் கேட்க நேர்வதுதான். அவர்களுக்கு பதில் சொல்ல கிடைத்த அற்புத தருணம் இந்தப்படம் பார்த்த அனுபவம்.

இடைவேளைக்குப் பிறகு படத்தில் முன்னாள் காதலர்களாகக் காட்டப்படும் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மட்டுமே ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்தை ஆக்கிரமிக்கிறார்கள். என்னதான் நடிப்பு இமயம், சிகரம்… இன்னபிற இத்யாதிகள் நடித்துக் கொட்டினாலும் ஒன்றரை மணிநேரம் இருவர் முகங்களையே மீண்டும் மீண்டும் பார்க்க நேர்வது அலுப்பான அனுபவத்தையே தரும்.

ஆனால், அந்த ஒன்றரை மணிநேரமும் திரையைவிட்டு இப்படி அப்படி இதில் நம் கண்களை எடுக்க நேர வேண்டுமே..? வாய்ப்பே இல்லை. இடையில் இரண்டுமுறை மட்டும் ‘பிளாஷ்பேக்’ போய்வருகிறார்கள். அதுகூட நம் கருத்துக்கு எட்ட கொஞ்சம்நேரம் ஆகிறது.

சரி… அந்த இரண்டுபேரும் என்னதான் செய்கிறார்கள்..? ஒன்றும் செய்யவில்லை… நிற்கிறார்கள்… நடக்கிறார்கள்… உட்காருகிறார்கள்… எல்லா செயல்களின் போதும் கொஞ்சம் வாய்மொழியாலும், நிறைய உடல் மொழிகளாலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சத்தியமாக இப்படி ஒரு முயற்சி இதுவரை தமிழில் வந்ததில்லை.

வேறு எந்த மொழியில் வந்திருந்தாலும் அது ‘திரில்லர்’ அல்லது ‘ஹாரர்’ வகைப் படங்களில் மட்டுமே சாத்தியம். இப்படியான காதல் வழி(யும்) படங்களில் உரசிக் கொள்ளாத… முத்தமிட்டுக் கொள்ளாத… ஏன் தொட்டுக் கொள்ளாத… (இரண்டு முறை மட்டுமே விஜய் சேதுபதியின் மார்பில் கைவைத்துப் பார்க்கிறார் த்ரிஷா…) உறைந்து போன உணர்வுகளைத் தட்டி எழுப்ப வைக்கும் முதல் திரைக் காதல் இதுதான்..!

காவியங்களாகச் சொல்லப்பட்ட திரைக் காதல்கள் கூட காதலன் போட்டோவை எரித்துக் கரைத்து காபியில் கலந்தோ, புறாவைத் தூது விட்டு பாட்டுப் பாடியோதான் சொல்லப்பட்டிருக்க… நாம் ரசித்துமிருக்கிறோம்… அதாவது கொஞ்சம் டிகாக்‌ஷன் தூக்கலாக… சர்க்கரை துக்கலாக போட்டால்தான் ‘காபி மணக்கும்’ என்கிற விகிதாச்சாரத்தில்.

ஆனால், இதில் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் காதலைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமே இல்லை. வழக்கமான சினிமா பார்க்கும் காதலனாக வரும் விஜய்சேதுபதி, திரிஷ் பயன்படுத்திய பொருள்களைக் கவர்ந்து வந்து ஒரு சூட்கேஸில் போட்டு வைத்துக் கொள்ளும் அளவில்தான் காதல் டிகாக்‌ஷன் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உணர்வுகளால் உயரத்தூக்கி தூக்கி டபரா, டம்ளராக இருவரும் மாறி காதலை ஆற்றுகிறார்கள் பாருங்கள்… ஆகா.. கும்பகோணம் டிகிரி காபி தோற்கும் இந்தக் காதல் மணத்தில்…

விஜய் சேதுபதி ஒரே மாதிரி நடித்தும் அலுக்காத படங்களில் ‘அல்டிமேட்’ இதுதான். அதையேதான் படத்துக்குப் படம் செய்கிறார் என்றாலும் அதுவேதான் இந்தத் திரைக்கதைக்கு உடலாய், உயிராய் அமைந்துபோகிறது. அது என்ன சேதுபதிக்கு வாய்த்த சிறப்போ..?

காதலன் என்றால் கத்தியை எடுத்து கையில் வெட்டிக்கொள்பவனோ, ராத்திரியில் போதையைப் போட்டுவிட்டு வந்து காதலி வீட்டின் முன்னால் ரவுசு பண்ணுபவனோ, சவால்விட்டு வீடு புகுந்து காதலியைத் தூக்கிப் போகிறவனோ இல்லை. அதற்காகக் காதலைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு காலமெல்லாம் காதலை அசைபோட்டு மார்வலி வந்து சாகும் ‘முரளி டைப்’ காதலனும் இல்லை.

காதல் உண்டு… அது காதலிக்கும் தெரியும். ஆனால், சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்திலும், “கக்குடா…” என்று கழுத்தில் கத்தி வைத்தாலும் பதறாமல் மூன்று கடப்பாறையை முழுதாக விழுங்கியவன் போலிருக்கும் அமுக்கமான ‘அராத்து’ காதலன்.

96 Review

96 Review

காதலியைக் காண ஓடிப்போய் அது முடியாமல் அவள் கழுவி ஊற்றியதாகத் தெரிந்தாலும் காதலித்துக்கொண்டு… அட அவளுக்குக் கல்யாணமே ஆகிறது என்று தெரிந்தும் ஓரமாக நின்று அவள் என்ன கலர் புடவை கட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதுவரை பார்த்துவிட்டு வீட்டுக்குப் போய் பாலிடாலோ, பத்தடிக் கயிறோ தேடாமல்…

“அவள்தாண்டா என் காதலி…” என்பதாக அமைதியாக அவளை நினைத்து அடுத்து வந்த காதலையும் கூடப் புறந்தள்ளிவிட்டு திருமணமும் செய்து கொள்ளாமல் இருக்கும் ‘எவர்கிரீன் வெர்ஜின் பையன்’தான் இந்தக் காதலன்.

இவ்வளவு எழுதியதை காட்சிகளால் இல்லாமல் தன் வாய்மொழி, உடல்மொழியால் மட்டுமே உணரவைக்கிறார் சேது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்… (போய்ப் பார்த்தும் ரசியுங்கள்..!)

“என் வீட்ல இன்னைக்கு நைட் தங்கிக்கலாமே..?” என்ற ஒற்றை வரி வேண்டுகோளைக் கூட மென்று முழுங்கி ஏறி அமுக்கித் தண்ணீர் குடித்துக் கேட்டு… காதலியின் கை யதேச்சையாகப் பட்டுவிட்டால் கூட நாணிக் கோணி அந்தத் தப்பு அடுத்த தடவை நடந்துவிடக்கூடாதென்று ஒதுங்கி.. “யப்பா சேது… இது போன்ற முயற்சிகள் உனக்குதான் தோது..!”

சேதுவை விடுங்கள் அவர் நடித்தது கொஞ்சப் படங்கள்தான். ஆனால், த்ரிஷா..? எத்தனைப் படங்களில் எத்தனை மொழிகளில் எத்தனை ஹீரோக்களைக் காதலித்திருப்பார்..? கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டு போகும் திரை வயது அவருக்கு. இப்போது போய் ஒரு படத்தில் அதுவும் அரைக்கிழவனும், கிழவியும் ஆகிற பருவத்தில் காதலைப் பேசி… த்ரிஷாவைப் புதிதாகக் காதலிக்க முடியுமென்றால் அது இந்தப்படத்தில் மட்டும்தான்.

இதற்கு முன்பு கடைசியாக அவரை கௌதம் மேனன் படத்தில் காதலித்தது. ஆனால், அந்தக் காதலும் கூட அந்த ‘ஜெனி’யைப் பார்த்தால் ‘பச்சக்’ என்று முத்தமிடத்தான் தோன்றியது. ஆனால், இதில் வருவது ஹோம்லி ‘ஹனி’.

அடுத்தவன் மனைவியாக, ஒரு குழந்தைக்குத் தாயானவள் தன் கடந்தகாலக் காதலனிடம் எவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு உரிமை மட்டுமே எடுத்துக்கொண்டு… “கல்யாணத்துல கூட சினிமால வர்ர மாதிரி எங்கே நீ வந்து என் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு போயிடுவியோ…”ன்னு நினச்சேன் என்று மருகி… அவன் வந்து போனது தெரிந்து குலுங்கி அழுது… அதிகபட்சம் “என் பக்கத்துல உட்கார்…” என்றும், “இன்னும் கொஞ்ச நேரம் உங்கூட இருக்கிறேன்…” என்றும் சொல்கிற அளவில் மட்டுமே தன் காதலைப் பறை சாற்றுகிற பவித்திரமான காதலியாக… ‘த்ரிஷ்… எவர் ஃபிரெஷ்..!’

நல்லவேளை அவர் கணவனைத் திரையில் காட்டவில்லை. காட்டியிருந்தால் நாமே எழுந்து போய், “ஒழுங்கு மரியாதையா இந்த ரெண்டுபேரையும் சேத்து வச்சிட்டு சிங்கப்பூர் ஓடிப்போயிடு..!’ என்று திட்டியிருக்கக் கூடும்.

இந்த இருவரின் இளவயதுப் பாத்திரங்களில் நடித்திருக்கும் ஆதித்யனும் (இவர் எம்.எஸ்.பாஸ்கரின் புதல்வராம்… நல்ல அறிமுகம்…) அந்த ஆழாக்கு சைஸ் பெண்ணும் கூட நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். உருவப்பொருத்தம் மட்டுமே த்ரிஷாவுக்கும், அந்தப் பெண்ணுக்கும் பொருந்தவில்லை என்பது திருஷ்டிப் பொட்டு..!

மேற்படி பாத்திரங்களை மாத்திரமின்றி தேவதர்ஷினி, (நீண்ட இடைவேளைக்குப் பிறகு) ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் ஏற்றிருக்கும் துணைப்பாத்திரங்களையும் கூட கச்சிதமாக வார்த்து காலத்துக்கும் கொண்டாடப் படவேண்டிய ஒரு காதல் காவியத்தை ‘பிரேமுக்கு பிரேம்’ படைத்திருக்கிறார் பிரேம் (குமார்) .

96 Review

96 Review

அதிகபட்சமாக அவரைப் பாராட்ட வேண்டுமென்றால் இந்த ஒரு படத்துடன் கூட அவர் மனநிறைவு பெற்று ரிடையர் ஆகி விடலாம். காலமெல்லாம் அவரைத் திரைக் காதலர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். (இது சாபமல்ல… மார்க்கண்டேயனாகவே அவர் நிலைக்கத் தரும் வரம்…)

இளையராஜாவுக்கும், எஸ்.ஜானகிக்கும் நன்றி கார்டு டைட்டிலில் போடுவது எத்தனைப் பொருத்தம் என்பதைப் படத்தில் பார்த்து பருகிக் கொள்ளுங்கள். அதிலும் ‘யமுனை ஆற்றிலே…’ பாடலைப் பாடச் சொல்லி அழுத்தக்காரக் காதலன் கேட்க, அவன் அழுத்தத்தை சோதிக்கும் நோக்கிலேயே அந்தப் பாடலைத் தவிர்க்கும் மகா அழுத்தக்காரியாக காதலி டேக்கா கொடுத்துக் கொண்டிருக்க, படம் முடிவதற்குள் எங்கோ ஓரிடத்தில் த்ரிஷா அந்தப்பாடலைப் பாடிவிடுவார் என்பது நமக்கும் புரிகிறது. ஆனால், நாம் எதிர்பார்க்கும் இடங்களில் இல்லாது ஒரு எதிர்பாராத இடத்தில் அதை இட்டு நிரப்புவதும் ‘டைரக்டரின் அழுத்தம்..!’  

இதெல்லாம் ஒருபுறமிருக்க… விஜய் சேதுபதியை புகைப்படக் கலைஞராகக் காட்டி அதற்காக புலன்களுக்கினிய ஒரு பாடலை எடுத்திருப்பது காட்சிக் கவிதை… (இதற்காக ‘இயற்கை’க்கு வேறு தனியாக நன்றி கார்டு போடுகிறார்கள்…) தவிர, விஜய் சேதுபதிக்கும் அவர் மாணவியர்களுக்குமான புரிந்து கொள்ளல்கள், இளவயது சந்தோஷத்தை மீட்டெடுக்கும் விதமாக 22 வருடங்கள் கழித்துப் பார்க்கும் விஜய் சேதுபதிக்கு பள்ளி வாட்ச்மேன் ஜனகராஜ் வாதுமைக் கொட்டைகளைக் கொண்டுவந்து உடைத்துத் தருவது என்று திரைக் கதைப் பேப்பர்களையும் கவிதை புத்தகமாக்கியிருக்கிறார் பிரேம்.

ஒளிப்பதிவாளர் ‘சண்முகசுந்தரம்’, இசையமைப்பாளர் ‘கோவிந்த் வசந்தா’ என படத்தின் தரத் தராசில் இருவரும் சரிசமமாகப் பங்களித்திருக்கிறார்கள்.

‘ஒரு ஜோடியின் காதலை அவர்கள் அறியாமல் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே..?’ என்று ஒருகட்டத்தில் நமக்கு எழுகிற குற்ற உணர்ச்சியே இந்தப் படைப்பின் வெற்றி..!

இவ்வளவு ‘ஹைப்’ கொடுத்தும் இந்தப் படத்தை ரசிக்க முடியுமென்பதுதான் படத்தின் விதி. இந்தப் படத்தைப் பார்த்த ஒருவர் இன்னொரு முறை பார்க்க விரும்பாவிட்டால் அவர் விஜய் சேதுபதியை விடவும், ‘காதல் கூடா கல்லுளிமங்கனா’கத்தான் இருப்பார் என்பது உறுதி.

96 – நூறுக்கு..!

– வேணுஜி