April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சங்கத் தமிழன் திரைப்பட விமர்சனம்

சங்கத் தமிழன் திரைப்பட விமர்சனம்

By on November 19, 2019 0 635 Views

ஆனானப்பட்ட தேசிய விருது நடிகர் மோகன்லாலுக்கே அதுவும் இந்த வயதில் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கும்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு ஆசை வந்தால் தப்பில்லைதானே..? ஆமாம்… இது விஜய் சேதுபதி நடித்திருக்கும் முழுநீள கமர்ஷியல் படம்.

அதிலும் தமிழில் சாகாவரம் பெற்ற திரைக்கதையான பாட்ஷா போன்ற ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட கதையானதால் மனதுக்குள் எளிதாக இடம்பிடித்து விடுகிற கதை.

சூரியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்விஜய் சேதுபதிக்கு பெரும் தொழிலதிபரின் மகளான ராஷி கண்ணாவின் தொடர்பு கிடைத்து காதலாக மாறுகிறது. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கோபப்படும் ராஷி கண்ணாவின் அப்பா, விஜய் சேதுபதியை பார்த்ததும், அதிர்ச்சியடைய விஜய்சேதுபதியின் பிளாஷ்பேக் சம்பவங்கள் விரிகின்றன.

விஜய் சேதுபதி எப்போதுமே பக்கத்து வீட்டு அங்கிள் போல அசால்டாக நடித்துவிட்டு போக கூடியவர். அதுவும் இப்படி ஒரு கமர்ஷியல் படம் என்றால் சொல்லவா வேண்டும், ரொம்ப சாதாரணமாக நடித்திருப்பவர், மாஸ் காட்சிகளைக் கூட தனது ஸ்டைலில் இயல்பாக கடந்து போகிறார். சில படங்களில் மாஸ் காட்டலாமா, வேணாமா என்று யோசித்த விஜய் சேதுபதி, இதில் ஓபனிங் சண்டைக்காட்சி, ஓபனிங் பாடல் என்று முழுவதுமாக இறங்கி விளையாடியிருக்கிறார். இருந்தாலும், ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றுகிறது.

விஜய் சேதுபதியின் இரட்டை வேடத்தில் இருக்கும் சஸ்பென்ஸை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, படத்தை முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுத்திருப்பதால் போரடிக்கவில்லை.

முதல் பாதியில் ராஷி கண்ணா, இரண்டாம் பாதியில் நிவேதா பெத்துராஜ் என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவருக்கும் கமர்ஷியல் கதாநாயகிகளின் வேலை தான்.

அதிகம் பேசாமல், எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைக்கும் சூரி, தொட்டி ஜெயா சிம்புவாக சில நிமிடங்கள் வந்து பல மணி நேரங்கள் சிரிக்க வைக்கிறார்.

நாசர் எப்போதும் போல ‘நச்’சர். வில்லன் அஷுதோஸ் ராணா மற்றும் ராஷி கண்ணாவின் அப்பாவாக நடித்திருப்பவர்கள் ஒட்டாமல் போகிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு மெருகூட்டியிருக்கிறது. விவேக் – மெர்வின் இசையில் ‘கமலா’ ஓகே. பின்னணி இசை கமர்ஷியல்லி கிரான்டட்.

விஜய்சேதுபதியை எப்படிக் காட்ட வேண்டுமென்று நினைத்தாரோ அதைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் விஜய்சந்தர்.

சங்கத் தமிழன் – சந்தோஷம்..!