‘8 தோட்டாக்கள்’ படத்தில் வெற்றியின் இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது ‘ஜீவி’ படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார்.
அவர் கூறும்போது, “முதல் மற்றும் முக்கியமான விஷயம், இந்த ஸ்கிரிப்ட், நாம் ஒருபோதும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. என்னை பொருத்தவரை, “ஜீவி” படத்தை நான் ஒரு ‘பேண்டஸி-த்ரில்லர்’ என்று கூறுவேன். ஆனால் சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்தவர்களால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் படம் கொண்டிருந்த புதிய மற்றும் தனித்துவமான கூறுகளால் மிகவும் உற்சாகமடைந்தனர்.
அடுத்து என்னை கவர்ந்த விஷயம் எனது கதாபாத்திரம், இது “8 தோட்டாக்கள்” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உண்மையில், நான் பல்வேறு கதைகளை கேட்டேன், ஆனால் அவை எல்லாமே ஒரே மாதிரியாக, என் அறிமுக படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை ஒரு ஆச்சரியமான அவதாரத்தில் அவரது அறிமுகப் படம் 8 தோட்டாக்கள் காட்டியிருந்தது. அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் ஏதும் ஜீவியில் இருக்குமா? எனக் கேட்டதற்கு, வெற்றி கூறியதாவது, “உண்மையில், அதுபோன்ற ஒப்பீடுகளை என்னால் இங்கு கொண்டு வர முடியவில்லை. உண்மையில், ரோகிணி மேடம் போன்ற மூத்த கலைஞர்களின் மிகச்சிறந்த நடிப்பை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை.
ஜீவி படப்பிடிப்பில் இருந்த எல்லோரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரோகிணி மேடம், கிளிசரின் பயன்படுத்தாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார். அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மயிற்க்கூச்செரியும் தருணமாக அமைந்தது. ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, இயக்குனர் வி.ஜே.கோபிநாத், ஒரு தயாரிப்பாளராக ‘மணி’ கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரத்துக்கும் கலைஞர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம் என வெளிப்படையாக சொன்னார். ஏனெனில் கதாசிரியர் பாபு தமிழ் முன்னரே நடிகர் கருணாகரன் மட்டுமே இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியும் என தீர்மானித்திருந்தார். எனவே, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவான மற்றும் கணிசமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்..!” என்றார்.
வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.